under review

தி. முத்து கண்ணப்பர்

From Tamil Wiki
தி. முத்து கண்ணப்பர்
தி. முத்து கண்ணப்பர் (நன்றி: tamilvu)

தி. முத்து கண்ணப்பர் (அவ்வைதாசன், இலக்கணப்புலவர்) ( T. Muthu Kannappar) (ஜூன் 4, 1915 - 2009) மரபுக்கவிஞர், எழுத்தாளர், தமிழ்ப்பேராசிரியர், காந்தியவாதி, அரசியல்வாதி. எழுத்துச் சீர்மை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தமிழில் பிழைகள் இன்றி எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதினார். சங்கப்பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றிற்கான உரைகள் எழுதினார். நெய்தல்திணை சார்ந்த சங்கப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்தார். தமிழ் இலக்கணத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

தி. முத்து கண்ணப்பர் தமிழ்நாட்டின் சென்னை நகரிலுள்ள திருவான்மியூரில் முத்துச்சாமி, பாக்கியம் அம்மாள் இணையருக்கு ஜூன் 4, 1915-ல் பிறந்தார். இயற்பெயர் பார்த்தசாரதி. இவரின் மூதாதையர்கள் சென்னையிலுள்ள கோவளம் என்னும் கிராமத்தில் வாழ்ந்தனர். கண்ணப்பரின் முப்பாட்டனார் முனுசாமி. பாட்டனார் சின்னச்சாமி. தந்தை முத்துச்சாமி ராயபுரத்தில் குடியேறினார். கண்ணப்பர் நான்கு வயதில் தாயை இழந்தார். தந்தையிடமிருந்து நாட்டுப்புறப்பாடல்கள், கம்பராமாயணம் ஆகியவை கற்றார்.

முத்து கண்ணப்பர் தனித்தமிழ் வித்துவான் படிப்பை முடித்தார். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். சங்க இலக்கியம் பற்றி ஆராய்ந்து ஆய்வேட்டை முழுமையாக தமிழில் முதன்முதலாகச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

தனிவாழ்க்கை

தி. முத்து கண்ணப்பர் புதுவை வெம்பா கீரப்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சியை மணந்தார்.

ஆசிரியப்பணி

தி. முத்து கண்ணப்பர் செங்கற்பட்டில் ஆசிரியப்பயிற்சி பெற்றார். நாற்பது ஆண்டுகள் ஆசிரியப்பணி ஆற்றினார். தொடக்க நிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். தமிழ்க்கல்லூரி முதல்வர். அரசுக்கல்லூரிகளில் தமிழ்த் துணைப்பேராசிரியர், தமிழ்ப்பேராசிரியர், முதல்வர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் சார்பாக கார்கில் போருக்கு நிவாரணத்தொகை வழங்குதல்

தி. முத்து கண்ணப்பர் காந்தியிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றார். எப்போதும் வெண்மைக் கதர் அணிபவராக இருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பக்தவத்சலம் முதலமைச்சர் இருந்தபோது 1958 முதல் 1964 வரை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவராக இருந்தார். முதியோர் கல்வித்திட்டத்தில் எமர்ஜென்சி காலத்தில் பாடுபட்டார்.

பொறுப்புகள்

  • சாகித்ய அகாதமி (தமிழ்) ஆலோசனைக்குழு உறுப்பினர்
  • சென்னை தொலைக்காட்சி ஆலோசனைக்குழு உறுப்பினர்
  • சென்னை பல்கலைக்கழக பேரவை கல்விக்குழு உறுப்பினர்
  • தமிழ்ப் பல்கலைக்கழக அகராதிக்குழு உறுப்பினர்
  • ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சுவாமி விவேகானந்தர் ஆங்கில நூல்களின் தமிழாக்க குழுவின் சிறப்பாசிரியர்
  • சாரணர் இயக்கம் பற்றிய ஆங்கிலச் சொற்களின் தமிழாக்க குழுவின் தலைவர்
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 'பாரதியார் அறக்கட்டளை' ஆய்வுப்பேராசிரியர்

இலக்கிய வாழ்க்கை

தி. முத்து கண்ணப்பர் 1985இல் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து விருது பெறுகிறார்.

அவ்வைதாசன் என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழில் நானூறுக்கும் மேற்பட்ட இலக்கிய, வரலாற்று, சமயக் கட்டுரைகள் எழுதினார். சங்கப்பாடல்களில் நெய்தல் திணைக்கான உரைகள் எழுதினார். மீனவர்களின் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்தார்.

விருது

  • முத்தமிழவேள் பட்டம்
  • நெய்தல் இலக்கியச் செம்மல் பட்டம்
  • பாரத சாரண சாரணியர் சங்கத்தின் 'வெள்ளி வேழம்' விருதை 1989-ல் அப்போதைய ஜனாதிபதியிடமிருந்து பெற்றார்.
  • சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது
  • தமிழக அரசின் திரு.வி.க விருது

நூல் பட்டியல்

  • சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம்
  • கடற்கரைக் காதலர் (நெய்தல் திணைப்பாடல்கள் விளக்கம்)
  • தமிழ் எழுதப் படிக்க எளிய முறை
  • திருக்குறள் சோலையில் சில தேன் துளிகள்
  • கவிதைகள் உணர்த்தும் சில கருத்துக்கள்
  • தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்
  • பாரதியும் சமயமும்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jan-2026, 14:16:49 IST