under review

திரைலோக்கியநாதர் கோயில்

From Tamil Wiki
திரைலோக்கியநாதர்

திரைலோக்கியநாதர் கோயில் (திருப்பருத்திக்குன்றம் ஜீனசுவாமி கோயில்) (பொ.யு. 6--ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) காஞ்சிபுரத்தில் அமைந்த சமணக் கோயில். இக்கோயிலானது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

இடம்

காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது.

தூண்கள் (திரைலோக்கியநாதர் கோயில்)

வரலாறு

இது சமண சமயத்தின் திகம்பம்பர பிரிவைச் சேர்ந்த கோயில். திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு பொ.யு. 556-ல் கட்டினார். `வர்த்தமானீஸ்வரம்’ என்றும் அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில், பிற்கால சோழ மரபைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டது. 1387--ம் ஆண்டு விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. விஜயநகர மன்னரின் அமைச்சரான எரிகப்பா என்பவரால் சங்கீத மண்டபம் என அழைக்கப்படும் இசை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அமைப்பு

இந்தக் கோயிலுடன் சந்திரபிரபா கோயிலைச் சேர்த்து இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியானது ஜீன காஞ்சி என அழைக்கப்படுகிறது.

கட்டிடக்கலை

இந்தக் கோயிலானது திராவிடக் கட்டிடக்கலையில், மூன்று கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்று சன்னதிகள் உள்ளன. அதில் மகாவீரர் சந்நிதி மையத்தில் உள்ளது. 24-வது தீர்த்தரங்கரான லோகநாதரின் உருவம் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. நேமிநாதர் நெற்கில் உள்ளார். மூன்று புனித வெண்கலச் சிலைகள் தற்போதுள்ள கருவறை வட்ட வடிவப் பின்புறத்தைக் கொண்ட `தூங்கானை மாடம்' எனும் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரது கருவறைகள் கொண்ட கட்டட அமைப்பு சமணத்தில் `திரைலோக்கியநாதர் கோயில்' எனப்படுகிறது. இந்த மூன்று கருவறைகளுள் மகாவீரர் கருவறை காலத்தால் முந்தையது. வர்த்தமான தீர்த்தங்கரர் கருவறைக்கு வடக்கிலுள்ள புஷ்பதந்த தீர்த்தங்கரர் கருவறையும் வட்ட வடிவமாகக் காணப்படுகிறது. தென்புறத்தில் சிறிய அளவில் தரும தேவியின் கருவறை காணப்படுகிறது. கருவறைக்கு முன்னுள்ள முன் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்திருக்கிறது.

திரிகூட பஸ்தி
முனிவர்கள்

திரிகூட பஸ்தி என அழைக்கப்பெறும் இரண்டாவது தொகுதியில் பத்மபிரபா, வசுபூஜ்யர், பார்சுவதேவர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களுக்கும் அர்த்தமண்டபம், முகமண்டபங்களுடன் கூடிய தனிக் கருவறைகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. நீள்சதுர வடிவமுள்ள இவற்றுள் பார்சுவதேவர் கருவறை சிறியதாக, மற்ற இரண்டு கருவறைகளுக்கு முன்புள்ள மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது. இவை பொ.யு. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ரிஷபதேவர் கருவறை, சாந்தி மண்டபம்

பிரகாரச்சுவரினை ஒட்டி வடக்குபக்கத்தில் ரிஷப தேவர் கருவறையும், அதற்கு முன்பாக சாந்தி மண்டபம் என்னும் மண்டபமும் உள்ளன. பொ.யு. 1234-ல் இந்த மண்டபம் மூன்றாம் இராசராச சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை ஒட்டி பின்பகுதியில் ரிஷபநாதருக்கென தனிக் கருவறை பிற்காலத்தில் கட்டப்பட்டது

பிரம்மதேவர் கருவறை
பிரம்மதேவர் கருவறை

பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சீதள நாதரின் யக்ஷனாகிய பிரம்மதேவருக்குத் தனியாக ஒரு கருவறை உள்ளது.

முனிவர் கருவறைகள் (முனிவாசம்)

திருச்சுற்றுமதிலின் வடக்குச்சுவரை ஒட்டி ஐந்து சிறிய கருவறைகளும், அவற்றிற்கு முன்பாக மண்டபமொன்றும் உள்ளன. இவை திருப்பருத்திக்குன்றத்துக் கோயிலுடன் தொடர்புடைய ஐந்து துறவியருக்கென ஏற்படுத்தப்பட்டது. இவற்றுள் இரண்டு கருவறைகள் மல்லிசேனருக்கும், புஷ்பசேனருக்கும், எஞ்சியுள்ளவை சந்திரகீர்த்தி, அனந்தவீர்யாச்சாரியார் முதலியோருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். பொ.யு. 16-ம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டவையல்ல.

திருச்சுற்று மதில் கோபுரம்
திருச்சுற்று மதில், கோபுரம்

இக்கோயில் உயரமான திருச்சுற்று மதிலையும், அதன் கிழக்குப்புறத்தில் மூன்று தளங்களையுடைய கோபுர வாயிலையும் பெற்றது. இந்த மதில் அழகிய பல்லவன் எனும் காடவ சிற்றரச பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. பொ.யு. 13--ம் நூற்றாண்டினைச் சார்ந்த சாசனத்தில் இப்பெயரைக் குறிக்கும் வரிவடிவம் உள்ளது. திருச்சுற்று மதிலின் அடிப்பகுதியில் மூன்றாம் இராசசோழனது கல்வெட்டொன்று உள்ளது.

இந்த மதிலின் கிழக்குப்பகுதியில் மூன்று தளங்களையுடைய கோபுரம் உள்ளது. இதன் அடித்தளம் கருங்கல்லாலும் கொடுங்கைக்கு மேலுள்ள பகுதி செங்கல், சாந்து ஆகியவற்றாலும் கட்டப்பட்டது. ஆறுவரிசைக் கற்களைக் கொண்ட இதன் அடித்தளத்திற்கு மேலுள்ள சுவர்ப்பகுதியினை அரைத்தூண்கள் அலங்கரிக்கிறது. கொடுங்கையின் வெளிப்பகுதியில் கூடு அமைப்புகளும், அவற்றினுள் தீர்த்தங்கரர்களது சிற்றுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள தளங்களில் சுதை வடிவங்களும், கூடம், சாலை எனப்படும் சிறிய கோயில் உருவங்களும் காணப்படுகின்றன. இந்தகோபுரம் புஷ்பசேன வாமனாச்சாரியாரால் கட்டப்பட்டது.

குராமரம்
குராமரம், முனிவர்கள் பீடங்கள்

இக்கோயிலின் தலவிருட்சம் குராமரமாகும். இந்த அதிக உயரமின்றி வர்த்தமானர் கருவறையின் பின்புறம் காணப்படுகிறது. இதனைப் பற்றிய பாடல் ஒன்றும் இம்மரத்தைச் சுற்றியுள்ள பீடத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த குராமரம் அதிக உயரமாக வளராமலும், குட்டையாகக் குறுகாமலும் ஒரே தன்மையுடையது என்றும், இது அரசனது செங்கோலைக் காக்கும் திறனுடையது எனவும், தர்மத்தின் உறைவிடமாகத் திகழ்வது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அருந்தவ முனிவர் மூவரது உறைவிடங்களுக்கு முன்பாக இது நிற்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரத்தைச் சுற்றியுள்ள மேடை பொ.யு. 13--ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. உருவாக்கியது பல்லவ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கனாக இருக்க வேண்டும். இம்மேடையின் கீழ்ப்பகுதியில் முனிவர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலுள்ள மேலும் இரண்டு பீடங்களில் இதனைப் போன்ற இரண்டு முனிவர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று அனந்தவீர்ய வாமனாச்சாரியாருக்காகத் தோற்றுவிக்கப்பட்டது என கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலை நிர்வகித்து வந்த மூன்று அறவோர்கள் இங்குள்ள குராமரத்தினடியில் தவம் புரிந்தனர் எனக் கருதப்படுகிறது. அவர்களுள் ஒருவரே அனந்த வீர்யாச்சாரியாராவார்.

அருணகிரிமேடு

கோயிலுக்குத் தென்மேற்கிலுள்ள குளத்தினை ஒட்டியுள்ள இடம் அருணகிரிமேடு என அழைக்கப்படுகிறது. இங்கு செங்கல்லால் கட்டப்பட்ட பெரிய மேடையில் ஐந்து பீடங்கள் கல்லினால் நிறுவப்பட்டிருக்கின்றன. தாமரை மலர் போன்ற அமைப்பில் வட்ட வடிவ பொகுட்டினையுடையதாக இவை செதுக்கப்பட்டிருக்கின்றன. நடுவிலுள்ள பீடம் சற்று பெரியதாகவும், அதனைச் சுற்றியுள்ளவை சிறியதாகவும் திகழ்கின்றன. இவற்றுள் மூன்றினில் கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவை புஷ்பசேனர், அனந்தவீர்ய வாமனர், புஷ்பசேன வாமனாச்சாரியார் ஆகியோரது பெயர்களைக் குறிப்பவையாகும். எஞ்சிய இரு பீடங்களில் கல்வெட்டுக்கள் இல்லையெனினும், இவை சந்திர கீர்த்தி முனிவரையும், மல்லிசேன வாகனரையும் குறிப்பவையாக இருக்க வேண்டும். திருப்பருத்திக் குன்றத்துக் கோயிலைக் கண்காணித்து வந்த இந்த துறவியர் முக்தியடைந்த பிறகு அவர்களது பூதவுடல் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை நினைவூட்டும் வகையில் இங்கு பீடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. கோயிலின் திருச்சுற்று மதிலை ஒட்டி வடக்கில் இந்த முனிவர்களை வழிபாடு செய்யும் வகையில் ஐந்து கருவறைகள் (முனிவாசம்) கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

பார்சுவநாதர் (திரைலோக்கியநாதர் கோயில்)

சிற்பங்கள்

வர்த்தமானர், புஷ்பதந்தர், பிரம்மதேவர், தருமதேவி, முனிவர் சிற்பங்கள், சந்திரகீர்த்தி, அனந்தவீர்யாச்சாரியார் புஷ்பசேனர், மல்லிசேனர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்திலுள்ள சிற்பங்கள் அனைத்தும் பொ.யு. 14--ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். பொ.யு. 16--ம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்சுவ நாதர் தனிச்சிற்பங்கள் உள்ளன. வசுபூஜ்யர் கருவறைக்குப்பின்பகுதியில் நின்றகோலத்திலுள்ள பார்சுவநாதர் சிற்பமும், அமர்ந்த நிலையிலுள்ள மற்றொரு தீர்த்தங்கரர் திருவுருவமும் காணப்படுகின்றன.

படிமங்கள்

இக்கோயிலில் உலோகத்தால் செய்யப்பட்ட இறைத்திருமேனிகள் உள்ளன. இவை பார்சுவநாதர், மகாவீரர், அனந்தநாதர், பாகுபலி, பிரம்மயக்ஷன், அவரது துணைவியராகிய பூரணபுஷ்கலை, சர்வானயக்ஷன், தரணேந்திரன், மாதங்கள், தர்மதேவி, பத்மாவதி, சித்தாயிகா, ஜுவாலமாலினி சரஸ்வதி, நவதேவதைகள் முதலிய பஉலோகப் படிமங்கள் உள்ளன. இந்த படிமங்கள் பொ.யு 18 - 20--ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சார்ந்தவை.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (பொ.யு. 700-728) மற்றும் அதற்குப் பின் ஆண்ட இடைக்கால சோழ மன்னனர்களான இராசேந்திர சோழன் (பொ.யு. 1054-1063) முதலாம் குலோத்துங்க சோழன் (பொ.யு. 1070-1120) விக்கிரம சோழன் (பொ.யு. 1118-1135) மற்றும் விஜய நகர பேரரசரான கிருஷ்ணதேவராயன் (பொ.யு. 1509-1529) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. சோழர் மற்றும் விஜயநகர கல்வெட்டுகள் கோவிலுக்கு அளித்த கொடைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்திலுள்ள செப்புப் பட்டையங்களுள் காலத்தால் முந்தியது இந்த கோயிலுக்குத் தானம் அளித்த செய்தியைக் கூறும் பள்ளன் கோயில் செப்பேடுகள் உள்ளன.

திரைலோக்கியநாதர் கோயில் சிலை
கல்வெட்டு/செப்பேடு செய்திகள்

1. பொ.யு 556-ல் பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் (சிம்ம விஷ்ணு) வர்த்தமானேஸ்வரர் கோயிலின் வழிபாட்டுச் செலவுகளுக்காக, வெண்குறை கோட்டத்திற்குட்பட்ட பெருநகர் நாட்டுப் பிரிவினைச் சார்ந்த அமண் சேர்க்கை (ஸ்ரமணா சிரமம்) என்ற ஊரினையும், தாமர் (தாமல்) என்ற ஊரில் பதினாறரை பட்டி நிலமும் பள்ளிச்சந்தமாக அளித்ததாக இச்செப்பேடுகள் கூறுகின்றன.

2. முதலாம் குலோத்துங்கனது ஆட்சியில் (பொ.யு 1116) கைதடுப்பூர் என்ற ஹஸ்திவாரண சதுர்வேதி மங்கலத்துச் சபையோர்கள் திருப்பருத்திக் குன்றத்திலுள்ள ரிஷி சமுதாயத்தவர்களுக்குப் பயன்படும் வகையில் கால்வாய் ஒன்று வெட்டுவதற்காக. சில நிலங்களை இறையிலியாக்கி விற்றுக் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலத்தை விற்றதிலிருந்து பெறப்பட்ட பணம் கால்வாய் வெட்டுவதற்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

3. குலோத்துங்கனது மைந்தனாகிய விக்கிரம சோழனது பதிமூன்றாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 1131) விற்பேடு நாட்டைச் சார்ந்த விளாசார் எனப்படும் குவலையதிலாத சதுர்வேதி மங்கலத்துச் சபையினர் திருப்பருத்திக் குன்றத்திலுள்ள கோயிலுக்கு சில நிலங்களை 25 கழஞ்சு பொன் விலைக்குக் கொடுத்திருக்கின்றனர்.

4. விக்கிரம சோழனது பதினேழாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 1135) திருப்பருத்திக்குன்றத்திலுள்ள சில பள்ளிச்சந்த நிலங்கள் ஆரம்பநந்தி என்பவருக்கு விலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

5. மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியில் (பொ.யு. 1199) மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பவர் தமது சமய குருவாகிய சந்திரகீர்த்தி தேவரின் நலத்திற்காகவும், வர்த்தமானர் கோயிலைச் சார்ந்த துறவியருக்காகவும் எயிற்கோட்டத்திலுள்ள அம்பை என்னும் கிராமத்தில் இருபது வேலி நிலங்களைக் கோயிலுக்குத் தானமாக அளித்திருக்கிறார்.

6. மூன்றாம் இராசராசனது ஏழாவது ஆட்சியாண்டில் (பொ.யு.1223) வர்த்தமானர் கோயிலின் வழிபாட்டுச் செலவுகளுக்கும் கோயிலுடன் தொடர்புடைய துறவியருக்கும் சில நிலங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த மன்னனது ஆட்சியாண்டில் (பொ.யு. 1234) தியாக சமுத்திர பட்டையார் என அழைக்கப்பெற்ற வீமரசர் என்பவர் செம்பொற்குன்றாழ்வாராகிய வர்த்தமான மகாவீரருக்கு விற்பேடு நாட்டைச் சார்ந்த காணிப்பாக்கம் என்ற ஊரில் நெடுங்காலமாகப் பயிரிடப்படாமல் கிடந்த நிலங்களைப் பள்ளிச்சந்தமாக அளித்திருக்கிறார்.

7. இந்த வீமரசருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து வந்த பணியாளாகிய வீமவடுகன் என்பவர் பொ.யு. 1236--ம் ஆண்டில் இக்கோயிலில் தினமும் காலையில் நடைபெறும் திருவாராதனைக்கென ஒரு குறிப்பிட்ட அளவு நெல்லைக் கொடுத்திருக்கிறார். மேலும் கோயிலின் தென்கிழக்கு மூலை யிலுள்ள தானிய சேமிப்பு அறையையும் இந்த வீமவடுகனே கட்டியிருக்கிறார்.

8. பதிமூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முன்பிருந்த திருச்சுற்று மதில் உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இதனை அழகிய பல்லவன் என்னும் கோப்பெருஞ்சிங்க மன்னன் கட்டியிருக்கிறான்.

9. இக்கோயில் வளாகத்தினுள் காணப்படும் கிணறு செங்கதிர் செல்வன் என்னும் வணிகரது முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

10. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 1517) முசிறுப்பாக்கம் என்ற திருமலைதேவி அக்கிரகாரத்திலுள்ள மக்களுடைய வசதிக்காக, திருப்பருத்திக் குன்றத்திலுள்ள கோயிலுக்குச் சொந்தமான கோதுகை என்னும் ஊரைக்கொடுத்து விட்டு, அதற்குப்பதிலாக உவச்சேரி என்ற கிராமம் பெறப்பட்டுள்ளது.

11. பொ.யு. 1518-ல் இந்த கோயிலைக் கண்காணித்து வந்த அனந்த வீர்யமாமுனிவரும், கோயிலின் தானத்தாராகிய பொற்குன்றங்கிழார் தேவாதிதேவன் என்பவரும் காஞ்சி புரத்திலுள்ள சேவகப்பெருமாள் என்பவரின் மைந்தனாகிய அரியரபுத்திரருக்கு ஒரு வீட்டுமனையை விலைக்குக் கொடுத்துள்ளனர்.

13. இவற்றுள் ஒருசாசனம் ஜினகாஞ்சியிலுள்ள த்ரைலோகிய நாதருக்கு வழிபாட்டுச் செலவிற்காக 2000 குழி நிலத்தை சர்வமானியமாகக் கொடுத்தது பற்றிக்கூறுகிறது. இந்த நிலங்கள் பற்காலமேடு பள்ளம், பஞ்சம்பட்டடை, பள்ளப்பட்டடை, சீறணம், அம்பையார்குண்டு, கோயிலாம்பட்டி, சிகப்புக்குண்டு, வழங்கோயில் ஆகிய இடங்களில் இருந்திருக்கின்றன.

திருப்பருத்திக் குன்றத்துடன் தொடர்புடைய முனிவர்கள்

  • வஜ்ர நந்திக்குரவர் (பொ.யு. 556)
  • சந்திரகீர்த்தி தேவர் (பொ.யு. 1199)
  • அனந்த வீர்யாச்சாரியார் (பொ.யு. 1518)
  • மல்லிசேனவாமனாச்சாரியார்
  • புஷ்பசேன வாமனாச்சாரியார்

சங்கீத மண்டபம்

திரைலோக்கிய நாதர் கோயில், திரிகூடபஸ்தி ஆகியவற்றின் முகமண்டபங்களுக்கு முன்பாக பெரிய அளவில் 61 அடி நீளமுள்ள மகாமண்டபம் இசை நிகழ்ச்சிகளுக்காக அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளைக் கொண்ட இருபத்தினான்கு தூண்கள் உள்ளன. இத்தூண்கள் அனைத்தும் விஜயநகர கலைப்பாணியில் உள்ளன.

இந்த சங்கீத மண்டபத்தை இரண்டாம் புக்கன் என்னும் விஜயநகர மன்னது அமைச்சராகிய இருகப்பா என்பவர் பொ.யு. 1387-ல் கட்டினார். இருகப்பாவின் சமயகுருவாகிய புஷ்பசேனரது விருப்பத்திற்கிணங்க ஏற்படுத்தப்பட்டது. இவரது சிற்பம் ஒன்று சங்கீதமண்டபத் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் கூரையில் ஏராளமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தானிய சேமிப்பு அறை

பொ.யு. 1236-ல் மூன்றாம் இராசராசன் காலத்தில் தானிய சேமிப்பு அறை கட்டப்பட்டது. தற்போது மடப்பள்ளியாக விளங்குகிறது.

திரைலோக்கியநாதர் கோயில் ஓவியங்கள்

ஓவியங்கள்

கோயில் மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் முக்கியமாக சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர், யக்ஷி ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் உள்ளன. கோயிலின் நுழைவு வாயில் மற்றும் சன்னதிக்கு நடுவே துவாஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடிமரம் உள்ளது. கோயிலின் விதானத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டு, அதில் தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டும் உள்ளன. இதில் பெரும்பாலான ஓவியங்கள் கிருஷ்ணணின் வாழ்க்கைக் கதையை விவரிக்கின்றன.

பராமரிப்பு

திரைலோக்கியநாதர் கோயிலானது 1991 வரை 600 ஆண்டுகளாக பரம்பறை அறங்காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page