under review

திருவேங்கடசுவாமி

From Tamil Wiki

திருவேங்கடசுவாமி (திருவேங்கடநாத சுவாமி) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவேங்கடசுவாமி மாதை (மாத்தூர்) எனும் ஊரின் பிறந்த வேங்கடேந்திரன். இராகவானந்தர் எனும் குருவின் அருளால் திருவேங்கடசுவாமி ஆனார். பிராமண குடும்பத்தில் பெருமாளைய்யரின் மகனாகப் பிறந்தார். திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், சொக்கநாத நாயக்கர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் திருநெல்வேலி கயத்தாரில் காரியஸ்தராக இருந்தார். திருவாரூர் வைத்தியநாத தேசிகர், அந்தகக்கவி வீரராகவ முதலியார் ஆகியோர் இவரின் ஆதரவைப் பெற்றனர்.

இலக்கிய வாழ்க்கை

திருவேங்கடசுவாமி இராகவானந்தர் எனும் குருவின் அறிவுரைப்படி 'பிரபோத சந்திரோதயம்' என்ற வடமொழி நூலை மெய்ஞான விளக்க நூலாகச் செய்தார். இதில் உற்பத்திச்சருக்கம், மோகன் அரசாட்சிச் சருக்கம், அவித்தியாபுரச்சருக்கம் முதல் பிரயோதன் முடிசூட்டுச் சருக்கம் வரை நாற்பத்தெட்டுச் சருக்கங்கள் உள்ளன. பாயிரம் உட்பட நாற்பத்தியெட்டு சருக்கங்களிலும் இரண்டாயிரத்து நூற்றிப்பன்னிரெண்டு விருத்தங்கள் உள்ளன.

விவாதம்

பிரபோத சந்திரோதயத்தை எழுதியது திருவேங்கடநாதசுவாமி அல்ல, திருவாரூர் வைத்தியநாத தேசிகர் என்றும் சிலர் கருதுவர்.

பாடல் நடை

  • பிரபோத சந்திரோதயம்

நீர்கொண்ட பெருக்கினைவெங் கானலிற் கண்டாற்போ
னெடுவிசும்பு முதனிலநீ ரொன்றினிடத் தொன்று
வேர்கொண்ட மூவுலகு மதுதேரா தார்க்கு
மெய்யாகித் தேர்ந்தளவின் மீண்டுமவை பொய்யாம்
தார்கொண்ட பணியுருப்போ லன்னிபிடா னந்தத்
தாணுகி நிருமலமாய்த் தழைத்தோங்கு மொளியாய்
ஏர்கொண்ட வாத்துமபோ தந்தனையே வணங்கி
யிதயகம லத்திருத்தி யெப்போதும் வாழ்வாம்

  • விருத்தம் (திருவேங்கடசுவாமி பற்றியது)

போதத் தமிழ்க்கும் வடகலைக்கும்
புலவோர் தமக்கும் பொருள் விரித்துச்
சீதைக் கிறைவ னெனநீதிச்
செங்கோல் செலுத்தித் திசைபுரந்து
வேதப் பனுவன் மெய்ஞ்ஞான
விளக்கா லுலகை விளக்குமெங்கள்
மாதைத் திருவேங் கடநாத
மறையோன் வாழி வாழியவே.

நூல் பட்டியல்

  • பிரபோத சந்திரோதயம்
  • ஞானசோபனம்
  • கீதாச்சாரத்தாலாட்டு

உசாத்துணை


✅Finalised Page