under review

திருவானைக்காவல் ராஜராஜேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
ராஜராஜேஸ்வரர் கோயில் கோபுரம்

திருவானைக்காவல் ராஜராஜேஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள சோழர் காலத்தைய சைவ ஆலயம்.

ஆலய அறிமுகம்

திருவானைக்காவல் ராஜராஜேஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவராக சிவலிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோவில் தற்போது காஞ்சி சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தலபுராணம்

ராஜராஜேஸ்வரர் கோயில் பிரகாரம்

மூலவர் ராஜராஜேஸ்வரரை இந்திரன் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள பஞ்சமுக லிங்கத்தை காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

இடம்

திருவானைக்கா தலம் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

கோவில் வரலாறு பெயர்

திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Middle Chola Art' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது[1]. இக்கோவிலுக்குள் காணப்படும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலின் மூலவரான சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையை சுற்றியுள்ள விமானத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. ராஜராஜேஸ்வரி சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

ராஜராஜேஸ்வரர் விமானம்

பஞ்சமுக லிங்கம், சதுஷ் சஷ்டிகலேஸ்வரர், சஷ்டிகலேஸ்வரரி மற்றும் பரிவார தெய்வங்களாக பைரவர், விநாயகர், வள்ளி தெய்வசேனை சமேத சண்முகர், சண்டிகேஸ்வரர் மற்றும் கஜலக்ஷ்மி சந்நிதிகள் உள்ளன.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

திருவானைக்காவல் ராஜராஜேஸ்வரர் கோயில் இடைக்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

திருவானைக்காவல் ராஜராஜேஸ்வரர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் பிற்காலத்தய திராவிட பாணி விமானம் காணப்படுகிறது.

முகமண்டபத்திற்கு முன் ரிஷபம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன.

கோபுரம்

கோயிலின் ராஜகோபுரம் பிரஸ்தரம் வரைக்கும் கல் கட்டுமானமாக உள்ளது. பிரஸ்தரத்திற்கு மேல் கட்டுமானம் இல்லை.

கோபுர அமைப்பு

அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. கல் ஹாரத்திற்கு மேல் பிற்காலத்திய சுதை கட்டுமானம் உள்ளது.

அதிஷ்டானம்
பஞ்சமுகலிங்கேஸ்வரர் - தத்புருஷம்
பஞ்சமுகலிங்கேஸ்வரர் - அகோரம்

அதிஷ்டானம் மகாபத்மத்திலிருந்து தொடங்குகிறது. கீழுள்ள உறுப்புகள் மண்ணில் புதைந்துள்ளன. மஹாபத்மம், கம்பு, விருத்தக்குமுதம், பத்மவரி, கண்டம், பட்டிகை, பத்மவரி, கண்டம், வேதி ஆகிய உறுப்புகளை கொண்டு பத்ம பந்த அதிஷ்டானமாக உள்ளது.

பாதவர்க்கம்

கோபுரத்தின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்கள் (குட்யஸ்தம்பங்கள்) உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் புஷ்ப போதிகையுடன் காணப்படுகின்றன.

பிரஸ்தரம்

கபோத பகுதியில் நேத்ர நாசியும் ஆல்ப நாசியும் உள்ளது. முனைகளில் கோடிப்பாளைக் கருக்குகள் உள்ளன. கபோதத்திற்கு மேல் யாளி வரியும் உள்ளது.

முகமண்டபம்
பஞ்சமுகலிங்கேஸ்வரர் - சத்யோஜாதம்

முகமண்டபம் நான்கு தூண்களுடன் தெற்கில் படிகளுடன் உள்ளது. தூண்கள் சதுரம், கட்டு, சதுரம், தாடி வெட்டு பொதிகையுடன் உள்ளது.

மகாமண்டபம்

இரு அரைதூண்கள் உள்ளன. பிற்காலத்தில் மகாமண்டபத்தை ஒட்டி ராஜராஜேஸ்வரி சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது.

அர்த்தமண்டபம்

கருவறையை அடுத்துள்ள அர்த்தமண்டபம் தூண்கள் இன்றி காணப்படுகிறது.

விமான அமைப்பு

அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஏகதள (ஒருதள) விமானமாக அமைந்துள்ளது.

அதிஷ்டானம்
பஞ்சமுகலிங்கேஸ்வரர் - வாமதேவம்

அதிஷ்டானம் மகாபத்மத்திலிருந்து தொடங்குகிறது. கீழுள்ள உறுப்புகள் மண்ணில் புதைந்துள்ளன. மஹாபத்மம், கம்பு, விருத்தக்குமுதம், பத்மவரி, கண்டம், பட்டிகை, பத்மவரி, கண்டம், வேதி ஆகிய உறுப்புகளை கொண்டு பத்ம பந்த அதிஷ்டானமாக உள்ளது.

பாதவர்க்கம்

கோபுரத்தின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும்(குட்யஸ்தம்பங்கள்), கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் புஷ்ப போதிகையுடன் காணப்படுகின்றன. மூன்று திக்கிலும் உள்ள கோஷ்டங்களில் தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி சிற்பமும், வடக்கு கோஷ்டத்தில் துர்கை சிற்பமும் உள்ளது, மேற்கு கோஷ்டத்தில் சிற்பம் இல்லை.

தெற்கு கோஷ்டத்தில் பிற்காலத்தைய தக்ஷிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. தட்சிணாமூர்த்தி சிற்பம் இடது காலடியில் முயலகன் இருக்க, வீராசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. மகர மற்றும் பத்ர குண்டலத்துடன் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ளது. முன்னிரு கரங்களில் இடது கை சுவடிகளுடனும் முன் வலது கரம் வியாக்யான ஹஸ்த்தத்திலும் உள்ளது. பின்னிரு கரங்களில் இடது கையில் நாகமும் வலது கையில் அக்னியும் கொண்டு தலைக்கு மேல் கல்லால மரத்துடன் காணப்படுகிறது.

வடக்கு கோஷ்டத்தில் பிற்காலத்தை துர்கை சிற்பம் உள்ளது.

பிரஸ்தரம்

கபோத பகுதியில் நேத்ர நாசியும் அல்ப நாசியும் உள்ளது. முனைகளில் கோடிப்பாளைக் கருக்குகளும் உள்ளன. கபோதத்திற்கு மேல் யாளி வரியும் உள்ளது.

கிரீவம்

கிரீவத்தில் ரிஷபங்களும் பூதங்களும் உள்ளன. கிரீவ கோஷ்டங்களில் தெற்கில் தட்சிணமூர்த்தி சிற்பமும், மேற்கில் பரமபத நாதரின் சிற்பமும், வடக்கில் பிரம்மா சிற்பமும் உள்ளன.

சிகரம், கலசம்

நான்கு கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதியிலும் மகா நாசிகைகள் அமைந்துள்ளன. நாசிகைகளின் மேல் சிம்ம லலாடமும் காணப்படுகிறது. கிரீவத்திற்கு மேல் எட்டு பட்டை கொண்ட திராவிட சிகரமும், சிகரத்திற்கு மேல் கலசமும் காணப்படுகிறது.

பரிவார சன்னிதிகள்

விநாயகர் சன்னிதி

பரிவார திருச்சுற்றின் தென்மேற்கில் விநாயகர் சந்நிதி உள்ளது.

ஷண்முகர் சன்னிதி

கருவறைக்கு பின் வள்ளி தேவசேனா சமேத ஆறு முகம் கொண்ட மயில் மீது அமர்ந்த சண்முகர் சந்நிதியும்

கஜலக்ஷ்மி சன்னிதி

இரண்டு புறங்களும் யானை கொண்ட பத்மாசனத்தில் அமர்ந்த கஜலக்ஷ்மி சந்நிதி உள்ளது.

சண்டிகேஸ்வரர் சன்னிதி

ராஜராஜேஸ்வரி சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களுடன் வலது கரம் மழுவை ஏந்திய நிலையிலும் இடது கரம் தொடையில் இருத்திய நிலையிலும் உள்ளது.

ராஜராஜேஸ்வரி சன்னிதி
வீர ராமநாதன் காலத்தய கல்வெட்டு

மகாமண்டபத்தை ஒட்டி தெற்கு நோக்கிய ராஜராஜேஸ்வரி சன்னிதி உள்ளது. கருவறையில் நான்கு கரத்துடன் சமபாதஸ்தானகத்தில் நின்ற நிலையில் ராஜராஜேஸ்வரி சிற்பம் உள்ளது. மேலிரு கரங்களில் தாமரை ஏந்திய நிலையில், வலது முன் கரம் அபயஹஸ்தமாகவும் இடது முன் கரம் வரத ஹஸ்தமாகவும் உள்ளது.

பஞ்சமுகலிங்கேஸ்வரர் சின்னிதி

லிங்கத்தின் ருத்ரபாகத்தில் புடைப்பு சிற்பமாக மார்பளவு உருவங்கள் அமைந்தது முகலிங்கம் அல்லது மனுஷ லிங்கம்[2]. இவ்வகை லிங்கத்தை சகள நிஷ்களமாக வகைபடுத்தப்படுகின்றன. பஞ்ச முக லிங்கேஸ்வரர் சன்னிதியின் லிங்கம், பாணத்தில் நான்கு முகங்களும் பாணத்தின் மேல் பகுதி ஐந்தம் முகமாகவும் அமைந்துள்ளது. இவை சிவனின் ஐந்து முகங்களை குறிப்பன.

  1. கிழக்கு - தத்புருஷம்
  2. தெற்கு - அகோர முகம், ஜடாமகுடமும், வெறித்த கண்களும் கோரை பற்களும், இரண்டு காதுகளிலும் சர்ப்ப குண்டலமும் உள்ளன. நெற்றியில் லலாட பட்டம் உள்ளது.
  3. மேற்கு - சத்யோஜாதம், ஜடாமகுடமும் ஸ்படிக குண்டலங்களும் உள்ளன.
  4. வடக்கு - வாமதேவம், ஜடாபாரம் பவளங்களால் ஆன கிரீடம், குண்டலங்களும் உள்ளன.
  5. சிரோவர்த்தனம் எனும் பாணத்தின் மேல் பகுதி - ஈசானம்
திரிபுரசுந்தரி சன்னிதி

பஞ்சமுகலிங்கேஸ்வரருக்கு நேராக திரிபுரசுந்தரி சன்னிதி அமைந்துள்ளது. நான்கு கரத்துடன் சமபாதஸ்தானகத்தில் நின்ற நிலையில் மேலிரு கரங்களில் தாமரை ஏந்திய நிலையில், வலது முன் கரம் அபயஹஸ்தமாகவும் இடது முன் கரம் வரத ஹஸ்தமாகவும் உள்ளது.

பைரவர்

பஞ்சமுகலிங்கேஸ்வரர் சன்னிதிக்கு வெளியே கிழக்கு நோக்கிய பைரவர் சிற்பம் உள்ளது. இடது மேல் கரத்தில் அக்னியும் வலது மேல் கரத்தில் உடுக்கையும் இடது முன் கரத்தில் கபாலமும் வலது முன் கரத்தில் சூலமும் ஏந்திய சமபாத ஸ்தானகத்தில் நின்ற நிலையில் நாயுடன் காணப்படுகிறது.

சதுஷ் சஷ்டி லிங்கேஸ்வரர்

பைரவருக்கு அடுத்து சதுஷ் சஷ்டி லிங்கேஸ்வரர் சன்னிதி உள்ளது. லிங்கத்தின் ருத்ரபாகத்தில் 64 கலைகளை குறுக்கும் விதமாக 64 கோடுகள் உள்ளன.

சதுஷ் சஷ்டி லிங்கேஸ்வரி

சதுஷ் சஷ்டி லிங்கத்தை அடுத்து சதுஷ் சஷ்டி லிங்கேஸ்வரி சிற்பம் உள்ளது. நான்கு கரத்துடன் சமபாதஸ்தானகத்தில் நின்ற நிலையில் மேலிரு கரங்களில் தாமரை ஏந்திய நிலையில், வலது முன் கரம் அபயஹஸ்தமாகவும் இடது முன் கரம் வரதஹஸ்தமாகவும் உள்ளது.

கல்வெட்டுக்கள்

நுழைவாயிலில் தெற்கு சுவற்றில் வீர ராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டு உள்ளது. ஆட்சியாண்டு சிதைந்துள்ளது. நாகலா மகாதேவியின் சேவகன், திருவனைக்காவுடைய நாயனார் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள பிரசன்னீஸ்வரம் உடையார் அல்லது ராஜாக்கள் நாயனார்க்கு நிவந்தமாக கொடுத்த நிலத்தை பற்றி குறிப்பிடுகிறது.பாண்டிய குலாசினி வளநாட்டு கிளியூர் நாடு என்றும் குறிப்பிடுகிறது.[3]

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2026, 10:10:23 IST