under review

திருவண்ணாமலை ராஜகோபுரம்

From Tamil Wiki
திருவண்ணாமலை ராயகோபுரம்
ராஜகோபுரம்

திருவண்ணாமலை ராஜகோபுரம் : திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் கிழக்கு கோபுரம். தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. திருவண்ணாமலை ஆலயத்திலுள்ள ஒன்பது கோபுரங்களில் இதுவே உயரமானது. தமிழகத்தின் இரண்டாவது உயரமான கோபுரம் என இது சொல்லப்படுகிறது. இது திருவண்ணாமலை ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது

வரலாறு

திருவண்ணாமலை ராஜகோபுரத்தின் அடித்தளத்தை அமைத்தவர் விஜயநகரப் பேரரசின் முதன்மை அரசரான கிருஷ்ணதேவராயர். சோழப்பேரரசர் ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை 216 அடி உயரமாகக் கட்டினார். அதைவிட உயரமாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார் கிருஷ்ண தேவராயர். இதற்கான பணியை பொ.யு. 1516-ல் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே கிருஷ்ணதேவராயர் மறைந்தார்.

சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் திருவண்ணாமலை ராயகோபுரத்தை கட்டிமுடிக்கவேண்டும் என்று கோரினர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடி உயரமாக பொ.யு .1590-ல் இந்த கோபுரத்தைக் கட்டி முடித்தார்.

இந்தக் கோபுரம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ராஜகோபுரம் என சொல்லப்படுகிறது. இந்தக் கோபுரத்தைவிட உயரமானதாக மதுரை இராயகோபுரத்தை அமைக்க மதுரை நாயக்கர்ப்பேரரசின் ,முதன்மை அரசர் திருமலை நாயக்கர் திட்டமிட்டு அடித்தளம் அமைத்ததாகவும், அதை கட்டுவதற்குள் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. மதுரை இராயகோபுரம் முழுமைப்படுத்தப்படவில்லை.

அமைப்பு

திருவண்ணாமலை கோயிலில்

  1. ராஜகோபுரம் (கிழக்கு)
  2. பேய்க் கோபுரம் (மேற்கு)
  3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு)
  4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு)
  5. வல்லாள மகாராஜா கோபுரம்
  6. கிளி கோபுரம்
  7. வடக்கு கட்டை கோபுரம்,
  8. தெற்கு கட்டை கோபுரம்,
  9. மேற்கு கட்டை கோபுரம்.

என ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவற்றில் கிழக்கு கோபுரமே ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது.

ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரம் விஜயநகர கட்டிடப்பாணிக்கான சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ராயகோபுரத்தின் கீழ் பகுதி கருங்கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் கல்லால் ஆன அடித்தளத்தின் சுற்றுச்சுவரில் நாட்டியச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.கோபுரத்தில் பூதகணங்களும் மதனிகைகளும் செதுக்கப்பட்டுள்ளன. சுதையாலான மேற்பகுதி விஜயநகர பாணியில் கோஷ்டங்கள் (கோட்டங்கள்)எனப்படும் சிறு வளைவுக் கட்டுமானங்களால் ஆனதாக உள்ளது. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. விஜயநகர் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளும் உள்ளன. கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

சடங்குகள்

மறைந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது இது தடை செய்யப்பட்டுள்ளது .

உசாத்துணை


✅Finalised Page