under review

திருவகுப்பு

From Tamil Wiki

திருவகுப்பு (பதினைந்தாம் நூற்றாண்டு) அருணகிரிநாதரால் பாடப்பட்ட பக்தி இலக்கிய நூல். ஒரே பொருளைப் பலவிதமாக வகுத்து தொகுத்துச் சொல்லும் நூல் வகைமைக்கு திருவகுப்பு என்று பெயர். திருவகுப்பு நூலில் சீர்பாத வகுப்புத் தொடங்கி திருப்பரங்கிரி வகுப்பு வரை 25 வகுப்புகள் இடம்பெற்றன.

ஆசிரியர்

திருவகுப்பை எழுதியவர் அருணகிரிநாதர். அருணகிரிநாதர் சிவஞான அருளைப் பெற்றபோது திருவகுப்பு பாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மனித உடம்பை விடுத்துக் கிளி ரூபம் பெற்ற பின்னர் பாடிய நூலாகத் திருவகுப்பு அறியப்படுகிறது.

நூல் அமைப்பு

திருவகுப்பு நூலில் கீழ்க்காணும் பகுதிகள் இடம் பெற்றன.

  • சீர்பாத வகுப்பு
  • தேவேந்திர சங்க வகுப்பு
  • வேல் வகுப்பு
  • திருவேளைக்காரன் வகுப்பு
  • பெருத்த வசன வகுப்பு
  • பூத வேதாள வகுப்பு
  • பொருகளத் தலகை வகுப்பு
  • செருக்களத் தலகை வகுப்பு
  • போர்க்களத் தலகை வகுப்பு
  • திருஞான வேழ வகுப்பு
  • திருக்கையில் வழக்க வகுப்பு
  • வேடிச்சி காவலன் வகுப்பு
  • சேவகன் வகுப்பு
  • வேல்வாங்கு வகுப்பு
  • புய வகுப்பு
  • சித்து வகுப்பு
  • கடைக்கணியல் வகுப்பு
  • சிவலோக வகுப்பு
  • மயில் வகுப்பு
  • கொலு வகுப்பு
  • வீரவாள் வகுப்பு
  • சிவகிரி வகுப்பு
  • திருச்செந்தில் வகுப்பு
  • திருப்பழநி வகுப்பு
  • திருப்பரங்கிரி வகுப்பு

உள்ளடக்கம்

திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதரால், அந்நூலைப் போலவே சந்த நடையில் இயற்றப்பட்ட நூல் திருவகுப்பு. அருணகிரிநாதர், சிவஞான அருளைப் பெற்றபோது பாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நூலில் முருகப்பெருமானின் திருப்பாதம், வேலாயுதம், கடைக்கண்ணோக்கம், திருக்கரங்கள் ஆகியவற்றின் பெருமைகள் பேசப்படுகின்றன. திருவடிச் சிறப்பு, வேற்படைப் போர் வீரம், முருகப்பெருமானின் கடைக்கண் நோக்கச் சிறப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் உமையம்மையின் அருள், சிவலோகச் சிறப்பு, திருப்புகழ் உபதேசம், பிரசாதம் முதலியவற்றின் பெருமையும், அடியார்களின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. வேளைக்காரன் வகுப்பு, செல்லும் வழி தெரியாமல் திகைக்கின்ற அடியார்களுக்கு முருகப்பெருமான் அருள்புரிவான் என்று உறுதி கூறுகிறது.

சீர்பாத வகுப்பு முருகனைக் காட்டிலும் முருகன் திருவடியே சிறந்தது என்று கூறுகிறது. தேவேந்திர சங்க வகுப்பில் தேவியின் அம்சம் சிறப்பாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.

பாடல் நடை

வேல் வகுப்பு

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:54:31 IST