under review

திருமுகப் பாசுரம்

From Tamil Wiki

திருமுகப் பாசுரம்(பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) பதினோறாம் திருமுறையில் இடம்பெறும் பதிகம். கடித இலக்கியமாக அமைந்தது. திருவாலவாயுடையார் (மதுரையில் கோவில் கொண்ட சொக்கநாதர்) பாணபத்திரனுக்காக எழுதிய கடிதம் எனத் தொன்மம் கூறுகிறது.

திருமுகப் பாசுரம் என்ற பெயரில் சிவஞான வள்ளல் எழுதிய மற்றொரு நூலும் உள்ளது.

ஆசிரியர்

திருமுகப் பாசுரத்தை திருஆலவாயுடையார் எனப்படும் மதுரைச் சொக்கநாதரே இயற்றியதாக தொன்மம் கூறுகிறது.

தொன்மம்

மதுரையில் வாழ்ந்த பாணபத்திரர் என்ற பாணர் சிறந்த சிவபக்தர். வறுமையில் வாடி வந்தபோதும், தினமும் சொக்கநாதர் முன்பு யாழ் மீட்டி வழிபாடு செய்து வந்தார். அவரது வறுமையை போக்க எண்ணிய சொக்கநாதர் அவரிடம் 'மதிமலி புரிசை' என்று துவங்கும் திருமுகப் பாசுரத்தை எழுதி, அதனை சேரமான் பெருமாளிடம் கொண்டு போய் கொடுத்து, பரிசு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

"மதுரையின் இருக்கும் சொக்கநாத ஈஸ்வரர் எழுதியுள்ளது. இந்தத் திருமுகத்தை கொண்டு வருபவர் உன்னைப் போலவே என் மீது பெரும் பக்தி உடையவர். அவருக்கு வேண்டியவற்றை கொடுத்து விடு" என்று திருமுகப் பாசுரத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதனைப் படித்த சேரமான் பெருமாள், சொக்கனாதரிடமிருந்தே தனக்கு திருமுகம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். தன்னிடம் இருந்த செல்வங்களை பாணபத்திரருக்கு அளித்து, அது போதாது என்று எண்ணி, "என் அரசாட்சியும் உமக்கே அளித்தேன்" என்று தன் மணிமுடியையும் அவருக்கு அளித்தார்.

பாணபத்திரர், தனக்கு வேண்டிய செல்வம் மட்டும் எடுத்துக் கொண்டு ஈசன் மீது ஆணையிட்டு மற்றவற்றை திருப்பிக் கொடுத்து விட்டதால், அவற்றை மறுக்க முடியாமல் திரும்ப ஏற்றுக் கொண்டார் சேரமான் பெருமாள்.

நூல் அமைப்பு

திருமுகப் பாசுரம் திருவாலவாயுடையாரால் சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பாணபத்திரரது வறுமை தீரப் பொருள் கொடுக்கச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட கடிதம்.

திருமுகத்தை எழுதியவர் (திருவாலவாயுடையார்) பற்றிய குறிப்பும் , பெறுநரான சேரமான் பெருமாள் பற்றிய விவரமும் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடிதத்தின் பொருளாக பெருமாள் நாயனாரிடம் "உன்னைப் போன்றே என்மேல் பெரும் பற்று கொண்டவன் பாணபத்திரன். அவனுக்கு வேண்டிய பொருள் அளிப்பாயாக" எனக் கூறப்பட்டுள்ளது.

பாடல்

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

உசாத்துணை

பன்னிரு திருமுறை-பதிப்பாசிரியர் இராச.வசந்தகுமார், ஆர்கைவ் வலைத்தளம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Dec-2024, 19:24:34 IST