under review

திருமலை திருக்கோயில்

From Tamil Wiki
திருமலை திருக்கோயில் (நன்றி பாலு)

திருமலை திருக்கோயில் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அமைந்த சமணக் கோயில். மூன்று சமணக் குடைவரைகளும், இரண்டு சமணக் கோயில்களும் உள்ளது.

இடம்

ஆரணியிலிருந்து போளூர் செல்லும் திருவண்ணாமலை செல்லும் சாலையில் திருமலை கோயில் உள்ளது. தொண்டை நாட்டிலுள்ள போளூர் தாலுகாவினைச் சேர்ந்தது. போளூரிலிருந்து பத்து கிலோமீட்டர் வடமேற்கில் அமைந்துள்ள சிறிய மலைத் தொடரும் அதனை ஒட்டியுள்ள ஊரும் திருமலை என அழைக்கப்படுகிறது. பண்டைக் காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி வைகாவூர் எனவும், கோயில்களைக் கொண்டுள்ள மலையை திருமலை என்றும் அழைக்கப்படுகிறது. வைகாவூர் திருமலை என்ற பெயரும் உண்டு.

குந்தவை சமணக் கோயில் (நன்றி: பாலு)

வரலாறு

பொ.யு. 9-ம் நூற்றாண்டிலேயே சமணம் இங்கு தழைத்திருந்ததாக அறிய வருகிறோம். திருமலையிலுள்ள சமணக் கோயில்களைப் பற்றி விரிவாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவதால், இங்கு சுருக்கமான செய்திகள் மட்டும் அளிக்கப்படுகிறது. 16-ம் நூற்றாண்டில் இவ்வளாகத்தில் மகாவீரர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. பொ.யு. 15 - 17-ம் நூற்றாண்டுகளில் இச்சமண வளாகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அவைகளில் சில தற்போதும் உள்ளது.

அமைப்பு

திருமலையின் அடிவாரப் பகுதியில் இரண்டு கோயில்களும், அதற்குச் சற்று உயரமான பகுதியில் பாறைச் சிற்பங்களைக் கொண்ட கோயிலும், அதற்கு மேல் உயரமான பகுதியில் மற்றொரு கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. அடிவாரத்திலுள்ள கோயில்களைச் சுற்றிலும் திருச்சுற்றுமதில் கட்டப்பட்டிருக்கிறது.

மகாவீரர் கோயில்

மகாவீரர் கோயில் கருவறை, மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது. கருவறையிலுள்ள தீர்த்தங்கரரது சுதை வடிவம் சிதைந்த நிலையில் உள்ளது. உட்பகுதிச் சுவர்களில் முன்பு ஏராளமான ஓவியங்கள் தீட்டப்பெற்று இருந்தது. தற்போது இக்கோயில் வழிபாடற்ற நிலையிலுள்ளது.

நேமிநாதர் கோயில்

சோழப்பேரரசியாகிய குந்தவைப் பிராட்டியார் இந்தக் கோயிலைத் தோற்றுவித்ததால் இது குந்தவை ஜினாலயம் என்று அழைக்கப்பட்டது. இது கருவறை. அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய பகுதிகளைக் கொண்டது கருவறையில் நேமிநாதரின் சிலை உள்ளது. இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலுள்ள அரைத்தூண்கள், மாடங்களில் திருவுருவங்கள் இல்லை. ஆரம்பகாலத்தில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டிருந்த இக்கோயிலுடன் பொ.யு. 13 - 14-ம் நூற்றாண்டில் மகாமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

சுடுமண்சிலை

பாறைச்சிற்பங்கள்

நேமிநாதர் கோயிலுக்குச் சற்று தொலைவிலுள்ள இயற்கையான குகைத்தளத்தில் பாறைச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பாறையில் தருமதேவியின் சிற்பம் உள்ளது. வலதுபுறம் குழந்தைகள் இருவரது சிற்பங்களும், இடதுபுறம் உணவு நிறைந்த பாத்திரத்தினை ஏந்தி நிற்கும் பணிப்பெண்ணின் சிற்பமும் உள்ளது. இந்த யக்ஷி திருவுருவத்தினைப் பரவாதி மல்லரின் மாணாக்கராகிய கடைக்கோட்டூர் அரிஷ்டநேமி ஆச்சாரியார் நிறுவினார். கோமதீஸ்வரர் திருவுருவம், பார்சுவநாதர் சிற்பம் அடுத்டஹ்டுத்து உள்ளன. கோமதீஸ்வரர், தமது இருசகோதரிகளுடனும் தவக்கோலம் கொண்டு, கால்களில் கொடிகள் பின்னிப்படர்ந்து காணப்படுகிறார்.

சிகாமணி நாதர் கோயில்

சிகாமணி நாதர் கோயிலில் நேமிநாதரின் பதினாறரை அடி உயரமுடைய சிற்பம் உள்ளது. தமிழகத்தில் இக்கோயில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருப்பதால் இதில் பண்டைக் காலகட்டடக் கலையம்சங்களைக் காண இயலவில்லை.

கூரை ஓவியங்கள்

கல்வெட்டுகள்

திருமலையில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் பொ.யு. 9-ம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. 15-ம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்தைச் சார்ந்தது. இவை சோழ, இராட்டிர கூட, பாண்டிய, விஜயநகரப் பேரரசர்களது ஆட்சியின் போதும், சம்புவராயர், அதியமான் முதலிய சிற்றரசர்களின் காலத்திலும் பொறிக்கப்பட்டது. இந்த சாசனங்கள் திருமலையிலுள்ள கோயில்களுக்கு பொன், பணம், நிலம் முதலிய பல்வேறு தானங்களை அளித்த செய்திகளைக் கொண்டுள்ளது. மேலும் சில கல்வெட்டுக்கள் இங்கு தீர்த்தங்கரர், யக்ஷன், யக்ஷி முதலியோரது திருவுருவங்களை நிறுவிய செய்திகளைக் கூறுகின்றது.

கல்வெட்டுச் செய்திகள்

திருமலை கோயில் வளாகம்
  • இத்தலத்திலுள்ள நேமிநாதர் கோயில் குந்தவைப் பிராட்டியாரால் பொ.யு. 10-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்படுவதற்கு முன்பே இங்கு சமண சமயம் சிறப்புற்றிருந்திருக்கிறதென்பதனைக் பொ.யு. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்த பல சாசனங்கள் கூறுகின்றன.
  • பொ.யு. 881-ம் ஆண்டு வைகாவூர் திருமலையிலுள்ள சமணக்கோயிலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பொன் தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
  • பல்லவர் குலத்தில் தோன்றிய சின்னவை என்னும் அரசியார் இக்கோயிலில் தினமும் விளக்கெரிப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்.
  • இராட்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ணனது ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 985) இக்கோயிலிலுள்ள யக்ஷன் திருவுருவத்திற்கு முன் விளக்கெரியவிடுவதற்கு கங்கமாதேவி என்னும் அரசின் பணிப்பெண்ணாகிய பெற்றாள் நங்கை என்பவள் ஏற்பாடு செய்திருக்கிறாள்.
  • பிற்காலத்திலும் இங்குள்ள கோயில்களில் கேற்றும் பணிக்காக பிடாரன்பூதுகன், சந்தயன் ஆயிரவன் என்னும் படைத்தலைவர்களும்; மல்லியூரைச் சார்ந்த நன்னப்பையன் என்னும் வணிகரின் துணைவியாகிய சாமுண்டப்பை என்பவரும் பொன், பணம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
  • பொ.யு. 1236-ம் ஆண்டு சம்புவராய சிற்றரசனாகிய அத்தி மல்லன் இராஜ கம்பீர நல்லூர்என்னும் ஊரை தானமாகக் கொடுத்தார்.
  • பொ.யு. 1374-ம் ஆண்டில் விஷ்ணுகம்பிலி நாயக்கர் என்பார் சம்புகுலப் பெருமாள் அகரம் என்ற ஊரைச்சார்ந்த மக்களிடமிருந்து சில நிலங்களை விலைக்கு வாங்கி தானமாக அளித்தார்.
  • அதியமான் பரம்பரையில் வந்த எழினி என்னும் சிற்றரசன், காதழகிய பெருமாள் என்னும் அதியர்குலச் சிற்றரசன் கொடுத்த தானம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • பொ.யு. 1349-ஆண்டு பொன்ன சார்ந்த மண்ணை பொன்னாண்டை என்பவரது மகளாகிய நல்லாத்தாள் 'விகார நாயனார் - பொன்னெயில் நாதர் என்னும் அருகப் பெருமானது உலோகத் திருவுருவத்தை நிறுவினார்.
குடைவரை ஓவியங்கள்

பிற செய்திகள்

திருமலையை ஓட்டியுள்ள சிற்றேரியும், குளங்களும் பண்டைக்காலத்திலிருந்தே இப்பகுதி முழுமைக்கும் நீர்ப்பாசன வசதிக்குப் பயன்பட்டுள்ளன. இவற்றில் மதகுகள் கட்டியும் இவற்றை ஆழப்படுத்தியும் நீர்வளம் பெருக்கியிருக்கின்றனர். இங்குள்ள ஏரியில் கணிசேர மருபொற் சூரியன் என்னும் அறவோரின் சீடராகிய குணவீர முனிவரும் அம்பர் உடையான் ஆயன் என்பவரும், பாண்டையூர் மங்கலத்தைச் சார்ந்த ஜினத்தரையன் என்பவரும் தண்ணீர் பெருகி நிற்பதற்கேற்ற வகையில் மூன்று மதகுகள் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவை மட்டுமின்றி இத்தலத்திலுள்ள நான்கு குளங்களைத் தூர்வாங்குவதற்கும், அவற்றிலுள்ள மண்ணை அகற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


✅Finalised Page