under review

திருப்பான் மலை

From Tamil Wiki
திருப்பான்மலை

திருப்பான் மலை (பஞ்ச பாண்டவமலை) (பொ.யு 8-ம் நூற்றாண்டு) ஆற்காட்டின் அருகே இருக்கும் சமணக்குகை. இது வழிபடும் ஆலயமாக இருந்துள்ளது. இதற்கு அருகே விளாப்பாக்கம் பெண் பள்ளி அமைந்துள்ளது.

இடம்

திருப்பான்மலை

திருப்பான் மலை ஆற்காட்டில் இருந்து 8 கிமி தொலைவிலும் வேலூரில் இருந்து 3 கிமி தொலைவிலும் உள்ளது. ஆற்காடு கண்ணமங்கலம் சாலையில் உள்ள இந்த மலை பாறைகளை அடுக்கி வைத்ததைப்போல இருக்கிறது. மலையின் மீது சமணக் குகைகள் உள்ளன.

திருப்பான்மலை சோழர் கல்வெட்டு

குகைகள்

திருப்பான்மலையின் மேல் உள்ள குகையில் சிறிய அளவிலான நின்ற நிலையில் உள்ள ஒரு தீர்த்தங்கரர், ஒரு மிருகம் (சிங்கம் போன்று) புடைச்சிற்பங்களாகச் காணக்கிடைக்கின்றன. மேலும் குகையில் சில வெட்டுவித்த படுக்கைகளும் காணப்படுகின்றன.

சிற்பங்கள்

குகைக்குள் தென்புறமாக இயற்கையாக அமைந்த நீர் நிலையின் மேற்பகுதியில் ஒரு பெண் அமர்ந்த நிலையிலும், அருகே நால்வர் நின்ற நிலையிலும் புடைச்சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது. சமணர்கள், தீர்தங்கரர்களுக்கு சேவை செய்த அம்பிகா, பத்மாவதி, சித்தாகியா, சக்கரேசுவரி, ஜூலாமாலினி போன்ற இயக்கியர்களை பெண் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் ஒரு இயக்கியருக்கான புடைப்பு சிற்பமாக கருதப்படுகின்றது.

மலையின் வடக்குப் பகுதியிலுள்ள குகையின் உட்புறம் பாறையிலேயே அமர்ந்த கோலத்திலிருக்கும் யக்ஷியின் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. பீடம் போன்ற அமைப்பினில் வீற்றிருக்கும் இந்த யஷி வலது காலைத் தொங்க விட்டவாறும், இடது காலைப் பீடத்தின் மீது குத்துக் காலிட்டு ஊன்றியவாறும், இடது கையில் தாமரை மொட்டினைக் கொண்டும், வலது கை பீடத்தில் ஊன்றி வைத்த வண்ணமும் காட்சியளிக்கிறாள். இவளது வலப்புறத்தில் துறவி ஒருவர் கையினை மேலாகத் தூக்கி அஞ்சலி செலுத்தியவாறு காணப்படுகிறார். பீடத்தின் அடிப்பகுதியில் ஆடவர் ஒருவர் நின்றவாறும், அடுத்து ஒருவர் குதிரையின் மீது அமர்ந்த வண்ணமும் அனையடுத்து பெண்மணி ஒருவர் நின்ற கோலத்திலும் சிறிய அளவில் வடிக்கப்பெற்றுள்ளனர்.

இந்த குகையின் முகப்பில் சற்று உயரமான இடத்தில் தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று மாடம் போன்ற அமைப்பினுள் செதுக்கப்பட்டிருக்கிறது. தியான ரூபியாய் அமர்ந்தவாறுள்ள இத்தீர்த்தங்கரரின் தலைக்கு மேற்பகுதியில் முக்குடையும், தோளின் இருபுறம் இரண்டு சாமரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

கல்வெட்டுகள்

யக்ஷி

குகையின் முகப்பில் இரண்டாவது நந்திவர்ம பல்லவனதுகாலக் (பொ.யு. 781) கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது புகழாலை மங்கலம் என்னும் ஊரைச் சார்ந்த மருத்துவரின் மைந்தனாகிய நாரணன் என்பவர் பொன்னியக்கியார் சிற்பத்தினையும், நாகநந்தி என்னும் அறவோரின் சிற்பத்தையும் செதுக்க ஏற்பாடு செய்தார் எனக் கூறுகிறது. இந்த சாசனம் குறிப்பிடும் பொன்னியக்கியார் குகையினுள் செதுக்கப்பட்டுள்ள சித்தாயிகா யக்ஷி என்பதும், நாக நந்தி என்பது அந்த இயக்கியை வழிபடுவதாக உள்ள துறவியரது சிற்பம் என்பதும் ஊகிக்கப்ப்படுகிறது.நாக நந்தி என்பவர் இந்த தலத்தில் வாழ்ந்த தலைமைத் துறவியாக இருக்கலாம் இந்த இயக்கி அம்பிகாவைக் குறிப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

நந்திவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டின் வாசகம்)

நந்திப் பொத்தரசர்க்கு ஐம்பதாவது நாகணந்தி குரவர்

இருக்க பொன்னி இயக்கி படிமம் கொட்டுவித்தான்

புகழைமங்கலத்து மருத்துவர் மகன் நாரணன்

கல்வெட்டின் பொருள்:

புகழைமங்கலத்தை சேர்ந்த மருத்துவர் மகனான நாரணன் என்பவர் இங்கே சிலையாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் இயக்கியையும் நின்றகோலத்தில் இருக்கும் நாகநந்தி சிலையையும் வடித்துள்ளார்.

குகை முகப்பில் உயரமான இடத்தில் வடிக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்கரர் சிற்பம் மகாவீரரைக் குறிக்கும். இச்சிற்பமும் கி.பி. 8-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இது. இதற்கு மேற்குப் பகுதியில் முதலாம் இராசராசசோழனது எட்டாவது ஆட்சியாண்டுக் (பொ.யு. 993) கல்வெட்டு காணப்படுகிறது. இது லாடராஜவீர சோழப் பேரரையன் தமது தேவியாகிய லாடமா தேவியின் வேண்டுகோளுக்கிணங்க, கூறங்கன்பாடி என்ற பள்ளிச் சந்த ஊரிலிருந்து கிடைக்கப்பெற்ற கற்பூரவிலை, அனியாயவாவ தண்ட இறை ஆகிய வருமானத்தைத் திருப்பான்மலைத் தேவருக்கு அளித்ததாகக் கூறுகிறது. மேலும் லாடராஜன் அறியூருக்குத் தலைவன் என்றும், அவனது தந்தை புகழ்விப்பவர் கண்டன் எனவும், திருப்பான்மலை படவூர்க் கோட்டத்தில், பெருந்தில் நாட்டைச் சார்ந்திருந்தது. எனவும் அறிய வருகிறது.[1]

சோழ அரசர் ராஜராஜனின் எட்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு

ஸ்வத்ஸ்திஸ்ரீ

கொவிராஜராஜகெஸரிவர்மர்க்கு யாண்டு அ ஆவது படுவூர் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான்மலைப் பொ

கமாகிய கூறக்கன்பாடி இறையிலி பள்ளிச்சந்தத்தை கீழ்பாகலான்ட இலாடராஜர்கள் கற்பூரவிலை கொண்டு இத்தர்மம் கெ

ட்டுப் பொகின்றதென்று உடையார் இலாடராஜர் புகழ்விப்பவர் கண்டர் மகனார்

வீரசொழர் திருப்பான்மலை தெவரைத் திருவ

டீத்தொழுதெழந்தருளி இருக்க இவர் தெவியார் இலாடமஹாதெவியார் கற்பூரவிலையும் மனன்யிவாவதண்டவிறையுமொ

ழிந்தருளி வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய உடையார் வீரசொழர் கற்பூரவிலையும் மன்னையவாவதண்ட விறை

யுமொழிஞ்சொமென்று செய்ய அரியூர் கிழவன் ஆகிய வீரசொழ

இலாட பெயரையனுடையார் கன்மியேய

(ந்த..?)தியாகவிந்த கற்பூரவிலையும் மன்னயிவாவதண்ட விறையு மொழிஞ்ச சாஸனம் செய்தபடி இதுவ

ல்லது கற்பூரவிலையும் மன்னியவாவதண்ட விறையும் இப்பள்ளிச்சந்தத்தை கொள்வான் கங்கையி

டை குமரியிடை செய்தார் செய்க பாவஞ்கொள்வான் இது வல்லடிப் படிச்சந்தத்தை கெடுப்பார் வல்லவரை

--ந்ருவ இத்தர்மத்தை ரக்ஷிப்பான் என்றலை மெலன அறமவர்கறமல்ல துணையில்லை.

கல்வெட்டின் பொருள்.

படுவூர் கோட்டத்தில் பெருந்திமிரி நாட்டில் உள்ளது திருபான்மலை. திருபான்மலைக்கு போகமாக உள்ள கூறகன்பாடி என்ற ஊர் வரி நீக்கிய பள்ளிச் சந்தமாக இருந்துள்ளது. முன்னர் ஆட்சி செய்த இலாட ராஜாக்கள் வரி நீக்கிய விலையில் இருந்து கற்பூர விலையை மட்டும் எடுத்துவிட்டனர். உடையார் கண்டனின் மகன் வீர சோழர் என்பவர். வீரசோழர் திருபான்மலை தேவர் திருவடியைத் தொழுத வேளையில் முன்னர் இக்கற்பூரவிலையக் கொண்டதால் இப்பள்ளிச்சந்தத்துக்குரிய தர்மம் கெட்டுப் போகிறதென்று சுட்டிக்காட்டி கூறியவர் வீரசோழனின் மனைவியான இலாட மஹாதெவியார் என்பவர். முன்னர் கொண்டு கற்பூர விலையையும் அதனுடன் அன்னயிவாவதண்ட இறையையும் மீண்டும் இத்தர்மத்துக்கே தொடர வேண்டுமென இந்த அரசியார் வீர சோழனிடம் வேண்டிக் கொள்கிறார். வீர சோழரும் இதற்கு உடன்பட்டு இதை அரியூர் என்ற ஊருக்கு தலைவனாக உள்ள கிழவன் வீரசேது இலாட போரையன் என்பாருக்கு ஆணையாக கூற அவர் திருப்பான்மலை கன்மியுடன் இணைந்து இத்தர்மத்திற்கு முன்னர் கொண்ட கர்பூரவிலையும் அதனுடன் அன்னயிவாவதண்ட இறையும் தொடரும் என சாசனமாக கல்லிலே வெட்டுகிறான். இத்தர்மத்திற்கு தீங்கிழைத்தால், அது கங்கைக்கும் குமரிக்கும் இடையே யாரேனும் பாவம் செய்தால் அந்த பாவங்களைக் கொள்பவராக போகக் கடவார்கள். இந்த தர்மத்தை காப்பவர்கள் யாரோ அவரின் பாதங்களில் உள்ள தூசியை என் தலை மேல் தாங்குபவனாக ஆவேன்.[2]

திருப்பான் மலைத் தேவர் என்பது குகை முகப்பில் மேற்பகுதியில் வடிக்கப்பட்டிருக்கும் மகாவீரர் சிற்பத்தை குறிக்கிறது. கூறங்கன்பாடி என்னும் ஊர் பஞ்ச பாண்டவ மலையிலில் மன்று கிலோ மீட்டர் கிழக்கில் உள்ள கூறாம்பாடியாக இருக்க வேண்டும். புகழ்விப்பவர் கண்டன் என்னும் பட்டப் பெயரினை வாணர் குலச் சிற்றரசனாகிய மூன்றாம் விஜயாதித்தன் கொண்டிருந்தமையால், அவரது மைந்தனாகிய லாடராஜவீர சோமன வாணர் குலத்தைச் சார்ந்தவன் என்பது தெரிகிறது. இந்த சிற்றரசரின் தேவியார் இங்குள்ள பள்ளியில் வழிபாடுகளை நடத்துவதற்காகத் தானங்களை வழங்கக் காரணமாகத் திகழ்ந்திருக்கிறார். (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page