திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோவில்
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற தலம். இடைகால சோழர் கலையமைதியில் உள்ளது.
அறிமுகம்
திருவள்ளூர் மாவட்டம் திருபாசூரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தொண்டைமண்டல தலங்கள் முப்பத்திரண்டில் பதினாறாவது தலம். மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அமைவிடம், பெயர்க் காரணம்
திருவள்ளூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் கடம்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
முன்பு இந்நிலம் மூங்கில்கள் நிறைந்த வனமாக இருந்தமையால் பாசூர் என்று அழைக்கப்பட்டது.
சோழர்காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ஈக்காட்டுக் கோட்டத்தில் காக்களூர் நாட்டில் அமைந்திருந்தது.
தல புராணம்
முன்பொரு காலத்தில் இவ்விடம் மூங்கில்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தின் ஒரு பகுதியை வேடுவர்கள் அழித்து, நிலம் திருத்தி, திணை விதைத்து விவசாயம் செய்து, குடியேறி வாழ்ந்து வந்தனர். சிவ பெருமான் திருவிளையாடல் புரியும் பொருட்டு இடப வடிவங்கொண்டு திணை விதைத்த நிலமெல்லாம் அழித்தார். இதைக் கண்ட வேடுவர்கள் 'இவ்விடபத்தைக் கொன்றால் ஒழிய நமக்குப் பிழைப்பில்லை' எனக்கருதி, வெள்ளாரையில் இருக்கும் தங்களது தலைவன் குன்றனிடம் முறையிட்டனர். அவனும் வேட்டைக்கு இசைய, ஒரு குழுவாக ஆயுதங்களுடன் புறப்பட்டனர். மூங்கில் வனத்தில் எவ்வளவு தேடியும் இடபம் இவர்களுக்குச் சிக்காமல் ஓடிக்கொண்டிருந்தது. குன்றனின் ஆணைப்படி நான்கு பக்கங்களிலும் சுற்றி வளைத்து மெல்ல மெல்ல இடபத்தை நோக்கி நெருங்கி அருகில் வரவும், இடபம் திடீரென மறைந்து போனது. இடபத்தைக் காணாத ஏமாற்றத்துடன் குன்றன் சோர்வுற்றிருக்க, முருக பிரான் தேவராளன் வடிவங்கொண்டு குன்றனை அணுகி "அந்த மூங்கில் புதருள் தேடினால் இடபம் அகப்படும்" என்று கூறி மறைந்தார். குன்றன் புத்துணர்வு கொண்டு ஆயுதங்களால் அப்புதர் காட்டை வெட்டி வீசிக் கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு பெரிய மூங்கில் சரியவும் அதனடியில் குருதி பெருக்கெடுத்து வழிந்தோடியது. அதைக்கண்ட வேடுவர் பலரும் பதைப்புற, அப்பொழுது சிவபெருமான் லிங்க ரூபமாய் வெளிப்பட்டார்.
தொன்மங்கள்
ஒருமுறை மோசூரை ஆண்ட குறும்பன் மீது கரிகாலன் போர் தொடுத்தான். தன் கோட்டைக்குக் காவலாக வைத்திருந்த காளியைக் கரிகாலனின் படை மீது குறும்பன் ஏவி விட, கரிகாலனின் சேனைக்குப் பலத்த சேதம் உண்டாயிற்று. காளியை எதிர்க இயலாத கரிகாலன் பாசுர்நாதரை வேண்டினான். அவர் தேரும் ஆயுதங்களும் கொடுத்தனுப்பினார். அதைக்கொண்டு போர் புரிந்து காளியை வென்று கையில் விலங்கிட்டு பாசூருக்கு கூட்டி வந்தான். காளியை என்ன செய்வதெனக் கரிகாலன் இறைவனிடம் கேட்க, இவ்வாலயத்துள் வைக்கும் படி கட்டளையிட்டார்.
கரிகாலன் மோசூர் குறும்பனை வீழ்த்திய செய்தியினை அறிந்த திருக்கச்சியூர் சமண குறும்பன் சில சமணர்களை அழைத்து கரிகாலனை சூழ்ச்சி செய்து வீழ்த்த சதித் திட்டம் தீட்டினான். அதன்படி அவர்கள் வேள்வி எழுப்பி பாம்பொன்றைப் பெற்று குடத்தினுள் அடைத்து குறும்பனிடம் கொடுக்க, அவன் அதற்குத் திருமுகம் எழுதி தூதுவர்களிடம் கரிகாலனுக்குக் கொடுத்தனுப்பினார். தூதுவர்கள் கரிகாலனின் சபையில் அக்குடத்தினை வைத்து திருமுகத்தைக் கொடுத்தனர். அச்சமயத்தில் சிவ பெருமான் பாம்பாட்டி வேடங்கொண்டு சபையுள் நுழைந்து அக்குடத்தினை திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட பாம்பை மகுடி ஊதி ஆட்டி வைத்து கரிகாலனைக் காப்பாற்றினார். பின் அப்பாம்பாலேயே அக்குறும்பனைக் கொன்றார்.
இலக்கிய முக்கியத்துவங்கள்
தேவாரம்
திருஞான சம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 60-வது பதிகம்.
திருநாவுக்கரசர் - ஐந்தாம் திருமுறை - 25-வது பதிகம் & ஆறாம் திருமுறை - 83-வது பதிகம். மூன்றாவது பதிகம் கிடைக்கவில்லை.
பதிகங்களில் திரிபுரம் எரித்தல், காலாரி, நீலகண்டர், அந்தகாசுர வதை மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி முதலிய மூர்த்தங்களாக பாவித்து இறையனார் பாடப்படுகிறார்.
இறையனார் ஒரே சமயம் மண்டையோடு ஏந்தும் காபாலிக மூர்த்தியாகவும் உமையாளை தன் பாகத்தில் கொண்ட மணாளனாகவும் வருணிக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தரின் பதிகத்தில் பாசூரின் இயற்கையின் எழில் காட்சிப்படுத்தப்படுகிறது.
"அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்" என்ற வரி சந்திரனுக்குச் சாபம் நீக்கி சிவன் அருள் புரிவதைக் கூறுகிறது. "நீளரவந்தனைப் பற்றியாட்டுவர் பாசூரடிகளே", "தீயதோர் பாம்புமாட்டுவர் பாசூரடிகளே", "படவரவொன் றதுவாட்டிப் பாசூர்மேய" முதலிய வரிகள் சிவன் பாம்பாட்டியாக வந்து கரிகாலனைக் காப்பாற்றிய தொன்மத்தைக் குறிப்பிடுகிறது.
பெரிய புராணம்
"திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்று" எனத் தொடங்கும் பாடலில், திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவரின் தரிசனத்தை முடித்துவிட்டு திருஞானசம்பந்தர் தமது சீடர்களுடன் திருப்பாசூர் வந்ததையும் அவர்களை பக்தர்கள் வரவேற்றதையும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
திருப்பாசூர்ப் புராணம்
பூவை கலியாணசுந்தர முதலியார் அவர்களால், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட உரைநடை இலக்கியம். பதினாறு சருக்கங்களைக் கொண்டுள்ளது. இக்கோவில் தொடர்பான புராணங்களும் தொன்மங்களும் இதில் சொல்லப்படுகின்றன.
கோவில் தெய்வங்கள்
மூலவர்: மூங்கில்காட்டுப் புற்றிலிருந்து சுயம்புலிங்கமாக வெளிப்பட்டதால் வாசீஸ்வரர், பாசூர் நாதர் போன்ற பெயர்கள் உண்டாகின. கல்வெட்டுகளில், வேயிடங்கொண்டருலிங்க மகாதேவர், புற்றிடங்கொண்ட நாயனார், வாசியெழுந்த நாயனார் ஆகிய பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாயார்: தங்காதலி அம்மன். இறைவன் "என் காதலியே" என்றழைத்ததால் இப்பெயர் உண்டாயிற்று. கல்வெட்டுகளில் ஆளுடை நாச்சியார், பணைமுலை நாச்சியார் ஆகிய பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
சிதம்பரேஸ்வரர்: மூலவர் சன்னதியின் அர்த்த மண்டபத்தையொட்டி தனி சன்னதியில் அமைந்துள்ளார்.
உற்சவர்: சோமாஸ்கந்தர், செப்புத் திருமேனியாக உள்ளார். சிவ பெருமானும் தாயாரும் சுகாசனத்தில் அமர்ந்திருக்க நடுவே பால முருகன் நின்ற கோலத்தில் உள்ளார்.
நடராஜர்: சபாகார விமானத்துடன் அமைந்த மண்டபத்தில் நடராஜ சபை உள்ளது. நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகர் செப்புத் திருமேனிகளாக உள்ளனர்.
பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன்: பிரம்மஹத்தி தோஷம் நீங்க விஷ்ணு வழிபட்ட சிவலிங்கம்.
ஏகாதச விநாயகர்: பதினோரு ரூபங்களில் விநாயகர் சபையாக உள்ளது.
சுப்பிரமணியர்: வள்ளி தேவானை சமேதராக உள்ளார்.
சொர்ண காளி: தொன்மக்கதையுடன் தொடர்புடையவள். முக மண்டபம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவில் பற்றி
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தங்கள்: சோம தீர்த்தம், கோவிலருகே சிறு குட்டையாக உள்ளது. மங்கள தீர்த்தம், கோயிலுக்கு தெற்கே சற்று தொலைவில் உள்ள பெரிய குளம். நடுவே நீராழி மண்டபத்துடன் உள்ளது.
திருவிழாக்கள்: வைகாசி பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி.
ஆகமம்: காமிகாகமம்
இறை வாகனங்கள்: இரு இடபங்கள், சூரிய பிரபை, பூதகணம், வெண்குதிரை, நாகம், சிம்மம், நந்தி, மூஷிகம்.
செப்புத் திருமேனிகள்: சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகர், விநாயகர், சந்திர சேகரர், சுக்ரவார அம்மன்.
காலம்: மூலவர் சன்னதி இடைக்கால சோழர் கட்டுமானமாக வகைப்படுத்தப்படுகிறது. முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் செங்கற் கட்டுமானத்தை கற்றளியாக மாற்றி அமைத்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. தாயார் சன்னதியின் கட்டிட அமைதியைக் கொண்டு முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. விஜயநகர பேரரசு காலம் வரை திருப்பணிகள் நடைபெற்றிருக்கின்றன.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு
மூலவர், தாயார், உற்சவர், விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்து, சுற்றிலும் கற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் உற்சவ மண்டபம், கூடவே சற்றே சிதிலமடைந்த மண்டபமும் ஒன்று உள்ளது. தெற்கும் கிழக்கும் வாயில்கள் உள்ளன. வளாகம் 'தன்மதாவளவன்' எனும் பெயர் கொண்ட திருமதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது.
இராஜகோபுரம்
தெற்கு முகமாக உள்ளது. உபபீடம், ஆதிஷ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தாரம் வரை கற்றளியாகவும் அதற்கு மேல் ஹாரம், கிரீவம், சிகரம் சமீபத்திய சுதைக் கட்டுமானமாகவும் அமைந்துள்ளது. மூன்றுதள ஷாலாகார சிகரத்துடன் ஏழு ஸ்தூபிகளும் உள்ளன.
கிழக்கு வாயில்கள்
தோரணவாயில்: பிரதான சாலையிலிருந்து கோவிலுக்கு இறங்கும் பாதை முகப்பில் அமைந்துள்ளது. சமீபத்திய கட்டுமானம்.
நுழைவாயில்: மூலவர் சன்னதிக்கு நேராக திருமதிற்சுவரில் மகாதுவார அமைப்புடன் உள்ளது.
உற்சவ மண்டபம்
உபபீடம், பாதவர்க்கம், பிரஸ்தார அமைப்புடன் உள்ளது. நான்கு ருத்ர கட்டு தூண்கள் உள்ளன. சதுரப்பகுதியில் நர்த்தன கணபதி, அம்பாள், கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு, மார்க்கண்டேயன், திருமகள், வீணாதர தக்ஷிணாமூர்த்தி, மயில்வாகனர், ரிஷபாந்திகர், பைரவர், திரிபுராந்தகர், பூதகனங்கள், வாத்திய கலைஞர்கள் முதலிய சிற்பங்கள் உள்ளன. பிரஸ்தார பகுதி கொடுங்கை, வியாள வரி கொண்டுள்ளது. கொடுங்கையில் கோடிப்பாளை கருக்குகள் உள்ளன.
நூற்றுக்கால் மண்டபம்
இம்மண்டபம் நூற்றுக்கால் மண்டபமாகக் கருதப்பட்டாலும் மூலவர், தாயார், சுப்பிரமணியர், உற்சவர் சன்னதிகளின் மகா மண்டபங்களாகப் பிரிந்துள்ளது. பலவகைத் தூண்களின் கலவையாக அமைந்துள்ளது.
வாகன மண்டபம்
நூற்றுக்கால் மண்டபத்துடன் இணைந்துள்ளது. உட்கூரை பகுதியில் இரு பக்கமும் இணை அன்னப்பறவைகளோடு ஸ்ரீ சக்ரம் செதுக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் கோலாட்டம் புரியும் மங்கையர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு இரு தூண்களில் அழகிய காட்சி சிற்பங்கள் பொரிக்கப்பட்டுள்ளன. ஒன்று, லிங்கத்திற்கு இரு பெண்கள் அபிஷேகம் செய்வது. இரண்டு, நான்முகன் உமா சகிதருக்கு மலர் கொடுப்பது.
நவக்கிரக மண்டபம்
உபபீட அமைப்புடன் சதுரம், கட்டு, புஷ்பக போதிகை கொண்ட நான்கு தூண்கள் உள்ளன. நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிதிலமடைந்த மண்டபம்
வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. தூண் சதுரப் பகுதிகளில் காலிங்க நர்த்தனர், யோக நரசிம்மர், பூவராகர், சிற்பங்கள் உள்ளன. நடுவே வசந்த மண்டப அமைப்பு உள்ளது. முன்பு திருவிழா காலங்களில் தெய்வங்களை இங்கு எழுந்தருளச் செய்திருக்கலாம்.
மூலவர் சன்னதி
முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், அந்தராளம், கருவறை, விமானம், திருச்சுற்று மாளிகை, இடப மண்டபம், துவஜஸ்தம்பம், பலிபீடம் கொண்டுள்ளது.
கருவறை
இங்கு சதுர வடிவ பீடத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். லிங்கம், மேற்புறத்திலும், பக்கவாட்டிலும் வெட்டுப்பட்டுள்ளது. சொரசொரப்புடன், தழும்புகளுடன் திகழ்கின்றது. தீண்டாத் திருமேனியான இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்யப்படுவதில்லை.
அர்த்த மண்டபம்
வாயிலில் டிண்டி, முண்டி எனும் இரு வாயிற்காவலர்கள் உள்ளனர். பக்தர்களை அதட்டும்படியாகவும் இறைவனைக் கண்டு வியக்கும்படியாகவும் கை முத்திரைகள், முக பாவனைகள் கொண்டுள்ளனர்.
திருச்சுற்று மாளிகை
இப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஏழு அன்னையர், சொர்ண பைரவர், அக்னி வீரபத்திரர் சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. இங்கு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நால்வர் கல்வெட்டுப் பலகை ஒன்றும் உள்ளது.
விமானம்
உபபீடம், அதிஷ்டானம், முதல் தள பாதவர்க்கம் மற்றும் பிரஸ்தாரம் வரை கற்றளியாகவும் அதற்கு மேல் இரண்டாம் தள பாதவர்க்கம் மற்றும் பிரஸ்தாரம், ஹாரம், கிரீவம், சிகரம் ஆகிய பகுதிகள் சமீபத்திய சுதைக் கட்டுமானமாகவும் அமைந்துள்ளன.
அதிஷ்டானப் பகுதி உபானம், ஜகதி, விருத்த குமுதம், வியாளவரி, கண்டம், வேதிகை கொண்டுள்ளது. வியாளவரியில் தூண்கள் சந்திக்கும் பகுதிகளில் மகரத்தின் வாயிலிருந்து வாள், கேடயம் ஏந்திய சேனை வீரர்கள் வருவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாதவர்க்கம் பகுதியில் பிரம்மகாந்த தூண்களின் கலசம், ஆமலகம், இதழ் பகுதிகளில் அழகிய மலர் அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. சில மாலாஸ்தானம் பகுதிகளில் குதிரைவால் கருக்குகள் உள்ளன. கோஷ்டங்கள் இரு அரைத்தூண்கள் மற்றும் மகரத்தோரண அமைப்புடன் உள்ளது.
பிரஸ்தாரப்பகுதி கபோதவரியும் வியாளவரியும் கொண்டுள்ளது. கபோதவரியில் நாசிகைகள் உள்ளன. நாசிகையில் கீர்த்தி முகம் கொண்ட முகப்பட்டியும் அதன் மத்தியில் காடப் பகுதியில் மலர்களும் முகங்களும் காட்டப்பட்டுள்ளன. காடப்பகுதி முழு வட்ட வடிவில் உள்ளது. வலபி-வாஜன பகுதியில் இசைத்தும் நடனமிட்டும் பூதகணங்கள் உள்ளன.
இரண்டாம் தளத்தில் சுதையால் அமைக்கப்பட்ட பிரஸ்தாரப் பகுதிகளிலும் கோஷ்டங்களில் விஷ்ணு, பிரம்மா மற்றும் பல சிவ வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிகரம், கஜபிருஷ்ட சிகரமாக அமைந்துள்ளது. முகப்பில் மகா நாசிகை. நான்கு திக்குகளிலும் பாரவாகனர் தோள்களில் தாங்கிக் கொள்கிறார்கள். காடப்பகுதியில் ஷாலை அமைப்பு உள்ளது. மேலே ஐந்து ஸ்தூபிகள் உள்ளன.
பாதவர்க்க கோஷ்ட சிற்பங்கள்
பத்ர கோஷ்டப் பகுதியில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகரதோரண பகுதியில் ஆலிலைக் கண்ணன், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, கண்ணப்பர், சக்ர தானர் முதலிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
விநாயகர்
தெற்கு முகமாக சமபாத ஸ்தானகத்தில் நிற்கிறார். கரங்களில் பாசம், அங்குசம், உடைத்த கொம்பு, மோதகம் ஏந்தியுள்ளார். தும்பிக்கை மோதகத்தை எடுக்க விளைகிறது. கரண்ட மகுடம் தரித்துள்ளார். கண்டிகை, கைவளை, நாகப்பூணூல் அணிந்துள்ளார். கால்களுக்குக் கீழே பீடத்தில் சிறிய மூஷிகம் புடைக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி
தெற்கு முகமாக கல்லாலமரத்தடியில் கற்பாறையின் மீது வீராசனத்தில் அமர்ந்துள்ளார். வலதுகால் முயலகனை அழுத்தியுள்ளது. கரங்களில் அக்க மாலை, அக்னி, சுவடி ஏந்தியுள்ளார். வியாக்கியான ஹஸ்தம் பிடித்துள்ளார். கங்கா தேவி, பிறை நிலவு கொண்ட ஜடா பாரம் தரித்துள்ளார். பத்ர குண்டலங்கள், கண்டிகை, சவடி, நாக கடகவளை, நாக கைவளை, பூணூல் அணிந்துள்ளார். இங்கு கோஷ்டத்தின் நீட்சியாக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோஷ்ட சிற்பம் மட்டும் சமீபத்திய சிற்ப அமைதி கொண்டுள்ளது.
லிங்கோத்பவர்
மேற்கு நோக்கி ஜோதி வடிவாகக் காட்சியளிக்கிறார். உச்சியும் பாதமும் மறைந்து அறியமுடியாமையைக் காட்டுகிறது. கரங்களில் மான், மழு ஏந்தியுள்ளார். அபய மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். மகரபூரிமத்துடன் ஜடா மகுடம் தரித்துள்ளார். பத்ர குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், சவடி, வாகுமாலை, தோள்மாலை, கடகவளை, கைவளைகள், பூணூல், உரஸ் சூத்திரம், ஸ்தன சூத்திரம், உதர பந்தம், அரைப் பட்டிகை, தாரகைச் சும்மை, மரவுரி ஆடை அணிந்திருக்கிறார். கீழே வராக ரூபத்தில் விஷ்ணு, மேலே தாழம்பூவுடன் நான்முகன் அன்னப்பறவை வடிவில் உள்ளார்.
பிரம்மா
வடக்கு முகமாக சமபாத ஸ்தானகத்தில் நிற்கிறார். மேற்கரங்களில் அக்கமாலை, குண்டிகை ஏந்தியுள்ளார். அபய மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். மூன்று தலைகளிலும் மகரபூரிமத்துடன் ஜடா மகுடம் தரித்துள்ளார். மகரக்குழைகள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், சவடி, தோள்மாலை, வாகுமாலை, தோள்வளை, கடவளை, கைவாளைகள், பூணூல், உரஸ் சூத்திரம், ஸ்தன சூத்திரம், உதர பந்தம், அரைப் பட்டிகை, தாரகைச் சும்மை, குறங்கு செறி, பட்டாடை அமைதியுடன் இடைக்கட்டு அணிந்துள்ளார்.
துர்க்கை
வடக்கு முகமாக வைதஸ்திக ஸ்தானகத்தில் நிற்கிறார். கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். அபய மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். கண்டிகை, கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், தோள்வளை, கடவளை, உதர பந்தம், அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை அணிந்துள்ளார்.
சண்டிகேஸ்வரர் சன்னதி
அர்த்தமண்டபத்திற்குப் பக்கவாட்டில் வெளியே தெற்கு முகமாகச் சிறு அறை அமைப்பில் உள்ளது. சண்டேசர் வலது கையில் மழு ஏந்தியவாறு ஜடாபாரம் தரித்து சுகாசனத்தில் அமர்ந்துள்ளார்.
தாயார் சன்னதி
மகா மண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை, விமானம், சுற்றுப் பிரகாரம், சிம்ம வாகன மண்டபம், பலிபீடம் கொண்டுள்ளது.
கருவறை நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. தாயார் தங்காதலி திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அர்த்த மண்டபம் வாயிலில் ஜயா, விஜயா எனும் இரு துவாரபாலகிகள் உள்ளனர். வடக்கே பள்ளியறை உள்ளது.
விமானம்
உபபீடம், அதிஷ்டானம், பாதவர்க்கம் மற்றும் பிரஸ்தாரம் வரை கற்றளியாகவும் அதற்கு மேல் ஹாரம், கிரீவம், சிகரம் ஆகிய பகுதிகள் சுதைக் கட்டுமானமாகவும் அமைந்துள்ளது.
உபபீட பகுதி உபானம், பத்மம், கண்டம், வாஜனம் கொண்டுள்ளது.
அதிஷ்டான பகுதி உபானம், பத்மம், கம்பு, ஜகதி, விருத்த குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், வேதிகை கொண்டுள்ளது.
பாதவர்க்க பகுதி பல இடங்களில் சிதைந்துள்ளது. அவை சுதையால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தூண்கள் குட்யஸ்தம்பங்கள் பத்ரகோஷ்டங்கள் உள்ளன. வலபி வஜன பகுதியில் பத்மம் உள்ளது.
ஹாரம் இரண்டு தளங்களாக கர்ண கூடம், நாசிகை, சாலை, கொண்டுள்ளது. பத்ர, பஞ்சர பகுதிகளில் அம்பாளின் பல்வேறு வடிவ சுதைச் சிற்பங்கள் உள்ளன.
சிகரம் ஷாலகார சிகரமாக இரு புறமும் மகா நாசிகையுடன் உள்ளது. மேலே ஐந்து ஸ்தூபிகள் உள்ளன.
கல்வெட்டுகள்
இக்கோவிலில் மொத்தம் 52 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதன் காலம் 10-ம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் ராஜராஜன் ஆட்சியில் தொடங்குகிறது.
- மூன்றாம் குலோத்துங்க சோழன் - 29ஆம் ஆட்சி ஆண்டு: பல ஊர்களைச் சேர்ந்த வணிக சமூகத்தினர் திருப்பசூருக்கு அருகே உள்ள கைவண்டுர் என்ற கிராமத்தைப் பெற்று வாசீஸ்வரர் கோவிலுக்கு "தன்மதாவளவன் திருமதில்" அமைக்க தேவதானமாக அளித்துள்ளனர். பிறகு கைவண்டுர் கிராமத்தின் பொறுப்பை மதுராந்தக பொட்டாபிச்சோழன் என்கிற தம்மு சிற்றரையன் என்பவரிடம் விட்டுவிட்டனர். இக்கல்வெட்டு மூலமே நமக்கு இத்திருமதிலின் பெயர் கிடைக்கிறது.
- அதிராஜேந்திர சோழன் - 3ஆம் ஆட்சி ஆண்டு: தன் தாயார் ராஜசேகரன் ராமாதேவி திருப்பாசூர் கோவிலில் தொடங்கிய தர்மங்களைச் செய்வதற்காக அரையன் இராஜராஜன் என்பவனது கோரிக்கையின் பெயரில் சேலை எனும் கிராமத்திற்கு வரிவிலக்கு தேவதானமாக அளிக்கப்பட்டது. இந்த தேவதானம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கைகொண்டசோழன் மாளிகையில் அரசனால் அளிக்கப்பட்டது.
- அச்சுத தேவ மகாராயர் - 3ஆம் ஆட்சி ஆண்டு: வணிகன் ஒருவன் தான் எழுப்பிய மண்டபத்தில் அமைத்த சிவலிங்கத்திற்குக் காணிக்கை அளிக்கும் செய்தி உள்ளது. இக்கல்வெட்டு கோவிலின் சிதிலமடைந்த மண்டபத்தைக் குறிக்கலாம். அந்த வணிகனின் பெயர் குறிப்பிடவில்லை.
- இரண்டாம் தேவராய மகாராயர் - 17ஆம் ஆட்சி ஆண்டு: இக்கல்வெட்டு கைவினைஞர்களுக்குக் கோயிலுக்குச் சொந்தமான பதினோரு வீடுகள் தானமாக அளிக்கப்படுவதைப் பதிவு செய்கிறது.
மேலும், 2026ஆம் ஆண்டு சிதிலமடைந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசின் ஒன்பதாம் மன்னரான இரண்டாம் தேவராயரின் துண்டு கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதை களப்பயண ஆய்வாளர் சரண்ராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் சந்திரா ஆகியோர் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.
ஆய்வாளர்களின் கருத்து
- "இக்கோவிலின் இறையனார் காபாலிக மூர்த்தியாய் சம்பந்தர் மற்றும் அப்பரால் வருணிக்கப்படுகிறார். காபாலிகர்களின் செயல்களான சாம்பல் பூசுதல், கபாலம் ஏந்தல், கையில் நாகத்தலை கொண்ட சூலம் ஏந்தல் போன்ற அடிகள் இருவரின் பதிகங்களிலும் விரவிக்கிடக்கின்றன. 'வாடற்றலையிற் பலிதேர்கையா ரூர்போலும்', 'செகுவா யுகுபற் றலைசேர் கையா ரூர்போலும்', 'நாகம் கச்சாக', 'பொங்காடரவம் புனலும் சடைமேல் பொலிவெய்த', 'ஆடல்புரியும் ஐவாய் அரவொன்று அரைச்சாத்தும்', 'ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்', 'பைவாய் நாகம் கோடல் எனும் பாசூரே' போன்ற சம்பந்தரின் பாடல் வரிகள் இவ்வூர் காபாலிகசமயம் விளங்கும் ஊராக இருந்ததையும், இறைவன் காபாலிக இலச்சினைகளோடு கூறப்படுவதால் இக்கோவில் காபாலிகர் தங்கி வழிபடும் தலமாக இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இதற்குச் சான்று பகிர்வதாய், அப்பரின் ஐந்தாம் திருமுறையில், 'படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகள்', 'நீரளவந்தனை பற்றி யாட்டுவார் பாசூர் அடிகளே', 'கையதோர் சூலத்தர்', 'பாறின் ஒட்டினர் பாசூர் அடிகளே', 'பாம்பும் ஆட்டுவார் பாசூர் அடிகளே' போன்ற வரிகள் அமைந்துள்ளன. 'மட்டவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால் இட்ட வேட்கையர் ஆகிய இருப்பவர்' என்ற அப்பரின் அடிகளால் மது, மங்கையை முதலாகக் கொண்ட காபாலிக தாந்திரீகம் இங்கு நிலவியதையும் 'வெற்றியூரை வேதியர் ஆவர்' எனக் குறிப்பிடுவதிலிருந்து திருவொற்றியூரின் சோம சித்தாந்த கபாலிக இறைவனே இங்கும் குடிகொண்டிருந்ததையும் உணரலாம்" என்று முனைவர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர் மற்றும் இரா. சிவானந்தம், கல்வெட்டு இதழ் - 80-ல் குறிப்பிடுகின்றனர்.
- "அப்பர் பெருமான் திருவொற்றியூரைத் தொழுது பாடி, பின்னர் அருகில் உள்ள திருப்பாசூர் என்னும் தலத்தை அடைந்தார். அங்குறை பரமனை அப்பர் பாடியதை சேக்கிழார் பின்வருமாறு குறிக்கிறார். முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து சிந்தை கரைந்துருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் சந்தம் நிறை நேரிசையும் முதலான தமிழ் பாடி எந்தையார் திருவருள் பெற்றேகுவார் வாகீசர் இப்பாடலிலிருந்து அப்பர் பெருமான் திருப்பாசூர் மீது மூன்று பதிகங்கள் பாடினார் என்று தெளிவாகிறது. இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள திருப்பாசூர் பதிகங்கள் இரண்டு மட்டுமே அப்பர் பாடியதாக உள்ளன. இவற்றில் “முந்தி மூவெயிலெய்த முதல்வனார்” என்னும் திருக்குறுந்தொகை உள்ளது. திருத்தாண்டகம் ஒன்றும் உள்ளது. ஆனால் சேக்கிழார் குறிக்கும் “சந்தம் நிறை நேரிசை” காணக் கிடைக்கவில்லை. மற்ற நேரிசைகளில் ஒன்றாக இதைக் கொள்ள முடியாது. திருப்பாசூர் மீது பாடியதாகவே சேக்கிழார் குறிக்கிறார். ஆதலின் அப்பர் பெருமான் திருப்பாசூர் மீது பாடிய திருநேரிசைப் பதிகம் மறைந்து போயிற்றோ என ஐயுற வேண்டியுள்ளது. பெரியபுராணத்துக்கு இணையிலாத உரை எழுதிய சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், இச்செய்யுளைக் குறித்து எழுதும்போது “நாயனார் இத்தலத்துப் பாடி அருளிய திநேரிசைப் பதிகம் கிடைத்திலது” என்று கூறியுள்ளார். “முதலான தமிழ்” என்று சேக்கிழார் குறிப்பதால் மேலும் சில பதிகங்களை அப்பர் பாடியிருக்கவேண்டும். அப்பதிகங்களும் கிடைத்தில என்பது சுப்பிரமணிய முதலியார் கருத்து. சேக்கிழர் காலத்து திருநேரிசைகள் சிலவாவது வழக்கிலிருக்கவேண்டுமென சிவக்கவிமணி குறித்துள்ளார். எப்படியிருப்பினும் திருப்பாசூர் திருநேரிசை மறைந்துபோயிற்று என்பதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது." என்று முனைவர் இரா. நாகசாமி, தமது பொய்யிலி மாலை புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
உசாத்துணைகள்
- திருப்பாசூர்ப்புராணம் - பூவை கலியாணசுந்தர முதலியார்.
- திருத்தலங்கள் வரலாறு - உ. வே. சாமிநாத ஐயர்.
- Middle Chola Temples - S. R. Balasubrahmanyam.
- பொய்யிலி மாலை - இரா. நாகசாமி.
அடிக்குறிப்புகள்
- தமிழக கல்வெட்டுகள் ஆண்டு 1896, கல்வெட்டு எண்: 406 & 407
- தமிழக கல்வெட்டுகள் ஆண்டு 1929 - 1930, கல்வெட்டு எண்: 107 - 157