under review

திருப்பனந்தாள் காசிமடம்

From Tamil Wiki
திருப்பனந்தாள் காசிமடம்
திருப்பனந்தாள் காசிமடம்

திருப்பனந்தாள் காசிமடம் தமிழ்நாட்டிலுள்ள சைவமடங்களில் ஒன்று. பொ.யு. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகளின் முயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றது. காசியில் இருக்கும் மடத்ததை இன்றும் இம்மடம் நிர்வகிக்கிறது.

இடம்

திருப்பனந்தாள் காசிமடம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் கீழவீதியில் அமைந்துள்ளது.

இம்மடத்தின் உள்ளே மேற்கில் 1903-ல் கட்டப்பட்ட ஶ்ரீ காசி விசுவநாதர் ஆலயம் உள்ளது. மடத்தின் வடக்கில் பொய்மை (குளம்) உள்ளது. அதன் நடுவில் ஶ்ரீ காசி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. வடநாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்ற வெண்பளிங்கு விநாயகரை அங்கு பிரதிஷ்டை செய்து, தினந்தோறும் பூசைகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன. தினந்தோறும் மடத்தில் பூசை நடைபெறும் போதும், மடத்து அலுவலகம் துவங்கும் போதும் முரசு (நஹரா) அடிப்பது வழக்கத்திலுள்ளது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, ஶ்ரீமடத்து அதிபர் விஜயதசமி பூசையை சிறப்புற நடத்தி, இரவில் சிவிகை ஏறி பட்டினப் பிரவேசமாக வரும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இப்போது சிவிகை ஏறுதல் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. நஹரா கொட்டுதல், சிவிகை ஏறி அம்பு போடும் விழாவினைக் காணல் ஆகியவை வடநாட்டு (காசி) அடிப்படையில் அமைந்தவை.

வரலாறு

பனசை காசிமடத்தைத் தோற்றுவித்தவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர். இவர் காசிப் பயணம் மேற்கொண்டபோது முகலாய மன்னர் அவுரங்கசீப்பை வாதப்போரில் வென்றார். அதற்கீடாகக் காசியில் கருடன் வட்டமிட்ட பகுதிகளைக் கொடையாகப் பெற்றார். அங்கு மடமொன்றை நிறுவினார். தமது குருநாதர் மாசிலாமணி தேசிகரின் ஆணைக்கிணங்க காசியிலேயே தங்கி வழிபாடுகளைச் செய்தார். 1720-ல் மடத்தின் ஆறாவது அதிபராகிய தில்லைநாயகத் தம்பிரான் சுவாமிகள் மடத்தின் தலைமையகத்தைத் திருப்பனந்தாளுக்கு மாற்றினார். காசியிலிருந்து இங்கு வந்து தொடங்கப்பெற்றதால் காசிமடம் என்றழைக்கப்பட்டது. காலப்போக்கில் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைமை மையமாகத் மாறியது.

காசிமடத்தின் அதிபரை 'எஜமான் சுவாமிகள்' என்று அழைப்பர். இம்மடத்தின் இருபதாம் பட்டத்து அதிபர் அருள்நந்தித்தம்பிரான் அடிகளார். 1960-ஆம் ஆண்டு காசித்திருமடத்தின் இளவரசாக முத்துக்குமாரசாமித் தம்பிரான் அமர்த்தப்பட்டு காசித்திருமடத்தின் நிர்வாகங்களைச் செய்து இருபதாம் பட்டத்தில் சிறப்புடன் விளங்கிய அதிபர் அருள்நந்தித் தம்பிரானின் அடிகளார் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். காசித் திருமடத்தின் கல்விப்பணிகள், இலக்கியப் பணிகள், அறக்கொடைகள் இவற்றைச் சிறப்புடன் நடத்த உழைத்தார். இவர் இளவரசாகப் பணியாற்றியபொழுது திருக்குறள் உரைக்கொத்து, கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகியன உரைநடை வடிவில் வெளிவந்தன. 11 ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவரசாகப் பணியாற்றினார். மே 16, 1972-ல் இருபதாம் பட்டத்து அதிபர் அருள்நந்தித்தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தியதும் 21-ம் அதிபராகத் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் பட்டம் பெற்றார்.

கல்விப் பணிகள்

திருப்பனந்தாள் காசிமடம் கல்லூரி

திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர்களாக விளங்கிய சைவப் பெரியோர்கள் தமிழுக்கும், சைவத்துக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்கள் தொண்டுக்கும் பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவியுள்ளனர். திருப்பனந்தாளிலும், திருவைகுண்டத்திலும் கலைக்கல்லூரி ஒன்றும், செந்தமிழ்க் கல்லூரி ஒன்றும், மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும், நடுநிலைப்பள்ளி ஒன்றும், தொடக்கப்பள்ளி ஒன்றும், சிறார் பள்ளி (English Medium School) ஒன்றும் உள்ளன. இஸ்லாமியர் ஆட்சியில் இஸ்லாமிய சமயமும் இஸ்லாமியர்களின் அரபி, உருது மொழிகளும் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் இஸ்லாமிய மன்னன் மதிக்கும்படி ஹிந்துஸ்தானி மொழியில் அவரிடம் உரையாடியவர் குமரகுருபரர்.

தமிழ் மொழியை, தமிழர் சமயத்தை வடநாட்டில் நிலைபெறச் செய்த பெருமை இம்மடத்திற்கே உண்டு. இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்துப் பாதுகாத்த வகையில் இத்திருமடம் முக்கியப் பங்கு வகித்தது.

குரமரகுருபரர் இதழ்

'ஶ்ரீ குமரகுருபரர்' என்னும் இதழ் இம்மடத்தின் வழியாக வெளிவரும் மாத இதழ். சைவ சமய விளக்கங்களையுடையதாகத் உள்ளது. இதற்கென ஒரு அச்சகத்தையும் மடத்தில் நிறுவியுள்ளனர்.

பிற பணிகள்

  • வடக்கே கேதாரம் முதல் தெற்கே குமரி வரை இம்மடத்தின் பொருளுதவி கொண்டு அன்னதானம் நடைபெற்று வருகிறது. 19-ம் பட்டத்தில் விளங்கிய சுவாமிநாத சுவாமிகள் ஆட்சியில், மடத்தின் முகப்பில் இரயில் தண்டவாளங்கள் அமைத்து வாகன்களில் உணவுப் பொருள்களை நிரப்பி 1 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள பந்தியில் அமர்ந்திருக்கும் சாதுக்களுக்கு அன்னம்பாலிப்பு செய்யப் பெற்றது.
  • 'ஆலயபூசைப் படிக்காசுநிதி" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வருவாய் இல்லாத திருக்கோயில்களில் திருவிளக்கேற்றுவதற்கும், அர்ச்சகர் ஊதியத்திற்கும் போதிய பொருளுதவியைச் செய்து வருகிறது.
  • 20-ம் பட்டத்தில் விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆட்சியில் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அறக்கட்டளைகள் நாடெங்கிலும் நிறுவப் பெற்று, கல்வி, உணவு, மருத்துவ உதவிகள் செய்ய வழி வகுக்கப்பட்டது. அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் நிறுவிய அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 533 (இதன் மதிப்பு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1.8 கோடி). 21-ம் பட்டத்தில் வீற்றிருந்த முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் வளர்த்தெடுத்த அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 810.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 19:53:38 IST