under review

திருநங்கையர் சமூக விழாக்கள்

From Tamil Wiki

திருநங்கையர் சமூகத்தினர் ஆறு வகை விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இவ்விழாக்கள் அவர்களின் முதன்மை தெய்வமான முர்கேவாலி மாதா முன்பு நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு விழாவிற்கும் பிற திருநங்கைகளை அழைத்து விருந்து வைக்கின்றனர். அனைவரும் பட்டுச்சேலைகள், நகைகள் அணிந்துக் கொண்டாடுவர். இவற்றை கரசூர் பதம்பாரதி ஆய்வு செய்து திருநங்கையர் சமூக வரைவியல் புத்தகத்தில் தொகுத்துள்ளார்.

பார்க்க: கரசூர் பத்மபாரதி

திருநங்கையர் சமூக விழாக்கள்

தத்து பூஜை

பார்க்க: தத்துபூஜை (சுவீகார விழா)

நிர்வாண பூஜை

பார்க்க: நிர்வாண பூஜை (சித்ரா பௌர்ணமி விழா)

பால் சொம்பு பூஜை

பார்க்க: பால் சொம்பு பூஜை (பால் சொம்பு பூஜை)

நாம் சடாய்த்தல் (பெயர் சூட்டல்)

நாம் சடாய்த்தல் சடங்கில் விதைத்தறிப்பு செய்துகொண்ட மகளும் (சேலா), தாயும்(குரு) திருமண விழாவில் வாழ்த்து பெறுவது போல் அனைவரிடமும் வாழ்த்து பெறுவர். பின் அதுவரை அழைத்து வந்த ஆண் பெயரை நீக்கி பெண் பெயர் ஒன்றை தாய் அரவாணி தேர்ந்தெடுத்துச் சூட்டுவார். அதனை மற்றவர்கள் கூவி அழைப்பர்.

வங்கியில் கணக்கு துவக்கம், சங்கத்தில் பதிதல், ஓட்டுரிமை பதிதல் என அனைத்திற்கும் புதிய பெயரே பயன்படுத்தப்படும். சிலர் பழைய பெயரை முழுமையாக நீக்க விரும்பாமல் பெண் பெயராக மாற்றி வைத்துக் கொள்வர்.

பெயர் சூட்டப்பட்டதும் தாயும் மகளும் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வர். அனைவரும் ஆடிப்பாடி இருவரையும் சுற்றிக் கும்மியடித்து ஆரவாரம் செய்வர். முன்பு ஆண் விதைத்தறிப்பு செய்து ஒரு வருடம் கழித்து தான் போட்டோ எடுக்கும் வழக்கமிருந்தது, சமீப காலங்களில் ஒரு மாதத்தில் எடுக்கின்றனர்.

வருஷ பூஜை (பிறந்தநாள் விழா)

வருஷ பூஜை விதைத்தறிப்பு செய்த மறு ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் சடங்கு. அன்று விதைத்தறிப்பு செய்தவர் குளித்து புதுப்புடவை அணிந்து அணிகலன்கள் அணிந்து தெய்வத்தை வணங்கி அனைவரிடமும் ஆசிர்வாதம் பெறுவார். அதன் பின் அனைவரும் அவருக்கு வரிசை தருவது வழக்கம். வாழைக்காய், உருளைக்கிழங்கு, பஜ்ஜி, கேசரி, சேவல்கறி தவிர்த்து மற்ற உணவுகளைச் சமைத்து விருந்து படைப்பர். இறுதியாக எல்லா ஊர்களுக்கும் சென்று கும்மியடித்து வசூல் செய்வர்.

நாயக் விழா (பஞ்சாயத்து தலைவரை நியமிக்கும் விழா)

நாயக் விழா பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் சடங்காக நிகழ்த்தப்படுகிறது. வாய்மொழியாக அனைவராலும் ஒருமித்த கருத்தோடு பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுப்பர். இவ்விழா மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். அனைத்து பெருநகரங்களிலும் வாழும் அரவாணிகள் வரவழைக்கப்படுவர். பெரிய திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுப்பர். அப்பகுதி நாயக் (பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்) அலங்காரம் செய்து மாதாவிற்கு பூஜை செய்வார். மேளம் அடித்துக் கொண்டிருக்கும் போது எண்ணெய் வைத்துக் கொண்ட பெரியவர்கள் (பிற பகுதி பஞ்சாயத்து தலைவர்கள்) தேர்ந்தெடுத்த தலைவர்களை மேடையில் போடப்பட்ட நாற்காலியில் அமர வைப்பர். வட இந்திய திருமணங்களில் மணமக்கள் முகங்களை மறைத்துவைப்பது போல் தலைவர்களின் முகமும் பூச்சரங்களால் மறைத்துவைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தலைவர்களுக்கும் சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலை, கன்னம், கைகளில் தடவி நலங்கு வைப்பர். நலங்கு செய்யும் பெரியவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், குங்குமம், புதுப்புடவை அன்பளிப்பாக கொடுக்கப்படும்.

பின் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரைச் சொல்லி பூச்சரங்களை நீக்கி முகத்தைக் காட்டுவர். அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். தலைவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்து 'பாம்படுத்தியம்மா’ எனக் கூற பதிலுக்கு பெரியவர்கள் 'ஜியோ’ என வாழ்த்துவர். அதே போல் வயதில் சிறியவர்கள் தலைவர்கள் காலில் விழுந்து வணங்குவர். சடங்கு முடிந்ததும் விருந்துண்டு மகிழ்வர். இவ்விழா தொடர்பான செலவுகள் அனைத்தையும் தலைவர்கள் ஏற்றுக்கொள்வர்.

உசாத்துணை

  • திருநங்கையர் - சமூக வரைவியல், கரசூர் பத்மபாரதி, தமிழினி, 2013.

நன்றி கரசூர் பத்மபாரதி


✅Finalised Page