under review

திருஈங்கோய்மலை எழுபது

From Tamil Wiki

திருஈங்கோய்மலை எழுபது (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) பதினோராம் திருமுறையில் இடம் பெற்ற சிற்றிலக்கிய நூல். ஈங்கோய் மலை சிவன்மீது நக்கீரதேவ நாயனாரால் பாடப்பட்டது.

ஆசிரியர்

திருஈங்கோய்மலை எழுபது நூலை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

எழுபது பாடல்களில் திருஈங்கோய்மலையின் வளமும், சிறப்பும் கூறப்படுகிறது. அணியழகு மிகுந்த நூல். சிவனுடைய பாடல்பெற்ற தலங்களில் மலை மீதிருக்கும் மிகச்சில கோயில்களில் ஒன்று. திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலைக்கருகில் காவிரியின் வடகரையில் திருஈங்கோய்மலை அமைந்துள்ளது.

திருஈங்கோய்மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோல அழகினையும் அற்புதங்களையும் குறிஞ்சி நிலப் பின்னணியில் நக்கீரதேவனாயனார் பாடியுள்ளார். வெண்பாக்களின் முதல் மூன்று அடிகளும் மலையின் அழகையும், சிறப்பையும் கூறுகின்றன. நான்காம் அடி இறைனைப் பாடுகிறது.

பாடல் நடை

ஓங்காரமாய் நின்றான்

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்
இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.

பலாச் சுளைகளைக் குரங்குகள் கொண்டுவந்து மக்கள் கையில் கொடுக்கும் மலை

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

உசாத்துணை


✅Finalised Page