under review

தாரணை

From Tamil Wiki

தாரணை திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. இது மனதை நிலை நிறுத்துதலைக் குறிக்கிறது. எட்டு வகையான யோகங்கள் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்களாகின்றனர். தாரணை இதில் ஆறாவது படிநிலையில் உள்ளது.

தாரணை

தாரணை உந்தி, இதயம், உச்சி என்னும் மூன்றிலும் மனதை நிலைநிறுத்தலைக் குறிக்கிறது. அதாவது கட்டுப்படுத்தப்பட்டு எங்கும் அலைபாயாது அசைவற்றிருக்கும் சித்தமே 'தாரணை' எனப்படும். மனதில் ஏற்படும் எண்ண அலைகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலை கொள்ளச் செய்யும் செயல் முறைதான் தாரணை எனப்படும். சித்தத்தில் இருந்துதான் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளைக் கொடுக்கும். இதுவே பொதுவாக 'தாரணாசக்தி' என அழைக்கப்படுகிறது. 12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.

  • திருமந்திரம்

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே

விளக்கம்: ஐம்பொறிகளால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஆளப்படும் உடலை ஐம்பூதங்களில் (மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம்) ஒடுக்கவேண்டும். அந்த ஐம்பூதங்களையும் ஐந்து தன்மாத்திரைகளில் (சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம்) அடக்க வேண்டும். ஐந்து தன்மாத்திரைகளையும் நான்கு அந்தக்கரணங்களில் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) ஒடுக்க வேண்டும். நான்கு அந்தக்கரணங்களையும் மாயையில் அடக்க வேண்டும். மாயையை ஆன்மாவில் அடக்கி ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்க வேண்டும். ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருப்பதே தாரணை ஆகும்.

  • திருமந்திரம்

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே - திருமந்திரம்

விளக்கம்: யாவரிடத்திலும் உள்ள மூலாதாரத்தில் ஒரு பெருஞ் செல்வம் உள்ளது. இருந்தும் அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் (திறக்கும் உபாயம் அறியாதவர்) அச்செல்வத்தை அடையமுடியாது. அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராணவாயுவை, அங்கு கும்பகம் செய்து கும்பித்த அவ்வாயுவின் மூலம் குண்டலினி சக்தியினை சுழுமுனை நாடி வழியாக மேலே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய அச் செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் வெளியே (புறத்தே) செலுத்தி மூடர் போல அல்லற்படுவர்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:39:16 IST