தாண்டவம், லாஸ்யம்
பரத நாட்டிய கரணங்களுள் ஆண்கள் ஆடும் நாட்டிய வகை "தாண்டவம்". ஆண் தெய்வங்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன் ஆகியோர் தாண்டவம் ஆடியதற்கான சான்று புராணங்களிலும், சமய நூல்களிலும் காணப்படுகிறது. இவற்றில் சிவ தாண்டவம் பிரபலமானது.
லாஸ்யம் என்பது பரத நடனத்தில் பெண்மைக்குரியது. பெண்கள் ஆடும் பரத நடனம் லாஸ்யம் எனச் சொல்லலாம். சிவ நடனத்தில் வேக நடனமாகிய தாண்டவமும், பெண்மை நடனமாகிய லாஸ்யமும் உண்டு. லாஸ்யம் பார்வதி தேவி ஆடியதற்கான குறிப்புகளும் உண்டு.
தாண்டவம்
பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தின் நான்காவது அத்தியாயத்தில் 'தண்டு’ என்ற தன் கணத்தின் மூலம் சிவன் பரத முனிவரின் நாடகக் குழுவினருக்குத் தாம் அந்தி வேளையில் ஆடும் ஆட்டங்களைக் கற்பிக்கச் செய்தார் என்றும் இப்படி தண்டு மூலம் கற்பிக்கப்பட்டதால் இக்கூத்திற்குத் தாண்டவம் என்று பெயர் எற்பட்டதென்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்நடனத்தில் நிகழ்த்தப்படும் வலிவான தட்டுகளாலும், அதிகப்படியான கால் வீச்சில் கடுமையாக இருப்பதால், இது பெரும்பாலும் ஆண்களால் ஆடப்படும் நாட்டியமாகும்.
தாண்டவ வகைகள்
தாண்டவ மொத்தம் ஏழு வகைகளாகும்.
- ஆனந்தத் தாண்டவம்
- சந்தியா தாண்டவம்
- உமா தாண்டவம்
- சிவ கௌரி தாண்டவம்
- காளிகா தாண்டவம்
- திரிபுர தாண்டவம்
- ஸம்கார தாண்டவம்
லாஸ்யம்
லலிதமாகவும், மெருதுவாகவும் ஆடப்படும் ஆட்டம் தாண்டவத்தில் இருந்து மாறுபட்டது. அதனை "லாஸ்யம்" என்றும் "லலிதம்" என்றும் அழைக்கின்றனர். சிவன் தாண்டவத்தை அருளியது போல், லாஸ்யத்தை தந்தது பார்வதி தேவி என்று நம்பப்படுகிறது. இதனைப் பற்றிய பாகுபாடு காளிதாசன் குறிப்புகளில் வருகிறது.
லாஸ்ய வகைகள்
தாண்டவத்தைப் போல் லாஸ்யமும் ஏழு வகைப்படும்.
- சுத்த லாஸ்யம்
- தேசி லாஸ்யம்
- பிரேரணா லாஸ்யம்
- பிரேரங்கணா லாஸ்யம்
- குண்டலி லாஸ்யம்
- தண்டிகா லாஸ்யம்
- கலச லாஸ்யம்
சுத்த லாஸ்ய வகைகள்
இவற்றுள் சுத்த லாஸ்யம் ஏழு வகைப்படும்.
- தட்சிணப் பிரமணம் - வலப்பக்கமாகச் சுழலுதல்
- வாமப் பிரமணம் - இடப்பக்கமாகச் சுழலுதல்
- லீலாப் பிரமணம் - விளையாட்டாகச் சுழலுதல்
- புஜங்கப் பிரமணம் - பாம்பு போலச் சுழன்று ஆடுதல்
- வித்யுத் பிரமணம் - மின்கொடி போல அசைந்து ஆடுதல்
- லதாப் பிரமணம் - கொடி போல அசைந்தாடல்
- ஊர்த்துவ தாண்டவம் - காலை மேலே தூக்கி நின்றாடுதல்
மேற் சொன்ன ஏழும் சிவன் ஆடிய நடன வகைகள்.
தேசி லாஸ்ய வகைகள்
தேசி லாஸ்யம் ஐந்து வகைப்படும்.
- பிரேரணா லாஸ்யம் - பார்வதி ஆடியவை
- பிரேரங்கணா லாஸ்யம் - கலைமகள் ஆடியவை
- குண்டலி லாஸ்யம் - திருமால் ஆடியவை
- தண்டிகா லாஸ்யம் - திருமகள் ஆடியவை
- கலச லாஸ்யம் - திருமகள் ஆடியவை
உசாத்துணை
- சிவ தாண்டவம் - இரா. இராமகிருஷ்ணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-May-2023, 14:21:00 IST