under review

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்

From Tamil Wiki
தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் (1936) மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் எழுதிய நாவல். இது தமிழகத்தில் அன்றிருந்த பொட்டுகட்டும் முறை அல்லது தேவதாசி முறையை சட்டபூர்வமாக ஒழிக்கவேண்டும் என்று குரல்கொடுக்கும் நாவல். காங்கிரஸிலும் பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றிய மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் சுயமரியாதை இயக்கத்தின் தீவிர பிரச்சாரகர்.

எழுத்து, பிரசுரம்

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் நாவல் 1936-ல் வெளிவந்தது. இந்நாவலை வெளியிட சிவகிரி ஜமீன்தாரிணி வெள்ளைத்துரைச்சி நாச்சியார் உதவினார். அவருடைய முன்னுரை,அறிஞர் சோமசுந்தர பாரதியாரின் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. நாவலின் பதிப்புரையில் ஆசிரியை இவ்வாறு கூறுகிறார். 'தேவதாசி முறையை ஒழிக்கவேண்டும்,தெய்வங்களின் பெயரால் பொட்டுகட்டும் அநாகரீக வழக்கத்தை ஒழித்துவிடவேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொன்னால் இப்போதும் முட்டுக்கட்டை போடுகிறவர்கள் யார் என்பதைக் கவனியுங்கள்.வைதிகர்கள் ஒருபுறம் இருக்கட்டும், பெரிய பெரிய சட்டநிபுணர்களான அரசியல் தலைவர்களே குறுக்கே விழுகிறார்களே. . இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். தேவதாசி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றம் அடையவேண்டும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதோடு மனைவி மக்களைத் திண்டாடச்செய்யும் வாலிபர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கவேண்டும் என்பதே இந்நாவலின் குறிக்கோளாகும்’

கதைச்சுருக்கம்

தேவதாசி குலத்தில் பிறந்து கல்வியிலும் கலைகளிலும் தேர்ந்த கமலாபுரம் போகசிந்தாமணியின் புத்திரிகளான காந்தா- கானவதி சகோதரிகளை நம்பி சொத்துக்களை இழந்து வறியவனாக ஆன ஒரு மைனருக்கு அக்குலத்திலேயே பிறந்த இளம்பெண்ணான விவேகவதி அறிவுரை சொல்லி உதவுகிறாள். பின்னர் தர்மபுரி ஜமீன்தார் சோமசேகரன் இவர்களிடம் வந்து சேர்கிறான். இவனுக்கும் சொர்ணபுரி ஜமீன்தார் மகள் ஞானசுந்தரிக்கும் நடந்த திருமணத்தில் காந்தா சகோதரிகள் கச்சேரிக்கு அழைக்கப்படுகிறார்கள். அச்சமயத்தில் அவர்களிடம் காதல்கொள்கிறான் சோமசேகரன். அவர்களிடம் சொத்துக்களை இழந்து மனைவியை பிரிந்து அவமானப்பட்டு வாழ்ந்து வருகிறான். ஞானசுந்தரியின் முயற்சியாலும் விவேகவதியின் அறிவுரையாலும் மனம்திருந்திய மைனரின் உதவியாலும் சோமசேகரன் மீட்கப்படுகிறான். காந்தா சகோதரிகளால் அவர்களின் சகோதரனின் மகள் விவேகவதி வெளியேற்றப்படுகிறாள். அவள் தாசிகளை மீட்கும் இயக்கத்தை முன்னெடுக்கிறாள். குணபூஷணி, ஞானசுந்தரி, விவேகவதி ஆகியோரின் முயற்சியால் திருச்சியில் நடைபெறும் சமூகச்சீர்திருத்த மாநாட்டில் தேவதாசிகள் முன்னேற்ற சங்கம் நிறுவப்படுகிறது. மாநாட்டில் விவேகவதி உரையாற்றுகிறாள். சதிர் என்னும் நடனமுறையே அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் என்று சொல்கிறாள். சட்டபூர்வமாக தாசிமுறை ஒழிக்கப்படவேண்டும் என அறைகூவுகிறாள்

நடை

இந்நாவல் சித்தரிப்புக்கு பதிலாக ஆசிரியர் கூற்று வடிவிலேயே நிகழ்வுகளையும் கதையையும் சொல்லும் பாணியில் அமைந்தது. "மைசூர் வித்வானுக்கு ரூபாய் 5000 கொடுத்துச் சங்கீதம் பயின்று பிரபலமடைந்திருக்கும் கமலாபுரம் போக சிந்தாமணியின் புத்திரிகளான காந்தா கானவதி சகோதரிகள் சங்கீதக் கச்சேரிகளுக்கு ஏக கிராக்கியாய் இருக்கிறது. பக்கத்து வீட்டுத் தாசிகளெல்லாம் பொறாமையால் புழுங்கி வேதனையடையும்படி காந்தா கானவதி வீட்டிற்குக் காரிலும் வண்டியிலும் கோச்சிலுமாகப் பல பிரபுக்கள் வருவதும், போவதும் சங்கீதம் கேட்பதுமாய் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் தந்திச் சேவகன் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தான்.

போகசிந்தாமணி உடனே கருணாகரனைக் கூப்பிட்டு, "இந்தத் தந்தியை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடிப்போய் வக்கீல் சுந்தரம் ஐயரிடத்தில் காட்டி விவரம் தெரிந்து கொண்டுவா. அவரையும் தங்கச்சிகள் வரச்சொன்னதாகச் சொல்லிவிட்டு வா," என்று கட்டளையிட்டாள். அக்கட்டளையைச் சிரமேல் தாங்கிய கருணாகரன் தந்தியை எடுத்துக்கொண்டு வக்கீல் வீட்டுக்கு ஓடினான். வீட்டைச் சமீபித்தவுடன் மரியாதையாய் அங்கவஸ்திரத்தைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றான்".

இலக்கிய இடம்

இந்நாவல் நேரடியாகவே பிரச்சார நோக்கம் கொண்டது. ஆகவே உதாரண கதாபாத்திரங்கள் வழியாக கருத்துக்களை சொற்பொழிவுகள், விவாதங்களின் வடிவில் முன்வைக்கிறது.தேவதாசி ஒழிப்பின்பொருட்டு எழுதப்பட்ட தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் அந்நோக்கம் நிறைவேறியபின் நெடுங்காலம் மறக்கப்பட்டிருந்தது. பின்னாளில் ஆய்வாளரான ஆ.இராவேங்கடாச்சலபதி அந்நாவலை தொடர்ந்து இலக்கியச்சூழலில் கவனப்படுத்தி வந்தார். அது அக்காலகட்டத்து சமூக உளநிலைகளின் ஆவணம் என்பது மட்டுமல்லாமல் பெண்நிலைவாத நோக்கிலும் வாசிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்

உசாத்துணை


✅Finalised Page