under review

தளிக்குளத்து மகாதேவர் கோவில் (தஞ்சாவூர்)

From Tamil Wiki

தளிக்குளத்து மகாதேவர் கோவில் தஞ்சை நகரில் இருந்த பழமையான சிவாலயங்களுள் ஒன்று. இதன் மூலவர் தளிக்குளத்து மகாதேவர். இத்திருக்கோவில் தேவாரம் பாடப்பட்ட தலங்களுள் ஒன்று.

பார்க்க: தஞ்சை நகர கோவில்கள்

தளிக்குளத்து மகாதேவர் கோவில்

தஞ்சை நகரில் அமைந்த தளிக்குளத்து மகாதேவர் கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை. தளிக்குளத்து மகாதேவர் கோவில் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. திருநாவுக்கரசர் திருவீழிமிழலைப் பதிகத்தில் 'தஞ்சை தளிக்குளத்தார்’ என இறைவனைக் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருஷேத்திரகோவையில் "குளம் மூன்றும் களம் அஞ்சும், பாடி நான்கும்" எனக் குறிப்பிடுகிறார். இக்கோவிலைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் கோவில் இருந்த இடத்தை பலவாறாகக் கூறுகின்றனர். பலர் தஞ்சையில் இருந்த தளிக்குளத்தை வேறு இடத்தில் சுட்டுகின்றனர். முன்னால் தளிக்குளமாக இருந்தது தான் பின்னாளில் பெரிய கோவிலாக மாறியது எனச் சொல்லும் ஆய்வாளர்களும் உண்டு.

ஆய்வாளர்கள் கருத்து

தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

"பிற்கால சோழர் வரலாறு" எழுதிய தி.வை. சதாசிவ பண்டாரத்தார் தஞ்சை தளிக்குளத்துக் கோவில் தான் இராஜராஜசோழனால் பெரிய கோவிலாக எடுத்துக் கட்டப்பட்டது எனக் குறிப்பிடுகிறார்.

கே.வி. சௌந்தரராஜன்

சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளம் தான் தளிக்குளம் எனக் குறிப்பிடுகிறார்.

பத்மாவதி

தஞ்சைப் பெரியகோவில் அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட துண்டுக் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி முதலாம் இராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டிய பிறகும் தளக்குளம் மகாதேவர் கோவில் சிறப்புடன் இருந்ததை நிறுவுகிறார். இவர் கூற்று மூலம் சோழர் காலத்திற்கு பின்னும் இக்கோவில் வழிபாட்டில் இருந்தது அறிய முடிகிறது.

குடவாயில் பாலசுப்ரமணியன்

குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள தொல்லியல் துறையினரின் அருங்காட்சிக் கூடத்தில் கிடைத்த நான்கு கல்வெட்டுத் துண்டுகள் மூலம் மகாதேவர் கோவில் இருந்ததை உறுதி செய்கிறார்.

கல்வெட்டு சான்றுகள்

முதல் கல்வெட்டு

மன்னன் ஒருவனின் நான்காவது ஆட்சி ஆண்டில் தஞ்சாவூர் தளிக்குளமுடைய மகாதேவர் கோவில், ஸளுக்கிகுலகாலத் தெரிந்தவேளம் என்னும் இடத்தில் வாழ்ந்த பொன்னாம்பலம் என்பவள் மூன்று சந்திப் பொழுதிலும் திருவிளக்கு எரிவதற்காக ஒரு விளக்கும், நெய்யும் அளித்த அறக்கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதிலுள்ள ஸளுக்கிகுலகாலன் என்னும் பெயர் இராஜராஜன் சூடியது என்று இதனை ஆய்வு செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் தன் தஞ்சாவூர் நூலில் குறிப்பிடுகிறார். பொ.யு. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சாசனம் தென்னாற்காட்டில் உள்ள நீமலி என்னும் ஊரை "சளுக்கி குலக்காலச் சதுர்வேதிமங்கலம்" என்று குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் "சளுக்கிகுலகாலன்" எனச் சொல்லி நான்காம் ஆட்சி ஆண்டு என்ற குறிப்பு வருவதால் இது முதலாம் இராஜேந்திர சோழனைக் குறிக்கிறது. இதனை ஆய்வு செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் இதில் வரும் "ஸளுக்கிகுலகாலத் தெரிந்த வேளம்" என்னும் குறிப்பு கங்கைக்கொண்ட சோழபுரத்தை (இராஜேந்திரனின் நான்காம் ஆட்சியாண்டில் இது உருவாகவில்லை) குறிக்கவில்லை என்றும் இவ்வேளம் தஞ்சாவூரில் இருந்த ஒன்றும் என்றும் குறிப்பிடுகிறார். இதன்மூலம் தஞ்சையில் உள்ள தளிக்குளத்து மகாதேவர் கோவில் இராஜராஜ சோழன் காலத்திற்கு பின்னும் வழிபாட்டில் இருந்தது என்னும் முடிவிற்கு வருகிறார்.

இரண்டாம் கல்வெட்டு

இக்கல்வெட்டு உருவத்திலும், உள்ளடக்கத்திலும், எழுத்தமைதியும் முதல் கல்வெட்டை ஒத்தே காணப்படுகிறது. எனவே இதனையும் இராஜேந்திர சோழனின் சாசனமாகவே கொள்ள இடமுள்ளது. மஞ்சுனத்தாள்வேளத்திலிருந்து மறைக்காட்டடிகள் என்ற பெண் நுந்தாவிளக்கொன்றுக்கு 24 காசும், உபையதேசி பெருநிரவியன் என்ற வணிகன் வைத்த 12 காசும், நெய் அளித்த சோழ மஹண்டை பெற்ற 12 காசும், இவை திருத்தம் பெற்று திருக்கோவிலுடைய கரம்பியன் ஸ்ரீ கண்டன் கண்டன் ஐயரான் நெய் அளிப்பதற்காக எழுதித் தந்த ஒப்பந்தம் இக்கல்வெட்டு

மூன்றாம் கல்வெட்டு

இக்கல்வெட்டின் எழுத்தமைதியும் இராஜராஜ, இராஜேந்திர சோழன் காலகட்டத்துடையதாக காணப்படுகிறது. முதல் இரண்டு கல்வெட்டு போல இதிலும் நான்காம் ஆண்டுச் சாசனம் உள்ளது. இக்கல்வெட்டு "தளிக்குளத்து மகாதேவர்" என்று குறிப்பிடுகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த சுஷசிகாமணிப் பல்லவரையன் வெண்ணிக்கூற்றத்து ஸ்ரீபூதிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோரிடமிருந்து நிலம் வாங்கி தளிக்குளத்து மகாதேவர் கோவிலில் சந்தி விளக்கு எரிப்பதற்காக அளித்துள்ளான் என்ற குறிப்பு உள்ளது.

நான்காம் கல்வெட்டு

இக்கல்வெட்டு இராஜராஜனின் தந்தை சுந்தரசோழரின் 11-ம் ஆட்சி ஆண்டில் (பொ.யு. 968-ல்) எழுதப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள பொன்னமரையர் அங்காடி வணிக மையத்தில் இருந்து தளிக்குளத்து மகாதேவருக்கு நந்தாவிளக்கு வைப்பதற்கு அளித்த கொடை பற்றி இச்சாசனம் குறிப்பிடுகிறது. இதில் நாகராஜன் என்பவரின் கையொப்பமும் உள்ளது.

வெண்ணாற்றின் வடகரை

தஞ்சாவூர் நகரில் உள்ள பள்ளிஅகரம் என்னும் இடத்தில் தளிக்கேஸ்வரர் ஆலயம் என்ற சிவாலயம் ஒன்றுள்ளது. அதன் குளம் தளிகேசர் குளம் என்றழைக்கப்படுகிறது. தற்போது அங்குள்ள கோவிலுக்கு இரண்டாம் சரபோஜி மன்னனின் மைத்துனர் சர்கேல் ராமோஜி சர்ஜேராவ் காட்கே திருப்பணி செய்துள்ளார். கட்டட அமைப்பு முழுவதும் மராட்டியர் கலைப்பாணியிலும் அதிலுள்ள நந்தி பல்லவர் அல்லது முற்காலச் சோழர் சிற்பக்கலையிலும் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள செப்பு திருமேனிகள் சோழர் காலத்தவை. வம்புலாஞ்சோலை, யாளி விண்ணகரம் போல் தளிக்குளத்து மகாதேவர் கோவிலும் நகரின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து பின்பு வெண்ணாற்றின் வடகரைக்குச் சென்றிருக்கலாம் என ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார்.

உசாத்துணை

  • தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் பதிப்பகம்


✅Finalised Page