under review

தமிழ் லா சுருக்கம்

From Tamil Wiki
தமிழ் லா சுருக்கம் - 1889

‘தமிழ் லா சுருக்கம்' (AN EPITOME OF LAW) என்பது பொதுயுகம் 1889-ல் வெளியான நூல். ஆர். வெங்கட சுப்பா ராவ் அவர்களால் தெலுங்கில் எழுதப்பட்டு, பின் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைக் குறிப்புகளைப் பற்றி விரிவாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் சட்ட நடைமுறை சார்ந்து வெளியான முன்னோடி நூல் இது.

பதிப்பு, வெளியீடு

AN EPITOME OF LAW எனப்படும் ‘தமிழ் லா சுருக்கம்', இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைக் குறிப்புகளைப் பற்றிய நூல். தமிழர்கள் இதுபற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய ஆர். வெங்கட சுப்பா ராவ் அவர்களால் தெலுங்கில் எழுதப்பட்டு பின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை அச்சிடும் லாரன்ஸ் அசிலம் அச்சகம் (THE LAWRENCE ASYLUM PRESS) இந்நூலை அச்சிட்டுள்ளது. 1889-ல் வெளியான இந்த நூலின் விலை ரூபாய் மூன்று.

உள்ளடக்கம்

இந்த நூலின் முகவுரையில் வெங்கட சுப்பா ராவ், “இந்தக்கிரந்தம் கொஞ்ச நாளைக்கு முன் தெலுங்கில் தயார் செய்யப்பட்டு விசேஷமாய் வாங்கப்பட்டது. தமிழிலும் வேண்டுமென்று அநேகர் கோரியபடியால் இப்போது இது அச்சிடப்பட்டிருக்கிறது.

இதில் நான்கு பாகங்கள் இருக்கின்றன. 1-வது பினல் கோட்டு சுருக்கம். 2-வது இந்தூ லா சுருக்கம். 3-வது கிராம உத்தியோகஸ்தர் விஷயம். 4-வது சில்லரை விஷயங்கள். இந்திந்த பாகங்களில் சேர்க்கப்பட்ட விஷயங்கள் அட்டவணையில் கண்டிருக்கின்றன.

சர்க்கார் சட்டங்களின் தர்ஜிமாக்கள் உள்ளபடி அச்சு போட்டு சுலபமாய் கிரந்தம் தயார் செய்யலாம். ஆனால், இதைக்கொண்டு ஜனங்கள் சங்கதிகளை நன்றாய் தெரிந்து கொள்ளமாட்டார்கள். ஆகையால், அநேக விஷயங்களைச் சேர்த்து சுருக்கமாய், எல்லோருக்கும் சுலபமாய் தெரியும்படி, இந்தக் கிரந்தம் எழுதப்பட்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூலின் பகுதிகள்

பினல்கோட் சுருக்கம்

பினல்கோட் சுருக்கம் என்னும் நூலின் முதல் பகுதியில் கீழ்காணும் குற்றங்கள் குறித்த செய்திகளும் அதற்கான தண்டனைகள் பற்றிய விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

  • குற்றங்கள்
  • பிராதுகள்
  • வியாச்சியங்கள்
  • கெட்ட எண்ணம்
  • பலர் சேர்ந்து குற்றஞ்செய்தல்
  • குற்றத்துக்கு கும்மக்கு செய்தல்
  • குற்றம் செய்வதற்கு பிரயத்தினப்படுதல்
  • அதிகாரியினுடைய கட்டளை தப்பு
  • தற்செயல்
  • ஆபத்து பால்லியம்
  • பைத்தியம்
  • மயக்கம்
  • சம்மதி
  • பயம்
  • ஆத்ம சம்ரக்ஷணை
  • குற்றவாளிகளோடு ராஜீ செய்து கொள்வது
  • குற்றங்களையும் குற்றவாளிகளையும் மறைத்தல்
  • தண்ட னைகள்
  • சர்க்காருக்கு விரோதமாய் யுத்தம் செய்தல்
  • கூட்டம் கூடுதல், கலகம் செய்தல்
  • ஜனங்களுடைய க்ஷேமத்தையும் சுகத்தையும் கெடுத்தல்
  • மத விஷயமான குற்றங்கள்
  • லஞ்சம், சிபாரிசு, சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அக்கிரமம், அநியாயம் செய்தல்
  • சர்க்கார் உத்தியோகஸ்தருடைய அதிகாரத்தை அலக்ஷியம் செய்தல்
  • ஆள் மாறாட்டம்
  • பொய் சாட்சியம்
  • போர்ஜரீ
  • பொய் பிராதுகள்
  • பொய் வழக்குகள்
  • சொத்தை மறைத்தல்
  • பலாத்காரம் செய்து சொத்தை வாங்கிக்கொள்ளுதல்
  • களவு குற்றம்
  • களவு சொத்து
  • கொள்ளை
  • சொத்தை அபகரித்தல்
  • நம்பிக்கைத் துரோகம், மோசம்
  • கள்ள நாணயங்கள்
  • கள்ள ஸ்டாம்புகள்
  • கள்ள நிறைகள், கள்ள அளவுகள்
  • கெடுதி
  • அக்கிரமமாய் பிரவேசித்தல்
  • கூனி குற்றம்
  • தற்கொலை
  • சிசுஹத்தி முதலியவைகள்
  • துன்பம் உண்டுபண்ணுதல்
  • அக்கிரமமாய் தடுத்தலும், அடைத்தலும்
  • தாக்குதல்
  • அக்கிரமமாய் பயப்படுத்துதல்
  • மனிதர்களைத் திருடுதல்
  • பிள்ளைகளை விற்பது
  • பலவந்தப்படுத்தி வேலை செய்வித்தல்
  • துராக்கிரதமான புணர்ச்சி
  • மிருகங்களோடு புணர்தல்
  • விபசாரம்
  • அவதூறு
  • உடன்படிக்கைத் தவறுதல்
இந்தூ லா சுருக்கம்
  • விவாகம்
  • ஸ்வீகாரம் அதாவது தத்து
  • மைனர்களின் சவரக்ஷணை
  • சுவார்ச்சிதம், பிதுரார்ச்சிதம்
  • கடன்
  • தானம், உயில்
  • ஜீவனாம்சம்
  • விபாகம் வாரிசு பாத்தியதை
  • ஸ்திரீதனம்
கிராம உத்தியோகஸ்தர் விஷயம்

‘கிராம உத்தியோகஸ்தர் விஷயம்’ என்னும் மூன்றாம் பகுதியில், கிராமப் பணியாளர்கள் தொடர்பான சட்ட விதிமுறைகள், கிராம முன்சீபுகளின் அதிகாரங்கள், கிராமப் பஞ்சாயத்து, குற்ற விசாரணை, பரம்பரை பாத்திய உரிமை போன்றவை பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சில்லரை விஷயங்கள்

நான்காம் பகுதியான ‘சில்லரை விஷயங்கள்’ என்னும் பகுதியில், சிவில் ஜெயில், இன்சால்வெண்டு, சிவில் அப்பீல், கிரிமினல் அப்பீல், வக்காலத்து நாமா, பாபர் வியாச்சியங்கள் போன்றவை குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

நூலில் இருந்து சில பகுதிகள்

பினல்கோட் சுருக்கம்
  • ஒருவனைக் காப்பராப் படுத்தவேண்டுமென்றாவது, அக்கிரமமாய் ஒருவனைக்கொண்டு ஏதாவது வேலை செய்விக்கவேண்டுமென்றாவது, அல்லது ஒருவன் கிரமமாய் செய்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டு விடும்படி செய்ய வேண்டுமென்றாவது, அவனுடைய அல்லது அவனைச் சேர்ந்தவருடைய சரீரத்துக்கு, பேருக்கு, அல்லது சொத்துக்கு கெடுதி உண்டுபண்ணுகிறேனென்று பயப்படுத்துதல் - 506-வது செக்ஷன்படி குற்றமாகிறது.
  • ஒருவன்மேல் அல்லது அவனைச் சேர்ந்தவர்களின்மேல் கடவுளுக்கு கோபம் வரும்படி செய்கிறேனென்று பயப்படுத்தி அவனைக்கொண்டு ஏதாவது அக்கிரமமான வேலையை செய்வித்தல், அல்லது அவன் கிரமமாய் செய்துகொண்டிருக்கிற வேலையை செய்யாமல் விட்டு விடும்படி செய்தல், 508-வது செக்ஷன்படி குற்றமாகும். இதற்கு 1 வருஷம்வரைக்கும் காவலாவது, அபராதமாவது, இரண்டுமாவது விதிக்கப்படும்.
  • வேசித்தனம் முதலிய விஷயங்களுக்காக பிள்ளைகளை விற்பனை செய்வதும், விலைக்கு வாங்குவதும் ஆகிய இவைகளுக்கு 372, 373-வது செக்ஷன்களின்படி 10 வருஷம்வரைக்கும் காவலும், அபராதமும் விதிக்கப்படும்.
  • பசுக்கள், எருமைகள், கழுதைகள், முதலிய மிருகங்களோடு புணர்தலும், புருஷர்களோடு புருஷர்கள் புணர்தலும் 37ஆவது செக்ஷன்படி குற்றமாகிறது. இதற்கு ஆயுசுபரியந்தம் தண்ணீர்மேலேற்றுவதாவது, 10 வருஷம் வரைக்கும் காவலாவது, விதிக்கப்படும். அபராதமும் போடப்படும்.
  • ஒரு ஸ்திரீயை வெட்கப்படுத்துவதற்காக ஏதாவது பேசுதல், தொனிசெய்தல், சேஷ்டை செய்தல், ஜாடை பண்ணுதல், ஏதாவது காட்டுதல் அல்லது அந்த ஸ்திரீயிருக்கும் ஏகாந்த இடத்தில் அக்கிரமமாக பிரவேசித்தல் - ஆகிய இந்தக் குற்றங்களுக்கு 509-வது செக்ஷன்படி 1 வருஷம் வரைக்கும் வெறுங்காவலாவது அபராதமாவது அல்லது இரண்டுமாவது விதிக்கப்படும்.
இந்தூ லா சுருக்கம்
  • தந்தையினுடைய சம்மதமில்லாமல், தாயாவது வேறுயாராவது, பெண்பிள்ளைகளுக்கு விவாகம் செய்யக் கூடாது. தாயாருடைய இஷ்டமில்லாமல், பெண்ணுக்கு தந்தை விவாகம் செய்யலாம். அவிபக்த குடும்பத்திலுள்ள பெண்பிள்ளைக்கு விவாகம் செய்யும் விஷயத்தில், பெண்ணினுடைய தாயாரைக்காட்டிலும் தமையனுக்கும், சிறிய தகப்பனாருக்கும், பெரிய தகப்பனாருக்கும், பாட்டனாருக்கும், விசேஷ அதிகாரமுண்டு.
  • பெண்ணை - பைத்தியக்காரனுக்காவது, நபும்சகனுக்காவது, கொடுத்து விவாகம் செய்தபோதிலும், தர்ம சாஸ்திரத்தின்படி அப்படிப்பட்ட விவாகம் செல்லுகிறது.
  • புஷ்பவதியாகிறவரைக்கும் பெண்சாதி தாய் வீட்டிலிருப்பது ஆசாரமாகயிருக்கிறது. ஆகையால் அதற்கு முன் பெண்சாதியை தன்னிடத்தில் அனுப்பவேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்வதற்கு புருஷனுக்கு ஹக்கு இல்லை. புஷ்பவதியானபிறகு புருஷனிடத்தில் இருப்பதற்கு, பெண்சாதி கடமைப்பட்டிருக்கிறாள்.
  • புருஷர்கள் வேண்டியவ்வளவு பேர் பெண்சாதிகளை கலியாணம் செய்துக்கொள்ளலாம். ஆனபோதிலும், பெண் சாதி பிழைத்திருக்கும்போது மற்றொருபெண்சாதியை தகுந்தகாரணமில்லாமல் கலியாணம் பண்ணிக்கொள்வது, ஜனங்களால் தூஷிக்கப்படும்.
  • புருஷன் பிழைத்திருக்கும்போது, பெண்சாதி மற்றொருபுருஷனை கலியாணம் பண்ணிக்கொள்ளக்கூடாது. எனக்கு இந்த புருஷன் வேண்டாமென்று சொல்வதற்கும் பெண்சாதிக்கு ஹக்கு இல்லை.
  • புருஷனிடத்தில் இருக்கமாட்டேன் என்று பெண்சாதி திரஸ்காரம் செய்தால் புருஷன், அவள்பேரில் தாவா செய்து தன்னிடத்திலிருக்கும்படி டிக்ரீ அடையலாம். அப்போதும் இருக்கமாட்டேனென்று சொன்னால், கோர்ட்டார் பெண்சாதியை புருஷனிடத்திற்கு பலவந்தமாய் அனுப்பமாட்டார்கள். ஆனால், நியாயமென்று தோன்றினால், அவளுடைய சொத்தை ஜப்திசெய்து அவளை காவலில் வைப்பார்கள்.

அக்காலக் குற்றங்கள், குற்ற நடைமுறைகள், அதற்கான தண்டனைகள் பற்றிய விவரங்கள் மிக விரிவாக இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் சட்ட நடைமுறை சார்ந்து வெளியான அந்தக் காலத்து முன்னோடி நூல் இது.

உசாத்துணை

தமிழ் லா சுருக்கம்: தமிழ் இணைய மின்னூலகம்


✅Finalised Page