under review

தமிழ்நாட்டில் பெளத்தம்

From Tamil Wiki
புத்தர் சிலை (நன்றி மயிலை சீனி வேங்கடசாமி)

பொ.மு. 5-ம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலும் பரவியது.

தமிழகத்தில் பெளத்தத்தின் வரவு

தமிழகத்தில் பெளத்தம் தோன்றிய காலத்திற்கான சான்றுகளை கல்வெட்டுக்கள், இலக்கியம் மூலம் அறியலாம்.

கல்வெட்டுச் சான்று

அசோகரின் (பொ.மு. 273 - 232) கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு தமிழகத்தில் பெளத்தம் பற்றிய செய்திகளுக்கு உதவுகின்றன. சௌராஷ்டிர தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துக்கருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனம் (Edict ii), பெஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற சாசனம் (Rock Edict iii) ஆகிய இரு சாசனங்கள் வழி பொ.மு 3-ம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ் நாட்டில் வந்தது என்றும் இதனை இங்கு பரப்பியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் மற்றும் அவரைச் சேர்ந்த தலைமுறைகளும் என அறியலாம்.

இலக்கியச்சான்றுகள்

  • கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருப்பதால் பொ.யு 1-ம் அல்லது 2-வது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது எனலாம்.
  • கடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகாரங்களில் இந்த மதத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன.
  • பௌத்தமதப் புலவர்கள் இயற்றிய செய்யுட்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுள் காணப்படுகின்றன.
  • மணிமேகலையை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனாரின் செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இளம்போதியார் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவர் இயற்றிய செய்யுள் நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72-ம் பாட்டாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

பௌத்த நூல்கள்

மகாவம்சம், தீபவம்சம் என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்தமதம் வந்த வரலாற்றையும், அது பரவிய வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. அசோக மன்னர் காலத்தில் மகேந்திரராலும் அவரைச்சேர்ந்த ஐந்து பிக்குகளாலும் பொ.மு 250-ல் இலங்கைத்தீவில் பௌத்தமதம் பரவியது, அதே காலத்தில் இலங்கையையடுத்த தமிழ் நாட்டிலும் வந்தது.

அரிட்டாபட்டி

பாண்டி நாட்டுக் குகைகளில் ஒன்றான அரிட்டாபட்டி என்னும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச்செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்ததாக நம்பப்படுவதாக மயிலை சீனி வேங்கடசாமி தன் "பெளத்தமும் தமிழும்" என்ற நூலில் கூறுகிறார்.

தமிழகத்தில் பௌத்தமத வளர்ச்சி

  • பௌத்தமதம் தமிழ் நாட்டில் வளார்ச்சி பற்றிய செய்தியை சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிரப்பிரப்பந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியலாம்.
  • பெளத்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்பது பௌத்த பிக்குகளின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு பற்பல நாடுகளிலும் சென்று இம்மதக்கொள்கையைப் பரவச்செய்தது போலவே, தமிழ் நாட்டிலும் பரப்பினர்.
  • தமிழ் நாட்டின் அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினர்.
  • மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளருக்கு இலவசமாக மருத்துவம் செய்தனர்.
  • தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையும் கற்பித்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டு மக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச்செய்து, திரிபிடகம், புத்தஜாதகக் கதைகள், புத்தசரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்தனர்.
  • குருடர், செவிடர், முடவர், ஏழைகளுக்கு உணவளிக்க அரசர், செல்வந்தர்களின் உதவியோடு அறச்சாலைகளை நிறுவினர்.
  • சாதி, மத பாகுபாடின்றி மதத்தைப் பரப்பியதால் எல்லாத் தரப்பினரும் அணுக ஏற்றதாயிருந்தது.

தமிழகத்தில் பௌத்தத்தின் மறைவு

சிதிலமடைந்த பெளத்த மடம்: பல்லவனேஸ்வரம் (நன்றி ஷாரன்)
  • பொ.மு. 3-ம் நூற்றாண்டில் பௌத்தம் தமிழ்நாடு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களான ஜைன மதம், பிராமண மதம் எனப்படும் வைதீக மதம், பூரணன் என்பவரை வழிப்பட்டொழுகும் ஆசீவக மதம் ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் தமிழ் நாட்டிற்கு வந்தன. வடநாட்டு மதங்களினின்று வேறுபட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர்கள் வழிபட்டிருந்தனர். இம்மதங்களுக்கிடையே நடைபெற்ற தொடர் பூசல்களாலும், சமயப்போர்களாலும் பெளத்த மதம் பாதிக்கப்பட்டது.
  • ஹீனயானம், மகாயானம் என்னும் இரண்டு பிரிவுகள் பெளத்தத்தில் தோன்றின. சிராவகயானம், மகாயானம், மந்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறியலாம். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக்குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக்கொண்டதாலும் பெளத்தத்தின் வளர்ச்சி குன்றியது.
  • பொ.யு. 4-ம் நூற்றாண்டில் ஜைன மதம் செல்வாக்குப் பெற்று பௌத்தக் கோயில்கள் ஜைனக்கோயில்களாக மாற்றப்பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார்.
  • பொ.யு. 4-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் வைதீக மதம் தன் கொள்கைகளைத் தளர்த்தி வலிமை பெறத்தொடங்கி ஜைனமதத்தை வீழ்த்தியது. இக்காலத்தில் பௌத்த மதம் முற்றும் மறைந்தது.
  • பொ.யு. 7-ம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் எழுச்சி, சம்பந்தர், மணிவாசகர், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்களின் சேவையாலும் இந்து மதம் வேரூன்றியது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்து பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
  • இலங்கை மன்னன் சாகித்ய பண்டித பராக்கிரம பாகு பொ.யு. 1266-ல் சோழ தேசத்திலிருந்து பௌத்த பிக்குகளை இலங்கைக்கு வர வழைத்துப் பௌத்த மதத்தைப் பரப்பினான் என்ற செய்தியின் வழி பொ.யு. 13-ம் நூற்றாண்டில், தமிழ் நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என அறியலாம். பொ.யு. பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டின் சில இடங்களில் பௌத்தமும் பௌத்தப்பள்ளிகளும் இருந்துவந்தன. நாளடைவில் பௌத்தம் தமிழ் நாட்டில் மறைந்தும், மறக்கவும்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page