under review

தமிழ்ச் சுடர்மணிகள்

From Tamil Wiki
தமிழ்ச்சுடர்மணிகள்

தமிழ்ச்சுடர் மணிகள் (1949) எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய நூல். தமிழிலக்கியத்தின் தலைமகன்கள் என்று சொல்லத்தக்க கவிஞர்கள் மற்றும் அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் இவை. வையாபுரிப் பிள்ளையின் ஆய்வல்லாத நூல்களில் முதன்மையானது என இது கருதப்படுகிறது

எழுத்து, வெளியீடு

எஸ்.வையாபுரிப் பிள்ளை செந்தமிழ், சித்திரவாசகம், கலைமகள், ஈழகேசரி, குமரிமலர், வசந்தம் ஆகிய இதழ்களில் 1940- முதல் எழுதிய கட்டுரைகள் குமரிமலர் காரியாலயம் பதிப்பகத்தால் 1949-ல் நூல் வடிவம் பெற்றன. 1948-ல் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் எஸ்.வையாபுரிப் பிள்ளை இதில் வள்ளுவர் பற்றி அவர் எழுதிய கருத்துக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அளித்த மறுப்பை பதிவுசெய்து ஆனால் தன்னுடைய ஆய்வுமுடிவுகளை மறுக்கும் சான்றுகள் எதையும் அவர் தரவில்லை என்கிறார். இந்நூல்பதிப்பிற்கு உதவிய மு.சண்முகம் பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கிறார்.

உள்ளடக்கம்

தமிழ்ச்சுடர் மணிகள் தமிழிலக்கியத்தின் சுடர்மணிகள் என வையாபுரிப்பிள்ளை கருதும் 7- கவிஞர்கள் 8-அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியது

  • தொல்காப்பியர்
  • கபிலர்
  • திருவள்ளுவர்
  • மாணிக்கவாசகர்
  • கம்பர்
  • புகழேந்திப்புலவர்
  • பவணந்தி முனிவர்
  • பரிமேலழகர்
  • மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • சி.வை.தாமோதரம் பிள்ளை
  • ஆசிரியர் சுந்தரம்பிள்ளை
  • சி.கனகசபைப் பிள்ளை
  • மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர்
  • மகாவித்வான் ரா.ராகவையங்கார்
  • மகாகவி சுப்ரமணிய பாரதியார்
  • கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை

தமிழ்ச்சுடர் மணிகள் மேற்குறிப்பிட்ட கவிஞர்களின் காலம், வாழ்க்கை ஆகியவற்றை அகச்சான்றுகள் மற்றும் புறச்சான்றுகளைக் கொண்டு விரிவாக ஆராய்கிறது. அவர்களின் கவிதைகளின் மெய்ப்பொருள் உணர்ச்சி ஆகியவற்றை விவரிக்கிறது.

இலக்கிய இடம்

எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நூல்களில் முதன்மையானது என ஆய்வாளர்களாலும் பொதுவாசகர்களாலும் கருதப்படும் நூல் இது. இதில் அவர் தொல்காப்பியர் ,வள்ளுவர் முதலியோர் வாழ்ந்த காலத்தை கணிக்கிறார். அவர்களின் நூல்களில் பயின்றுவரும் சொற்களும் சொல்லாட்சிகளும் பிறநூல்களில் கையாளப்பட்டிருப்பது, அந்நூல்களின் உள்ளடக்கத்திற்கும் பிறநூல்களுக்குமான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் செய்யும் ஆய்வு புறவயமான நெறி கொண்டது. விவாதத்திற்கும் மேலும் தெளிவுறுவதற்கும் அழைப்பது. படிப்படியாக தரவுகள் வழியாக அவர் முடிவை நோக்கி செல்லும் முறை தமிழுக்கு புதியது. மாணிக்கவாசகரும் மலைநாடும் போன்ற கட்டுரைகள் புதிய கோணங்களை திறப்பவை. இந்நூலில் கம்பனின் காவியம் அரங்கேறுவது பற்றிய பகுதி ஒரு செவ்வியல்புனைகதைக்குரிய அழகும் வீச்சும் கொண்டது. ஓர் இலக்கிய ஆய்வுநூல் என்னும் வகையில் தமிழில் உருவான மிகச்சிறந்த நூல்களில் ஒன்றாக தமிழ்ச்சுடர்மணிகள் கருதப்படுகிறது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:58 IST