under review

தமிழ்க்கவி

From Tamil Wiki
தமிழ்க்கவி
தமிழ்க்கவி

தமிழ்க்கவி (1947 ஜுலை 19) ஈழத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். களச்செயற்பட்டாளர். விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆண்டுகள் கலை - பண்பாட்டு துறையில் பணியாற்றியவர். வீதி மற்றும் மேடை நாடகங்கள், வானொலி - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேச்சு, கவிதை, தொடர் என்று பல களங்களில் இயங்கியவர். இவர் மகப்பேற்று மருத்துவிச்சியாகவும் பல காலம் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த வவுனியா மாவட்டத்தில் சின்னப்புதுக்களம் என்ற கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஜூலை 19-ம் திகதி, கந்தப்பு - லட்சுமி தம்பதிகளுக்கு தமிழ்க்கவி பிறந்தார். இவரது இயற்பெயர் தமயந்தி. தனது ஆரம்பக் கல்வியை வவுனியா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர் கல்வியை வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.

தனி வாழ்க்கை

1962-ம் ஆண்டு ஜனவரி 17-ம் திகதி சிவசுந்தரலிங்கம் என்பவருக்கும் தமிழ்க்கவிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். இவர்களில் இருவர் போரிலும் ஒருவர் நோய்த் தாக்கத்தினாலும் உயிரிழந்தார்கள்.

தமிழ்க்கவி தற்போது கிளிநொச்சியில் தனியாக வசிக்கிறார்.

அரசியல் வாழ்க்கை

சமூக மட்டத்தில் பொது அமைப்புக்களுடன் இணைந்து இயங்கிய தமிழ்க்கவிக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கம் உண்டானது. 1991-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் திகதி தன்னை முழுமையாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டார்.

களச் செயற்பாடு

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட காலங்களில் தமயந்திக்கு “தமிழ்க்கவி” என்ற பெயர் உருவானது. அங்கு அவர் கலை - பண்பாட்டு தளங்களில் செயற்பட்டார். பெண்களுகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் முதன்மைப் பணிகளை முன்னெடுத்தார். அரசியல் - மேடை பேச்சுக்கள், நாடகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கினார்.

ஈழநாதம், வெளிச்சம், சுதந்திரப் பறவைகள், நாற்று, சாளரம், போர்க்களம், எரிமலை, உலகத்தமிழர், ஈழமுரசு, புலிகளின் குரல், நிதர்சனம் தொலைக்காட்சி ஆகியவற்றில் தமிழக்கவியின் நூற்றுக்கணக்கான படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

கல்வி

விடுதலைப்புலிகள் அமைப்பில் இயங்கிய காலகட்டத்தில், இதழியல் - உளவியல் மற்றும் நூலகவியல் தொடர்பான வெளிவாரிக் கல்வியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கவி நிறைவுசெய்தார்.

தென்னிலங்கையில் ராகம என்ற இடத்தில் மகப்பேற்று தாதிக்குரிய பயற்சியை கற்றார். போர்க் காலட்டத்தில் - மருத்துவ வசதிகள் இல்லாது பிரசவ மரணங்கள் அதிகரித்த சூழ்நிலைகளில் - வன்னிப் பெருநிலப்பிரதேசத்தில், தமிழ்க்கவி சுமார் நூறுக்கும் மேற்பட்ட மகப்பேறுகளுக்கு மருத்துவிச்சியாகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

திருமணத்துக்கு முன்பு தனக்கு வாசிப்பிலிருந்த தீராத ஆர்வத்தை அவதானித்த தந்தையார் கந்தப்பு, வாங்கிக் கொடுத்த கல்கி, ஆனந்தவிகடன், சுடர் போன்ற இதழ்களும் சுதந்திரன், வீரகேசரி என்ற பத்திரிகைகளும் தன்னை எழுதத் தூண்டின என்கிறார் தமிழ்க்கவி.

தமிழ்கவி தனது 14-வது வயதில் எழுதிய "தாய்" - என்ற கவிதை, ஐந்துவருடங்களுக்குப் பின்னர் கொழும்பு - வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்ததது.

2000-த்துக்குப் பின்னர், தமிழ்க்கவியின் முதலாவது நாவல் “இனி வானம் வெளிச்சிடும்“ வெளிவந்தது. இந்த நாவல் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றது. இதனால் கூடிய கவனிப்பு இந்த நாவலுக்கு உண்டாகியது. தொடர்ந்து, தமிழ்க்கவியின் இரண்டாவது நாவல் “இருள் இனி விலகும்“ வெளிவந்தது. அதுவும் பரவலாக வாசிக்கப்பட்டது.

தன் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்த தமிழ்க்கவி, வன்னியில் நடந்த இறுதிப்போரின் முடிவில், பிற போராளிகளோடு முள்ளிவாய்க்கால் வழியாகப் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தார். தொடர்ந்து இரண்டாண்டுகள் சிறைவாழ்க்கை. புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகியவர் வவுனியாவில் குடியேறினார். அங்கிருந்தபோதே அவருடைய “ஊழிக்காலம்" என்ற நாவல் "தமிழினி" பதிப்பகத்தின் ஊடாக வெளியானது. அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான போரையும் அதில் பொதுமக்கள் அனுபவித்த அவலத்தையும் "ஊழிக்காலம்" மையப்படுத்திப் பேசியது. இதனால், இந்த நாவல் மூலம் தமிழ்க்கவி இன்னொரு புதிய தளத்தை அறிமுகமாக்கினார். குறிப்பாக, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் "ஊழிக்காலம்" அதிகமாக வாசிப்புக்குள்ளாகிப் பேசப்பட்டது.

இலக்கிய இடம்

வரலாற்றுக்கு தமிழ்க்கவி அளித்துவரும் அரசியல் பங்களிப்பும் சமூகவியல் பங்களிப்புகளும் அவருடைய வாழ்க்கையின் வழியானவையே. அவருடைய இலக்கியமும்கூட அதன்வழியாக மெய்ச் சம்பவங்களையும் மெய்யான பாத்திரங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்டவை. அதனால், அவற்றுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமும் சமூகப் பெறுமானமும் உண்டு. தமிழக்கவியின் புறவயமான - நேரடியான - எழுத்துக்களாலான நாவல்கள், மெய்யறியத் துணியும் மனதில் அக விழிப்புகளை ஏற்படுத்துகின்றன. பலநேரங்களில், அவரின் வாழ்வின் வழியாக பிரதிகளை விரித்துப் பார்க்கவேண்டிய எடைமிகுந்த அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

“தமிழ்க்கவியின் எழுத்துக்கள் பலவகையான விமர்சனங்களுக்கும் இடமளிக்கும் தன்மையைக் கொண்டவையே. தொடர்ந்தும் அவருடைய பேனா எழுதிக்கொண்டேயிருக்கிறது. அவருணர்ந்த வாழ்க்கையும் அவர் சந்தித்த வரலாறுமே அவருடைய எழுத்துகள். அவற்றின் குணம் அவை வெளிப்படுத்தத் துடிக்கும் உண்மைகளே. அது வேறொன்றுமல்ல. தமிழ்க்கவியின் குணமே. அந்தக் குணம் பெண் படைப்பாளிகளின் அடையாளத்தை மேலும் துலக்கமுற வைக்கிறது. கூடவே பெண் அடையாளத்திலும் பெண் வாழ்க்கையிலும் பல திறப்புகளையும் உண்டாக்குகிறது" - என்கிறார் கவிஞர் கருணாகரன்.

விவாதங்கள்

"ஊழிக்காலம்" நாவல் வெளிவந்தபோது, விடுதலைப்புலிகள் அமைப்பில் இயங்கிய தமிழ்க்கவி போர் முடிந்தபிறகு விடுதலைப்புலிகளை விமர்ச்சிக்கிறார் என்ற கண்டனங்கள் பல தரப்பில் முன்வைக்கப்பட்டன. தமிழ்த்தேசிய வாதிககள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் ஊழிக்காலத்தை எதிர்த்தார்கள்.

“இலங்கையின் மலையக இளைஞர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததுகொண்டதானது தேசப்பற்றுடன் மாத்திரமல்ல, தங்களுக்குரிய சமூக அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளவும்தான்" என்று கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை ஆண்டுமலரில் வெளியான தமிழக்கவியின் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

படைப்புகள்

நாவல்கள்
  • இனிவானம் வெளிச்சிரும் (2002 - அறிவமுது)
  • இருள் இனி விலகும் (2004 - அறிவமுது)
  • ஊழிக்காலம் (2014 தமிழினி)
  • இனி ஒருபோதும் (2014 மேன்மை)
சிறுகதைத் தொகுப்புகள்
  • நரையன் (2022 - நடு)
தொடர்கள்
  • தாழமுக்கம் (கரும்புலி நளாயினியின் வரலாறு - “சுதந்திரப் பறவைகள்” பத்திரிகை)
  • காடுலாவு காதை (நடு)
  • தமிழீழ பெண்களும் சட்டங்கள் (வன்னியில் பெண்கள் புனர்வாழ்வு கழகத்தினால் வெளியிடப்பட்ட “நாற்று” சஞ்சிகை)
  • சொல்லியே தீரவேண்டும் (ஈழநாத்தில் வெளிவந்த தொடர்)
  • வாழ்வாதாரமா சேதாரமா (தினகரனில் வெளிவரும் தொடர்)
  • வடபுலத்து பெண்ணின் பார்வையில் மட்டக்களப்பார் (அரங்கம் இணைய சஞ்சிகை)
  • என்ன புலகமடா பரமானந்தா (யாழ்ப்பாணம் “தீம்புனல்” பத்திரிகையில் வெளிவந்த நகைச்சுவை தொடர்)

விருதுகள்

  • 2002- இனி வானம் வெளிக்கும் - வடக்கு - கிழக்கு ஆளுனர் விருது
  • 2014- வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட மூத்த கலைஞருக்கான முதலமைச்சர் விருது
  • 2015-ம் ஆண்டு இலங்கை அரசியன் கலாபூஷண விருது
  • 2015- மட்டக்களப்பின் முக்கிய எழுத்தாளரான பவளம்மாள் நினைவாக வழங்கப்பட்ட விருது

வெளி இணைப்புக்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2022, 11:38:11 IST