under review

தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை

From Tamil Wiki

தமிழகத்தின் மரபுக் கலைகளையும், பண்பாட்டையும் பாதுகாக்கவும், கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு, ’கலை பண்பாட்டுத் துறை’ என்ற ஒரு தனித்த அமைப்பை டிசம்பர், 1991-ல் தோற்றுவித்தது.

தோற்றம்

தமிழ்நாட்டில் அரசு சார்ந்த கலை அமைப்புகள் பலவும் பல்வேறு துறைகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. அவற்றின் ஒருங்கிணைப்பும் வளர்ச்சியும் தேவை என்று திட்டமிட்ட தமிழக அரசு, ’கலை பண்பாட்டுத் துறை’ என்ற ஒரு தனித்த அமைப்பை டிசம்பர், 1991-ல் தோற்றுவித்தது.

பொதுத்துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் ஆகிய கலை அமைப்புகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, ’கலை பண்பாட்டுத் துறை’ என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த அரசு இசைப் பயிற்சி மையங்கள், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த அரசு கைத்தொழில் கல்லூரிகள், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரிகள் அனைத்தும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

நோக்கம்

தமிழக அரசு கலைப் பண்பாட்டுத் துறை, கீழ்க்காணும் நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டது.

  • தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களான கலை, இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம், கட்டடவியல் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை வளர்த்தல்.
  • பொதுமக்களிடையே இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட கலை வடிவங்களை கொண்டு சேர்த்தல்.
  • கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஆதரித்தல்; கலைஞர்களின் கலைப் படைப்புகளைப் பாதுகாத்து எதிர்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லல்.

செயல்பாடுகள்

தமிழக அரசு கலைப் பண்பாட்டுத் துறை, அரசின் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் பொருட்டு கலை பண்பாட்டு இயக்ககத்தின் கீழ் இணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் பிற அலுவலர்களை நியமித்துச் செயல்பட்டது. கீழ்க்காணும் செயல்பாடுகளை முன்னெடுத்தது.

  • இளைய தலைமுறையினருக்கு இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம் மற்றும் சிற்பம் முதலான கலைகளை நிகழ்த்துக்கலைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கவின்கலைக் கல்வி நிறுவனங்கள் வாயிலாகப் பயிற்றுவித்தல்.
  • கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களை ஊக்குவிக்கும் வண்ணம் துறையின் வாயிலாகப் பல கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துதல்.
  • தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை வளர்த்தல்; நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு கலைப்பயிற்சி அளித்தல்.
  • திறமைமிக்க கலைஞர்களுக்கு மாநில அளவிலான விருதுகளும் வயதுக்கேற்றவாறு மாவட்ட விருதுகளும் வழங்குதல்.
  • தமிழகத்தின் பண்பாட்டுக் கலைகளைப் பறைசாற்றும் வகையில் தமிழகத்திலும், வெளிமாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துதல்.
  • நலிவுற்ற நிலையில் வாழும் வயோதிகக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல்.
  • கலை விழாக்கள் மற்றும் கலைக்காட்சிகள் நடத்திடத் தன்னார்வக் கலை அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்.

அமைப்புகள்

தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் கீழ்க்காணும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

  • தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம்.
  • தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் - சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு
  • அரசு கவின் கலைக் கல்லூரிகள் - சென்னை, கும்பகோணம்
  • அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி – மாமல்லபுரம்
  • மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் (17)
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
  • தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு
  • தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றங்கள் (40)
  • தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்.
  • மாவட்டக் கலை மன்றங்கள்
  • கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (அரசு நிதியுதவி பெறும் கல்லூரி)

உசாத்துணை


✅Finalised Page