under review

தன்வந்திரி

From Tamil Wiki
தன்வந்திரி
தன்வந்திரி

தன்வந்திரி ஆயுர்வேதத்திற்கு அதிபதி, தேவர்களின் மருத்துவர். வைணவத்தில் விஷ்ணுவின் அவதாரமாகவும் சைவத்தில் சித்தராகவும் கருதப்படுகிறார். இவர் பெயரில் மருத்துவ நூல்கள் உள்ளன.

பெயர்க்காரணம்

தனு என்ற வார்த்தைக்கு அம்பு என்று பொருள். தன்வந்திரி என்பது உடலைத் தைத்தல் என்ற பொருளில் வரும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரைக் குறிக்க பயன்படுத்தும் பொருட்டு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

தொன்மம்

வைணவம்
  • தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கின்றன.
  • முற்பிறவியில் திருப்பாற்கடலில் பிறந்து தேவலோக வைத்தியராய் இருந்து, இரண்டாம் ஜென்மத்தில் தீர்க்கதர்மஸ் என்பார்க்குப் மகனாய்ப் பிறந்தார்.
  • இந்து புராணங்களின்படி தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தபோது பிரம்மனிடமும், இந்திரனிடமும் ஆரோக்கியத்திற்காக வேண்டினர். பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார். இவரின் கலசத்திலிருந்து அமிழ்தத்தை தேவர்கள் உண்டு நிறைவாழ்வைப் பெற்றனர்.
  • பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தார். அதை முதலில் சூரியனுக்கு உபதேசித்தார். சூரியனும் அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார் என்ற நம்பிக்கை உள்ளது.
  • சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பட்டது.
சைவம்

சைவத்தில் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக தன்வந்திரி உள்ளார். சைவக் கோயில்களில் தன்வந்திரி நோய் தீர்ப்பவராக அறியப்படுகிறார். சிவன் வைத்தீஸ்வரனாக வழங்கப்படும் சன்னதிகளில் தன்வந்திரி உள்ளார். மருத்துவத்தில் முக்கிய சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சமஸ்கிருத நூல்களிலும் தன்வந்திரி எனும் பெயர் உள்ளது. ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த நூல்கள் இவர் பெயரில் இயற்றப்பட்டன. இவர் பாடியதும் இவர் நாமதேயம் சேர்த்துச் சொல்லப் படுவதுமான நிகண்டு ஒன்று உள்ளது. வைத்தியசிந்தாமணியில் ஆயிரத்து இருநூறு பாடல்கள் உள்ளன. சிமிட்டுரத்தினச் சுருக்கத்தில் முந்நூற்று அறுபது பாடல்களும், கலைக்ஞானத்தில் ஐநூறு பாடல்களும் உள்ளன. இவருடைய சீடர் சுஸ்ருதர்.

ஈழத்தில் எழுந்த பரராசசேகரம், சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பெற்ற தன்வந்திரியின் வாகடத்தை, தழுவித் தோன்றியதாக அதன் கடவுள் வணக்கச் செய்யுளில் உள்ளது. சதாசிவம்பிள்ளை குறிப்பிடும் கலைஞானமும் 'தன்வந்திரி நாயனர் கலைஞானம் 500' என்பதும் ஒரே நூலா அல்லது இரு நூல்களா என்பது தெரியவில்லை. ஏழாலை ஐ. பொன்னையா 'தன்வந்திரி பச்சைவெட்டு' எனும் நூலொன்றினைப் பதிப்பித்துள்ளார்.

கோயில்

நோய்கள் குணமாக தன்வந்திரியை வணங்கும் வழக்கம் உள்ளது. வேலூர் கீழ்ப்புதுப்பேட்டையில் தன்வந்திரி பகவான் கோயில் உள்ளது. நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவிலில்‌ ஜீவ சமாதி பூண்டு வைத்திய நாதசுவாமியாக உள்ளார்‌. இத்தலம்‌ நவக்கிரக தோஷப்‌ பரிகாரத் தலங்களுள்‌ செவ்வாய்‌ தோஷப்‌ பரிகாரத்‌ தலமாக உள்ளது.

பாடல் நடை

  • தன்வந்திரியின் பாடல்

ஆமப்பா விந்நூலைப் பதனம்பண்ணு
அப்பனே நல்லோர்கள் பதனஞ்செய்வார்
வாமப்பா விந்நூலை யெடுத்துக்கொண்டு
வளமாக நீயெடுத்துப் பூசைபண்ணு
காமப்பா கல்வியறி வெல்லாந்தோன்றுங்
கனமான விந்நூலைக் கைவிடாதே
நாமப்பா முந்நூறும் பாருபாரு
நலமான கருக்கிடைநிகண்டிதுதான் முற்றே.

நூல் பட்டியல்

தன்வந்திரி பெயரில் வழங்கும் நூல்கள்

  • செயநிர்
  • வாகடம்
  • கருக்கிடை வைத்தியம் (தன்வந்திரி கருக்கிடை 200)
  • கருக்கிடை நிகண்டு (தன்வந்திரி கருக்கிடை நிகண்டு 100)
  • தன்வந்திரி நாடிச் சாத்திரம்
  • தன்வந்திரி வாலை சாத்திரம்
  • தன்வந்திரி பச்சைவெட்டு

உசாத்துணை


✅Finalised Page