தனிச் செய்யுட் சிந்தாமணி
- சிந்தாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிந்தாமணி (பெயர் பட்டியல்)
தனிப்பாடல் திரட்டு வகை நூல்களில் முதன்மையானது தனிச் செய்யுட் சிந்தாமணி. இதன் முதல் பாகம் 1908-ல் அச்சிடப்பட்டது.
வரலாறு
இந்நூல் விவேகபாநு பத்திரிகையின் ஆசிரியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயரால் தொகுக்கப்பட்டு, முறையூர் ஜமீன் பழ.சி.சண்முகஞ் செட்டியார் அவர்களது பொருளுதவியால், மதுரை விவேகபாநு அச்சியந்திரசாலையில் 1908-ல் பதிப்பிக்கப்பட்டது.
முறையூர் ஜமீன் வித்வானாக இருந்த கருப்பையாப் பாவலர் மூலம் இத்தகைய தனிப்பாடல்களைத் திரட்டிய பழ.சி.சண்முகஞ் செட்டியார், அவ்வாறு திரட்டியவற்றை தமிழ்ப் பண்டிதரும், புலவரும், விவேகபாநு இதழின் ஆசிரியருமான மு.ரா.கந்தசாமிக் கவிராயரைக் கொண்டு தொகுக்கச் செய்தார் என்று நூலின் முகவுரையில் மு.இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளடக்கம்
அக்காலப் புலவர்கள் முதல் பிற்காலப் புலவர்கள் வரை மக்களிடையே புழக்கத்தில் இருந்த தனிப்பாடல்கள் பலவற்றின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. நக்கீரர், திருவள்ளுவர், ஔவையார் தொடங்கி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் புலவர்களாகவும், தமிழாசிரியர்களாகவும் இருந்த இராமசாமிக் கவிராயர், குன்னூர் குமாரசாமி முதலியார், அஷ்டாவதானம் மீனாக்ஷி சுந்தரக்கவிராயர், வசைக்கவி ஆண்டான், ஆபத்துக்காத்தப் பிள்ளை, அவிநாசிப்புலவர், அழகிய சொக்கநாதப் பிள்ளை, காளமேகப் புலவர், காளிமுத்துப் புலவர் எனப் பல நூற்றுக்கணக்கான புலவர்களின் பாடல்களும் அவர்களைப் பற்றிய சிறு வாழ்க்கைக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.
இலக்கிய இடம்
பிற்காலத்தில் 'தனிப்பாடல் திரட்டு’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளியாவதற்கு தனிச்செய்யுட் சிந்தாமணி நூலே முதல் காரணமாக அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக தனிப்பாடல் திரட்டு நூல் ஒன்றை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் தந்தையான பொன்னுசாமித் தேவர் தொகுக்கச் செய்திருந்தார். அதில் விடுபட்டுப் போன பாடல்களைக் கொண்ட விரிவான மேல் பதிப்பே இந்த நூல்.
உசாத்துணை
- தனிச்செய்யுட் சிந்தாமணி முதல் பாகம் : https://archive.org/details/gc-sh5-0021/mode/2up
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-May-2023, 06:13:41 IST