under review

டி. பிருந்தா

From Tamil Wiki
டி. பிருந்தா
டி. பிருந்தா

டி. பிருந்தா (தஞ்சாவூர் பிருந்தா)(பிருந்தாதேவி) (1912 - 1996) வீணை இசைக்கலைஞர். இசை ஆசிரியர். வீணை தனம்மாளின் வழிவந்தவர். இவரின் சகோதரி முக்தாவுடன் இணைந்து இசைக்கச்சேரிகள் செய்தார். மரபுவழி பாவசங்கீதத்தை முன் நிறுத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வீணை தனம்மாளின் மூத்த புதல்வி காமாட்சிக்கு மகளாக 1912-ல் பிருந்தாதேவி பிறந்தார். இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாய் காமாட்சி வாய்ப்பாட்டுக் கலைஞர். பிருந்தாதேவியின் சகோதரி முக்தாவும் இசைக்கலைஞர். காஞ்சிபுரம் பர்வதம்மாள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தாய் காமாட்சியிடம் தொடக்ககாலத்தில் வீணை தனம்மாள் பாணி இசை பயின்றார். வீணை தனம்மாளிடமும் இசை பயின்றார். காஞ்சிபுரம் நாயினார் பிள்ளையிடம் இசை பயின்றார்.

இசை ஆசிரியர்

டி. பிருந்தா சென்னை கர்நாடக இசைக்கல்லூரியில்‌ இருபது ஆண்டுகள்‌ சங்கீதப்‌ பேராசிரியராகப் பணியாற்றினார்‌. சம்பிரதாய சங்கீதத்தைத்‌ தன் மாணவர்களுக்குக் கற்பித்தார்‌. அமெரிக்காவின் சியாட்டில்‌ பல்கலைக்கழகத்தில்‌ எட்டு மாதங்கள்‌ கர்நாடக இசை பயிற்றும்‌ ஆசிரியராகப்‌ பணியாற்றினார்‌. தாமே ஒரு சங்கீத பள்ளியில்‌ தம்முடைய மரபுவழி சங்கீதத்தைப்‌ போதித்தார்.

டி. பிருந்தா
மாணவர்கள்
  • செம்மங்குடி சீனிவாச ஐயர்
  • எம்.எஸ். சுப்புலட்சுமி
  • ஆர்.கே. ஸ்ரீகண்டன்
  • இராமநாதன் கிருஷ்ணன்
  • அருணா சாய்ராம்
  • சித்திரவீணை ரவிகிரண்
  • பி. கிருஷ்ணமூர்த்தி
  • சித்திரவீணை கணேஷ்
  • கே.என். சசிகிரண்
  • கிரணவல்லி வித்யாசங்கர்
  • கீதா ராஜா
  • பி. பாலசுப்பிரமணியன்
  • எஸ். கிரீஷ்

இசை வாழ்க்கை

காஞ்சிபுரம்‌ நாயனாப்‌ பிள்ளையிடம்‌ இவர்‌ இளமையில்‌ சங்கதம்‌ பயின்றார்‌. பிருந்தாதேவி தன் சகோதரி முக்தாவுடன்‌ இணைந்து ஐம்பது ஆண்டுகாலம்‌ சென்னையிலும்‌ பிற இடங்களிலும்‌ கர்நாடக சங்கீதக் கச்சேரிகள்‌ செய்தார். பின்னர் தன் மகள் வேகவாகினி விஜயராகவனுடன் இசைக்கச்சேரிகள் செய்தார். க்ஷேத்ரக்ஞரின்‌ பதங்கள்‌, தருமபுரி சுப்பராயர்‌ பதங்கள்‌, வைத்‌தீஸ்வரன்‌ கோவில்‌ சுப்பராம ஐயர்‌ பதங்கள்‌, பட்டணம்‌ சுப்பிரமணிய அய்யருடைய ஜாவளிகள்‌ ஆகியவற்றைப் பாடினார். மரபுவழி பாவசங்கீதத்தை முன் வைத்தார்.

டி. பிருந்தா

மதிப்பீடு

புதிய கிருதிகள்‌ செய்வதைவிட பாரம்பரியத்திலிருந்து விலகாமல் பெரியோர்‌ இயற்றிய கிருதிகளைப்‌ பாடி, ஆராய்ந்து செய்வதன் மேல் டி.பிருந்தா நம்பிக்கை கொண்டிருந்தார். பிருந்தாவுக்கு மூச்சுக் கட்டுப்பாடு அலாதியாக இருந்ததால் நீண்ட நேரம் தெளிவு, நேர்த்தியை இழக்காமல் அவரால் பாட முடிந்தது. கால பிரமாணம் மீதும் பிருந்தாவுக்கு வலுவான பிடிப்பு இருந்தது.

டி. பிருந்தா இந்திராகாந்தியுடன்

விருது

  • 1965-ல் சங்கீத நாடக அகாதமி விருது
  • 1973-ல் தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது
  • 1976-ல் சென்னை மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது
  • 1987-ல் 'சங்கீத கலாநிதி' பட்டம்
  • ஜனாதிபதி விருது
  • ஸ்வராலயா புரஸ்கர் விருது

மறைவு

டி. பிருந்தா 1996-ல் காலமானார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page