under review

ஜெ.ராம்கி

From Tamil Wiki
ஜெ.ராம்கி

ஜெ.ராம்கி (ஜெ. ராமகிருஷ்ணன்) (பிப்ரவரி 3, 1976) என்னும் பெயரில் எழுதிவரும் ராமகிருஷ்ணன் தமிழில் ஆங்கிலம் வழியாக மொழியாக்கங்கள் செய்துவருகிறார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறார். எமர்ஜென்ஸி நேரத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிறை அனுபவங்கள், ஐரோம் ஷர்மிளா மற்றும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குறித்த இவரது மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.

பிறப்பு கல்வி

ஜெ.ராம்கி சிதம்பரத்தில் பிப்ரவர் 3, 1976-ல் பிறந்தார். தந்தை ஜெயபாலன். தாய் பங்கஜவல்லி.  மயிலாடுதுறை, புதுத்தெருவில் உள்ள நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர் மயிலாடுதுறை தி.ப. தி. அர. ரங்கச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பு. மயிலாடுதுறை ஏ.வி.சி கலைக்கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.தொடர்ந்து அதே கல்லூரியில் கணிணி பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னாளில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டில் பட்டயம், சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் முதுகலைப்பட்டம்.

தனிவாழ்க்கை

ஜெ.ராம்கியின் மனைவி பெயர் ரெங்கம்மாள் சங்கரி. மணமான நாள் பிப்ரவர் 9, 2007. மின்னணுவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவரான ரங்கம்மாள் சங்கரி சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். குழந்தைகள் ஆர். மஹதி,ஆர். சஞ்சய். ஜெ.ராம்கி கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் மத்திய அரசின் கலால் மற்றும் சுங்கவரித்துறையில் பணி கிடைத்து, சில காலம் பூனேவில் பணியாற்றினார்.பின்னர் சென்னைக்கு மாற்றலாகி வந்து, அதேதுறையில் பணியாற்றினார்.. தகவல் தொழில்நுட்பம் மீதிருந்த ஈடுபாட்டால் 2005-ல் பணியை துறந்துவிட்டு, ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்து சென்னையில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண்மை வல்லுநராக பணியாற்றிவருகிறார். ரஜினிகாந்த் ரசிகர். 1993-முதல் ரஜினி ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

ஜெ.ராம்கி முதன்மையாக மொழியாக்கங்களே செய்துவருகிறார். சிறுகதைகளும் வரலாற்றுக்குறிப்புகளும் எழுதுகிறார். 1996-ல் இதயம் பேசுகிறது இதழில் முதல் சிறுகதை வெளியானது. 2001-ல் கல்கியில் முதல் கட்டுரை வெளியானது. கிழக்கு வெளியீடுகளாக பொதுத்தலைப்புக்களில் நூல்களை எழுதினார். கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினிகாந்த், தியாகராஜ பாகவதர் ஆகியோரை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நரசிம்ம ராவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஐரோம் ஷர்மிளா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் குறித்து ஆங்கிலத்தில் வெளியான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். காட்சி ஊடகங்களில் அன்றாட அரசியல், சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். 2006- முதல் கல்கி, இந்தியா டுடே போன்ற இதழ்களில் பங்களித்துக்கொண்டிருக்கிறார்.

இவருடைய முதன்மையான நூல் இந்திரா vs ஜெ.பி - எமர்ஜென்ஸி ஜெயில் நினைவுகள் - ஆங்கிலத்தில் திரு. எம்.ஜி. தேவசகாயம் எழுதிய நூலின் மொழியாக்கம். கிழக்கு பதிப்பகத்தின் வழியாக டிசம்பர் 2009-ல் வெளியானது. நரசிம்ம ராவ் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஏப்ரல் 2017-ல் வெளியான நரசிம்மராவ் வினய் சீதாபதி ஆங்கிலத்தில் எழுதிய The half lion நூலின் மொழியாக்கம் மிகவும் கவனிக்கப்பட்ட நூல்.

இவரது மன்மோகன்சிங் குறித்த புத்தகம், காவிரியின் கதை, ம.தி.மு.கவின் வரலாறு, இண்டர்நெட் இயங்குவது எப்படி? ஆகிய சிறு புத்தகங்களும் தமிழ் வாசிப்புலகில் பாராட்டப்பட்டவை. கடந்த 20- ஆண்டுகளில் இவரது பல கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள், கேள்வி பதில்கள் போன்ற பங்களிப்புகள் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, இந்தியா டுடே, இதயம் பேசுகிறது, தினமணி, தினமலர் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கைகளிலும் நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது வலம் உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும் சொல்வனம், தட்ஸ்தமிழ், தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் வராஹமிகிரா அறிவியல் மன்றத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தன்னுடைய பங்களிப்பைச் செய்து வருகிறார்.

தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரை குறிபிடுகிறார்

விருதுகள்

 • 2020-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது
 • 2008-ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளருக்கான திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது

நூல்பட்டியல்

நேரடி புத்தகங்கள்
 • ரஜினி சப்தமா, சகாப்தமா?  கிழக்கு பதிப்பக வெளியீடு, மார்ச் 2005
 • மு.க  கிழக்கு பதிப்பக வெளியீடு, மே 2006
 • பாகவதர்,  கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2007
 • ஜெ - அம்மு முதல் அம்மா வரை, கிழக்கு பதிப்பக வெளியீடு, அக்டோபர் 2008
 • ஆரம்பம் 50 காசு, கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2010
 • வியாபம், கிழக்கு பதிப்பக வெளியீடு, செப்டம்பர், 2015
 • 1984 சீக்கியர் கலவரம், கிழக்கு பதிப்பக வெளியீடு, நவம்பர் 2017
மொழியாக்கங்கள்
 • இந்திரா vs ஜே.பி - எமர்ஜென்ஸி ஜெயில் நினைவுகள், கிழக்கு பதிப்பக வெளியீடு, டிசம்பர் 2009
 • ஐரோம் ஷர்மிளா, கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2010
 • நரசிம்ம ராவ், கிழக்கு பதிப்பக வெளியீடு, ஏப்ரல் 2017

உசாத்துணை