under review

ஜெகவீரபாண்டியன்

From Tamil Wiki
கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் (இளம் வயதுப் படம்)
ஜெகவீர பாண்டியன் - முதிர்ந்த வயதில்

ஜெகவீரபாண்டியன் (ஜெகவீரபாண்டியனார்; செகவீரபாண்டியன்; செகவீரபாண்டியனார்; கவிராச பண்டிதர் செகவீரபாண்டியனார்; கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார்) (மார்ச் 10, 1886 - ஜூன் 17, 1967) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், பதிப்பாளர். வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர். கவிராஜ பண்டிதர் என்று சக புலவர்களால் போற்றப்பட்டார். தமிழக அரசு, ஜெகவீரபாண்டியனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

ஜெகவீரபாண்டியன் மார்ச் 10, 1886 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டநத்தத்தில், பெருமாள்சாமி-ஆவுடையம்மாள் இணையருக்குப் பிறந்தார். மூன்று வயதிலேயே தந்தையை இழந்தார். ஆரம்பக்கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். ஐந்தாம் வகுப்போடு பள்ளிக் கல்வி நின்றுபோனது. தொடர்ந்து சுய விருப்பத்தில் அரிமளத்தில் வாழ்ந்த துறவி சிவானந்த சுவாமிகளிடம் சென்று தமிழ் இலக்கியங்களைக் கற்றார். வேதாந்தத்தில் தேர்ச்சி பெற்றார். இலக்கணமுத்துக் கவிராஜ பண்டிதரிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். பாடல்கள் எழுதுமளவிற்குப் புலமை பெற்றார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜெகவீரபாண்டியன், பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சொற்பொழிவாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். மணமானவர். மனைவி: வெள்ளைத்தாய். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.

இலக்கிய வாழ்க்கை

ஜெகவீரபாண்டியன் அறம், பக்தி, திறனாய்வு, வரலாறு, மொழி போன்ற துறைகளில் பல நூல்களை எழுதினார். வள்ளுவரையும், கம்பரையும் தனது வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். மதுரையில் உள்ள தனது இல்லத்திற்கு ‘திருவள்ளுவர் நிலையம்’ என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு ‘வாசுகி அச்சகம்’ என்றும் பெயரிட்டார். யாரையும் தனக்கு உதவியாளாக வைத்துக் கொள்ளாமல் அச்சுக் கோர்ப்பது முதல், பிழைத்திருத்தம் செய்து அச்சிடுவது வரை அனைத்துப் பணிகளையும் தாமே செய்தார்.

ஜெகவீரபாண்டியன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தனது நூல்கள் சிலவற்றைத் தானே பதிப்பித்தார்.

  • வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் வரலாற்றைக் கூறும் நூல் ’பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்’
  • கட்டபொம்மனின் வரலாற்றை 8,811 விருத்தப் பாக்களால் கூறும் காவியம் ’வீரபாண்டியம்’.
  • 'இதற்கு இது' எனக் கூறும் அறுபது பாடல்கள் கொண்ட சிறு நூல் 'அணியறுபது'.
  • 'இந்தியத் தாய் நிலை' இந்தியாவின் அவல நிலைக்கு இரங்கி ஜெகவீரபாண்டியன் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு.
  • ஆங்கிலப் பேரறிஞர்களின் பொன்மொழிகளும் அவற்றிற்கு இணையான தமிழ் மொழி பெயர்ப்புக் குறட்பாக்களும் கொண்ட நூல் ’உலக உள்ளங்கள்’ .
  • ‘தரும தீபிகை’ ஒவ்வொரு தலைப்பிலும் பத்து வெண்பாக்களாக அறநெறியை விளக்கும் நூல்
  • கம்பராமாயணத்தில் வரும் பாத்திரங்களின் குணச் சித்திரங்களை விளக்கும் நூல் 'புலவர் உலகம்',
சொற்பொழிவு

கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம் போன்றவற்றை முழுமையாகப் பயின்று தேர்ந்த ஜெகவீரபாண்டியன், அவை பற்றிப் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தொடர் சொற்பொழிவு, தனிச் சொற்பொழிவு, வானொலிச் சொற்பொழிவு, அயல் மாநிலச் சொற்பொழிவு என்று பல வகையில் இவரது சொற்பொழிவுகள் அமைந்தன.

புராணத் தலைப்புகளில் மட்டுமல்லாமல் 'தசரதன் தன்மையும் கைகேயியின் வன்மையும்', 'பரதன் பண்பும் குகன் பண்பும்', 'சீதை நெஞ்சமும் இராவணன் வஞ்சமும்', 'தமிழர் வீரம்', 'மன நலமும் மனிதனும்', 'திருவாசகத்தில் ஒரு வாசகம்', 'காந்திவழி புலனடக்கம்', 'கவிதை விளக்கம்', 'வில்லியாழ்வாரின் சந்தக் கவித்திறம்' போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.

ஜெகவீரபாண்டியன்

பொறுப்புகள்

ஜெகவீரபாண்டியன், மதுரைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

விருதுகள்

  • கவிச்சக்கரவர்த்தி
  • கவிராஜ பண்டிதர்
  • கவிஞர் மாமணி
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
  • தமிழக அரசின் பரிசு - பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நூலுக்கு.
  • மதுரை தமிழ்ச் சங்கப் பாராட்டு
  • கரந்தை தமிழ்ச் சங்கப் பாராட்டு
  • மதுரை ஆதினம் அளித்த, ‘தமிழ் மாமுனி’ பட்டம்.

இலக்கிய இடம்

ஜெகவீரபாண்டியன் குருகுல வாசமாகத் தமிழ்க் கற்றவர். அவரது மேதைமையும் திறனாய்வின் ஆழமும் அவரது உரை நூல்களில் வெளிபட்டன. சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். வள்ளுவம் குறித்தும், கம்பன் குறித்தும் ஆய்வு நூல்களை எழுதினார். ஜெகவீரபாண்டியன் எழுதிய ‘திருக்குறட் குமரேச வெண்பா’ திருக்குறளை கதை வடிவில் விளக்கிக் கூறும் முக்கியமான நூலாக ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது. ஜெகவீரபாண்டியன் நூல்களைச் சென்னை, மைசூர் பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக இருந்தன.

மறைவு

ஜெகவீரபாண்டியன், ஜூன் 17, 1967-ல், தனது 81-ம் வயதில் காலமானார்.

ஜெகவீரபாண்டியன் வாழ்க்கைக் குறிப்பு

ஆவணம்

ஜெகவீரபாண்டியன் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ் இணைய மின்னூலகத்தில் ஜெகவீரபாண்டியனின் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஜெகவீரபாண்டியனின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

திருக்குறட் குமரேச வெண்பா

நூல்கள்

  • அகத்திய முனிவர்
  • திருச்செந்தார் அந்தாதி
  • மாசிலாமணி மாலை
  • அணியறுபது
  • அரும்பொருள் அமுதம்
  • இந்தியத் தாய் நிலை
  • பாரத நாட்டு வீரர்
  • வீர தேவதை வணக்கம்
  • உழவும் உலகமும்
  • எனது வாழ்வு
  • கவிகளின் காட்சி
  • தமிழர் வீரம்
  • தெய்வப் புலவா்
  • பாஞ்சாலங் குறிஞ்சி வீரர் சரித்திரம்
  • முருகவேள்
  • நமது தாய் மொழி
  • உயிரினங்கள்
  • உள நிலை
  • ஒழுக்கம்
  • கல்வி நிலை
  • சந்தம்
  • தாயின் தகைமை
  • மனிதனும் தெய்வமும்
  • மூன்று ஒலிகள்
  • வீரபாண்டியம்
  • வீரகாவியம்
  • கம்பர் கவித்திறம்
  • கவிகளின் காட்சி தொகுதி - 1
  • கம்பன் கலை நிலை - உரைநடை -15 தொகுதிகள்
  • தரும தீபிகை – செய்யுள் மூலமும், உரையும் - 7 தொகுதிகள்
  • திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும், உரையும், அறத்துப்பால்- 4 தொகுதிகள்
  • திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும், உரையும், பொருட்பால் - 5 தொகுதிகள்
  • பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் - 2 பாகங்கள்
  • உலக உள்ளங்கள் (மொழிபெயர்ப்பு)

உசாத்துணை


✅Finalised Page