under review

ஜீவகீதம்

From Tamil Wiki
ஜீவகீதம்
ஜீவகீதம், கல்கி

ஜீவகீதம் (1966) ஜெகசிற்பியன் எழுதிய சமூக நாவல். இந்திய தேசியகீதத்தின் மீது ஒரு எளிய குடிமகனுக்கு இருக்கும் பற்றை விவரிப்பதோடு நாடற்றவனுக்கு நாடு எப்படிப் பொருள்படுகிறது என்பதைச் சித்தரிப்பது. தேசிய உணர்ச்சியை உருவாக்கும் படைப்பு என்பதனால் 13 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

எழுத்து,வெளியீடு

'ஜீவகீதம்' நாவலை ஜெகசிற்பியன் ஜனவரி 17 ,1965 முதல் கல்கி இதழில் தொடர்கதையாக எழுதினார். 1966-ல் வானதி பதிப்பக வெளியீடாக வந்தது

கதைச்சுருக்கம்

பர்மாவுக்கு தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் அகதியாக மீண்டும் தமிழகத்துக்குத் திரும்புகிறான். அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி ஓர் ஆப்ரிக்க படைவீரனுக்கும் சென்னை சேரிப்பெண்ணான கன்னியம்மாளுக்கும் பிறந்தவன். நச்சிக்கு கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையே காதல் இருக்கிறது. நச்சி சினிமா உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என பல வேடங்கள் எடுக்கும் விந்தை மனிதன். தம்பையா என்ற பயில்வானுக்குப் பிறந்த வேதா என்னும் பெண் கன்னியம்மாளின் பொறுப்பில் வளர்கின்றாள். வேதா தன் மகள் என இறுதியில் தம்பையா உணர்கிறார்.

சென்னையின் புறநகர் சேரிப்பகுதியின் விதவிதமான மனிதர்களின் சித்திரம் வழியாக நகர்கிறது இந்நாவல். நகரத்தின் ஊழல், சுயநலம் ஆகிய அனைத்தும் மெல்லிய பகடியுடன் சித்தரிக்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மனிதர்களின் வாழ்க்கை இதில் காட்டப்படுகிறது. சபேசன் ஒரு கட்டத்தில் நகர வாழ்வை வெறுத்து கிராமத்தில் அவனை எதிர்பார்த்திருக்கும் அன்னையைச் சந்திப்பதற்காகச் செல்கின்றான். அவன் செல்வதற்கு முன்பாக அவனது அன்னை இறந்து விடுகின்றார். அவனது அத்தை மீனாட்சி தன் கணவருடன் அவனது வீட்டில் குடியிருக்கிறார். சபேசன் பெங்களூர் செல்கிறான். அரசியல்வாதி மாரிமுத்து மற்றும் அவனது அடியாட்களால் ஆசிரியர் வேலைக்கான நேர்காணலென்ற பேரில் பெங்களூர் ஹோட்டலொன்றுக்குக் கொண்டுவரப்பட்ட வேதாவை அங்கு அறைப்பையனாகப் பணிபுரியும் சபேசன் காப்பாற்றிச் சென்னைக்கு அழைத்து வருகிறான்.

சபேசனின் வாழ்வில் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியா வந்த சந்தியா என்னும் பெண்ணொருத்தியும் அவளது குடும்பத்தவர்களும் எதிர்ப்படுகின்றார்கள். சந்தியாவின் தந்தையார் இந்தியாவுக்கெதிராகச் செய்யும் சதியை சந்தியா மூலமே சபேசன் அறிந்து கொள்கிறான். சதிகாரர்களின் இருப்பிடத்தில் அவர்கள் கை வசமிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி வெளியேற முனையும் சமயம் சதிகாரர்களிடம் அகப்பட்டுச் சபேசன் சுட்டுக்கொல்லப்படுகிறான். நண்பனின் நாட்டுப்பற்றும், அவன் நாட்டுக்காகத் தன் உயிரை இழந்ததும் நச்சியினைப் பெரிதும் பாதித்து விடுகிறது. அவன் இந்திய இராணுவத்தில் சேர்ந்து தேச சேவை செய்வதுடனும், வேதா தன் தாயாருடன் இணைந்து ஆசிரியப் பணியாற்றுவதுடனும் நாவல் முடிவுறுகிறது.

இலக்கிய இடம்

ஈழத்து இலக்கிய விமர்சகரான வ.ந.கிரிதரன் "சபேசன், நச்சி, கன்னியம்மாள், தம்பையா போன்ற பாத்திரங்களூடாக நகர அடித்தட்டுமக்கள் இருப்புக்காக அன்றாடம் போராடுவதை விரிவாகவே நாவலில் விவரித்திருப்பார் ஜெகசிற்பியன். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும், அவ்விதம் பணம் கொடுப்பதன்மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மேலும் துணைபோகும் வாக்காளர்களின் செயற்பாடுகளையும் கடுமையாகவே விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார் நாவலாசிரியர். சிந்தனையைத் தூண்டும் ஆரோக்கியமான இலட்சிய நோக்கு மிக்க இவ்வகையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்குமென்பதால் இந்த நாவல் அன்றும், இன்றும் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம்." என ஜீவகீதத்தை மதிப்பிடுகிறார்.

ஜீவகீதம் சென்னை சேரிப்பகுதியில் வெவ்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து 1950-களில் வாழ்ந்த மக்களின் கலவையான பண்பாட்டைச் சுவைபடச் சித்தரிப்பதனால் குறிப்பிடத்தக்க படைப்பு. அதன் பலமுகம் கொண்ட நச்சி, ஆங்கிலம் பேசும் கன்னியம்மாள் போன்ற கதைமாந்தர்கள் வித்தியாசமானவர்கள். பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் இறுதியில் எளிய சாகசங்களுடன் முடிகிறது.

உசாத்துணை

ஜீவகீதம்- வ.ந.கிரிதரன் பதிவு


✅Finalised Page