ஜார்ச் டவுன் இலக்கிய விழா
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) என்பது மலேசிய, பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழா. இவ்விழா மலேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய உலக இலக்கிய விழாவாகக் கருதப்படுகிறது. மேலும், இது லண்டன் புக் ஃபேர் இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் இலக்கிய விழா விருதைப் (LBF International Excellence Awards) பெற்ற முதல் தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விழா.
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் உலக இலக்கியம், மொழிபெயர்ப்புகள் மற்றும் பல்வேறு கலைகள் கொண்டாடப்படும் விழாவாகக் கருதப்படுகிறது, பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். மலேசியாவில் மாநில அரசால் நிதியளிக்கப்பட்ட ஒரே இலக்கிய விழா இதுவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வார இறுதியில் நடைபெறும் இவ்விழாவுக்கு அனுமதி இலவசம்.
வரலாறு
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா 2011-ல் பினாங்கின் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் என்பவரால் தொடங்கப்பட்டது. 5 எழுத்தாளர்கள் கொண்ட வரிசையுடன் இவ்விழா அறிமுகமானது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடைபெற்று வருகிறது.
2011: வரலாறு & பாரம்பரியம்: நமது கதைகள் எங்கே?
முதலாம் ஆண்டு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் கருப்பொருள் 'வரலாறு & பாரம்பரியம்: நமது கதைகள் எங்கே?' ஆகும். இவ்விழா 2011 நவம்பர், 26 & 27 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் 7 அரங்குகள் உள்ளடக்கமாக இருந்தன.
2012: பயணங்கள். நம்பிக்கைகள். கனவுகள்
இரண்டாம் ஆண்டு கருப்பொருள் 'பயணங்கள். நம்பிக்கைகள். கனவுகள்.' இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை உள்ளடக்கியதாக இரண்டாம் ஆண்டு விழா அமைந்தது.
2013: பிணைக்கும் உறவுகள்
வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் ஆதரவு அதிகரித்ததன் காரணமாக, 2013 ஜார்ச் டவுன் இலக்கிய விழா நிகழ்ச்சி, 37 அமர்வுகளைக் கொண்டதாக வளர்ந்தது. மூன்றாம் ஆண்டின் கருப்பொருள் 'பிணைக்கும் உறவுகள்' ஆகும்.
2014: மூலதனம்
2014 விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் கருப்பொருள் 'மூலதனம்'. உள்நாட்டு எழுத்து மற்றும் வெளியீட்டுத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சியாக இது அமைந்தது. 38 அரங்குகளுடன் அமைந்த இந்த விழாவில் தனிநபர் நகைச்சுவை செயல்திறன் மற்றும் வினாடி வினா ஆகியவை உள்ளடக்கி இருந்தது.
2015: நாம் யாரோ அதுவே நாம்/நாம் யாரோ அதுதானா நாம்?
2015-ல், இவ்விழா 'நாம் யாரோ அதுவே நாம் /நாம் யாரோ அதுதானா நாம்?' எனும் கருப்பொருளில் நடந்தது. மனிதனாக இணைவதையும் மலேசிய அடையாளத்தில் உள்ள பிளவுகள் குறித்து கவனம் செலுத்தும் வகையிலும் இந்த விழா அமைந்தது. 36 பேச்சாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
2016: ஹிரேத்
உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் இடப்பெயர்வை அங்கீகரிக்கும் வகையில், 2016 விழா 'ஹிரேத்' என்ற சொல்லைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. இவ்விழா 44 அமர்வுகளில் 40 எழுத்தாளர்களை ஒன்றிணைத்தது.
இவ்விழாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் ரீதியாக கருத்துரைத்த சூனாரின் ஒரு கண்காட்சியை அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் சீர்குலைத்தனர். இறுதியில் சூனாரின் கைது சர்வதேச கவனத்தையும் மனித உரிமை கண்காணிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இவ்விழா ஆதரவைப் பெற்றது.
2017: அசுரர்களும் & மரணமின்மையும்
2017-ல், ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் கருப்பொருள் 'அசுரர்களும் & மரணமின்மையும்' ஆகும். அவ்வாண்டு விழாவில் 46 எழுத்தாளர்கள் மற்றும் 55 அரங்குகள் இடம்பெற்றன. 2017 விழா இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் இலக்கிய விழா விருதைப் பெற்றது.
2018: சுதந்திர மாநிலம்
உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளின் மைல் கற்கள், கருத்துச் சுதந்திரம், பினாங்கு மாநிலத்தின் அர்ப்பணிப்பு மற்றும் 59 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் அடைந்த பிறகு மலேசியாவின் முதல் ஆட்சி மாற்றம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் 2018 விழா 'சுதந்திர மாநிலம்' என்ற கருப்பொருளாக இருந்தது. இவ்விழா முதன்முறையாக 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இவ்விழாவின் 65 நிகழ்வுகளில் 82 எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
2019: முன்னுரைகள் / பின்சொற்கள்
2019 ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா 'முன்னெழுத்துக்கள் / பின்சொற்கள்' என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. நவம்பர் 2019, 21-24 நடைபெற்ற திருவிழாவில் பாலின் ஃபேன் மற்றும் ஷரத் குட்டன் இயக்குனர்களாக செயல்பட்டனர்.
2020: கண்ணாடி வழியாக
பத்தாவது ஜார்ச் டவுன் இலக்கிய விழா 'கண்ணாடி வழியாக' என்ற கருப்பொருளாக இருந்தது. தொற்றுநோய் காரணமாக, முழுக்க முழுக்க ஆன்லைனில் இவ்விழா நடத்தப்பட்டது. ஆங்கிலத்திலும் மலாயிலும் வீடியோக்கள், உரையாடல்கள், விவாதங்கள், வாசிப்புகள் மற்றும் வானொலி நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன.
2021: சிறிய அண்டங்கள்
2021-ம் ஆண்டிற்கான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவின் கருப்பொருள், 'சிறிய அண்டங்கள்'. சாதாரண உலக வாழ்விலிருந்து அண்டவியல் கற்பனை வரை, ‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா 2021-ல் பகிரப்பட்டது. படைப்பாற்றலின் கட்டற்ற வெளிப்பாடும் சுதந்திரமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் அது எவ்வாறு பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் இக்கருப்பொருள் மையமிட்டிருந்தது. கோவிட் பெருந்தொற்று காரணமாக திருவிழாவின் வார இறுதியில் சிறிய அளவிலான நிகழ்வுகளுடன் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டது.
2022: கட்டற்றதை வசப்படுத்தல்
2022-ம் ஆண்டிற்கான ஜார்ச் டவுன் இலக்கிய விழா ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் நடைபெற்றது. இயற்கையோடு மனித குலத்துக்கு உள்ள ஆழமான உறவை ஆராயும் முகமாக 2022-ம் ஆண்டு விழா அமைந்தது நவம்பர் 24 முதல் 27 வரை நடத்தப்பட்ட இவ்விழாவில் முதன்முறையாக தமிழ், மற்றும் சீன மொழி இலக்கியங்களுக்கான அமர்வுகள் இணைக்கப்பட்டன. தமிழ் அமர்வுக்கான பொறுப்பாளராக ம. நவீன் நியமிக்கப்பட்டார்.
பதிப்பகம்
முவாரா
ஜார்ச் டவுன் இலக்கிய அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்வாரா' எனும் ஆய்விதழுடன் இணைந்து 'முவாரா' என்ற சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது. கட்டுரைகள், விரிவுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக மதிப்புரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் இவ்விதழில் இடம்பெறுகின்றன.
உசாத்துணை
ஜார்ச் டவுன் இலக்கிய விழா அகப்பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jun-2023, 20:56:32 IST