ச. சிவானந்தையர்
ச. சிவானந்தையர் (வித்துவான் சிவானந்தையர்) (1873-1916) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சைவ நூல்கள் பலவற்றை மொழிபெயர்ப்புகள் செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ச. சிவானந்தையர் யாழ்ப்பாணம் தெல்லிப்பிழைக்கு அருகிலுள்ள பன்னலையில் சபாபதி ஐயருக்கு மகனாக 1873-ல் பிறந்தார். ஏழாலையிலுள்ள சி.வை. தாமோதரம்பிள்ளையால் நிறுவப்பட்ட பாடசாலையில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றார். தலைமையாசிரியராய் இருந்த அ. குமாரசுவாமிப் புலவர் இவரின் ஆசிரியர். முன்தலையில் உயரமான புடைப்பு இருந்ததால் மிடாத்தலையர் என்று அழைத்தனர்.
தனிவாழ்க்கை
ச. சிவானந்தையரின் மகளைப் பண்டிதர் ப. இரத்தினேஸ்வர ஐயர் திருமணம் செய்துகொண்டார். சிதம்பரம் பச்சையப்ப முதலியார் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ச. சிவானந்தையர் யாப்புஅணி பயின்று வரும் கவிதைகளை எழுதினார். சிதம்பரத்தை அடைந்து, பச்சையப்ப முதலியாரால் நிறுவப்பட்ட ஆங்கிலப் பாடசாலையில் தமிழ்ப் பண்டிதராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். சிதம்பரத்தில் சாஸ்திரி ஒருவரிடம் தருக்க சங்கிரக நூலைக் கற்றார். ’தருக்க குடார தாலுதாரி’ எனப்பட்ட திருஞானசம்பந்த பிள்ளையின் நூலை சாஸ்திரியின் உதவியோடு தமிழில் மொழிபெயர்த்து நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் என வெளியிட்டார். நாற்கவிராசநம்பி இயற்றிய "அகப் பொருள் விளக்கம்" என்னும் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். புலியூர்ப்புராணம் புலியூர் அந்தாதி போன்ற நூல்களை இயற்றினார்.
மறைவு
ச. சிவானந்தையர் 1916-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- புலியூர்ப் புராணம்
- புலியூர் அந்தாதி
- சனி துதி
- அகப்பொருள் விளக்கம் உரை
மொழிபெயர்ப்பு
- நியாயபோதினி
- பதகிருத்தியம்
- அன்னம்பட்டீயம்
- நீலகண்டீயம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ச. சிவானந்தையர்:தமிழிணையக்கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Mar-2023, 06:45:15 IST