ச. இராமலிங்க ஐயர்
ச. இராமலிங்க ஐயர் (பொ.யு. 1649) தமிழ், சைவ அறிஞர். புலவர், ஜோதிடர். வடமொழியிலிருந்து தமிழுக்கு சந்தானதீபிகையை மொழிபெயர்த்ததும் தமிழ் காலண்டரை பதிப்பித்ததும் இவரின் முக்கியமான பங்களிப்பு.
பிறப்பு, கல்வி
ச. இராமலிங்க ஐயர் சந்திரசேகர ஐயரின் மகனாக பொ.யு. 1649-ம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சிறுவயதிலேயே வடமொழி தென்மொழி இரண்டையும் கற்றுத் தேர்ந்தார். வேத ஆகம இதிகாச புராணங்கள், சோதிட சாத்திரங்களையும் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
பொ.யு. 1667-ம் ஆண்டு, தன் பதினெட்டு வயதில் ஈழத்தில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்து பதிப்பித்தார். இது ஆரியபடசித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு வருசி முனிவரின் வாக்கியவிதிப்படி அமைந்தது. இதுவே இலங்கையில் தற்போதும் விளங்கும் வாக்கிய பஞ்சாங்கம். இவருக்குப் பிறகு இவரின் வழி வந்த மாணவர்கள் இப்பணியைத் தொடர்ந்தனர்.
சந்தானதீபிகை எனும் சோதிட நூலை 1713-ல் மொழிபெயர்த்தார். இது இராமலிங்க முனிவர் இல்லறத்தோர்க்கு அவசியமாகிய சந்தான பலன்களை விளக்கும் வடமொழியில் அமைந்த நூல். புரசைப் பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடத்தில் 1868-ல் அச்சிடப்பட்டது. சு. நடராசையர் பரிசோதித்துப் பொழிப்புரை செய்தார். ச.இ. சிவராமலிங்கையர் 1901, 1940-ம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தார்.
இறுதிக்காலம்
யாழ்ப்பாணம் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நல்லூரிலிருந்து வட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆராலிக்கு குடிபெயர்ந்தார். தன் இறுதிக்காலம் வரை அங்கு வாழ்ந்தார்.
நூல்கள்
- சந்தானதீபிகை (1901, 1904)
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- அராலி இராமலிங்க முனிவர் (thejaffna.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:07 IST