under review

சௌந்தர் ராஜன்

From Tamil Wiki
சௌந்தர்ராஜன்
ஆசிரியருடன்

சௌந்தர் ராஜன் (ஜூன் 18, 1975) (யோகா சௌந்தர்) யோகப்பயிற்சி ஆசிரியர். பிகார் மரபு எனப்படும் சத்யானந்த யோக முறையின் முதுநிலை ஆசிரியர்.

பிறப்புகல்வி

சௌந்தர் ராஜன் கோவிந்தராஜன்- சூடாமணி இணையருக்கு மதுரையில் ஜூன் 18, 1975-ல் பிறந்தார். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். வணிகவியல் முதுகலைப்படிப்பை மதுரை காமராஜர் பல்கலையில் நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

சௌந்தரின் மனைவி சாரதா யோகப் பயிற்சிகளில் உதவுகிறார். மகன் சத்ய நாராயணன். நிதி ஆலோசகராகப் பணியாற்றிய சௌந்தர் முழுநேர யோகப்பயிற்சியாளராகச் செயலாற்றி வருகிறார்.

யோகச் செயல்பாடுகள்

யோகக் கல்வி

சௌந்தர் ராஜன் 2006 முதல் 12 வருடங்கள் யோக மரபின் கல்வியை, பீஹார் சத்யானந்த யோக மரபிலும், பின்னர் சிவானந்த குருகுலம் (ரிஷிகேசம்) கற்றுக்கொண்டார். கிரியா யோகம் எனும் உயர்நிலைக் கல்வியை பீஹாரிலும், யோகவேதாந்த சாரம் எனும் தத்துவக் கல்வியை சிவானந்த குருகுலம் ரிஷிகேஷிலும் முறைப்படி தங்கி கற்றுக்கொண்டு முதுநிலை பயிற்சியாளராக ஏற்கப்பட்டார்.

எழுத்தாளர் பாலகுமாரன் அளித்த உந்துதலில் சௌந்தர் தனது ஆசிரியர் சிவரிஷியை கண்டடைந்து, யோக அடிப்படைகளை அறிந்தார். சிவரிஷி அவரை சுவாமி சத்யானந்த சரஸ்வதி மற்றும் நிரஞ்சனானந்த சரஸ்வதி ஆகியோருடன் அனுப்பி மேலும் பாடம் கற்க வைத்தார். பீஹாரில் முறைப்படி ஆன்மீக வாழ்வியலுக்கான தீட்சை பெற்று 15 வருடங்கள் "ஜிங்யஸு' (தேடல் கொண்ட மாணவன் ) எனும் நிலையை நிறைவு செய்துவிட்டு, ' கர்ம சன்யாசி ' எனும் இல்லறத்துறவு நிலைக்கு சுவாமி நிரஞ்சன் தீட்சை வழங்கினார். 2024ல் தென்னகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு முதுநிலை யோக மரபாசிரியர்களில் சௌந்தர் ராஜனும் ஒருவர்.

யோகக் கொள்கை

சௌந்தர் ராஜன் பதஞ்சலி முன்வைத்த மரபான யோக முறையை கடைப்பிடிக்கிறார். கர்மசன்யாச சாதனா என்னும் இல்லறத்துறவு - யோகப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். யோகத்தை யோகப் பயிற்சிகளாக இல்லாமல் வாழ்நாள் தவமாக முன் வைக்கும் 'யோகதரிசனம் ' என கொள்கிறார்.

யோக வகுப்புகள்

சௌந்தர் ராஜன் சென்னை வடபழனியில் சத்யானந்த யோக மையத்தை நிறுவி அங்கே யோகப்பயிற்சி அளிக்கிறார். முழுமையறிவு வகுப்புகளில் தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்துகிறார். தமிழகத்தில் பல இடங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலும் யோக வகுப்புகளை நடத்துகிறார்.

யோகநூல்கள்

சௌந்தர் ராஜன் யோகப்பயிற்சிகள் பற்றி 'ங போல்' வளை என்னும் நூலை எழுதியுள்ளார்

இலக்கியச் செயல்பாடுகள்

சௌந்தர் ராஜன் நவீன இலக்கிய ஈடுபாடு உடையவர். அவருடைய சத்யானந்த யோகமையத்தில் தொடர்ச்சியாக இலக்கிய அமர்வுகளை நடத்தி வருகிறார். நவீன மனிதனின் அக, புறச் சிக்கல்களை இலக்கியமே பேசுகிறது என்றும், அதை அறிந்தவரே யோகமுறையை இன்றைய மனிதர்களுக்காக அமைத்துக்கொள்ள முடியும் என்றும் எண்ணுகிறார். சௌந்தர் ராஜன் இலக்கியக் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

மதிப்பீடு

சௌந்தர் ராஜன் நவீன இலக்கிய அறிமுகம் உடைய யோக ஆசிரியர், ஆகவே இன்றைய மனிதர்களின் வாழ்க்கைச்சிக்கல்களை விரிவாக புரிந்துகொண்டு மரபான யோகமுறையை அதற்கேற்ப வடிவமைத்துக்கொண்டு தன் யோகப்பயிற்சிகளை அளிக்கிறார். பதஞ்சலியின் யோக மரபை உரிய தத்துவ விளக்கத்துடன் கற்பிக்கிறார்

நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Sep-2025, 08:21:27 IST