under review

சோழபாண்டிபுரம் - கொங்கரையர்பள்ளி

From Tamil Wiki
சோழபாண்டியபுரம் மலை ஆண்டிமலை

சோழபாண்டிபுரம் - கொங்கரையர்பள்ளி (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) திருக்கோயிலூர் அருகேயுள்ள சமணத்தலம்

இடம்

சோழபாண்டியபுரம் அல்லது சோழவண்டிபுரம் அல்லது சோழபாண்டிபுரம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுக்காவில் அமைந்துள்ளது. பொ.யு. 10-ம் நூற்றாண்டில் சமண சமய முக்கியத்துவம் வாய்ந்த தலமாகத் திகழ்ந்திருக்கிறது. இவ்வூரை ஒட்டியுள்ள மலை ஆண்டி மலை என அழைக்கப்படும். இதில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முன்பு சமணப்பள்ளியாக திகழ்ந்திருக்கிறது.

குகைகள்

அம்பிகா

சோழபாண்டிபுரம் குகையில் ஏறத்தாழ எட்டு அடி நீளமுடைய ஆறு கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சமணத்துறவியர் வாழ்ந்த இப்படுக்கைகளை இவ்வூர் மக்கள் பஞ்சபாண்டவர் படுக்கை என்று அழைக்கின்றனர். இங்குள்ள கல்வெட்டு, சிற்பச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படுக்கைகள் பொ.யு. 10-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கூறலாம்.

இக்குகைப்பாழியினை அடுத்து இரண்டு பாறைகள் சிறிது இடைவெளியுடனும், மேற்பகுதி ஒட்டியவாறும் காணப்படுகின்றன. இவ்வாறு சிறிய இடைவெளியுடன் அடுத்தடுத்துக் காணப்படுவதால் அவற்றின் உட்பகுதி குகை போன்ற அமைப்பினை ஒத்திருக்கிறது.

சிற்பங்கள்

சோழபாண்டிபுரம்

இப்பாறைகளின் உட்பகுதியில் எதிரெதிராக கோமதீஸ்வரர், பார்ஸ்வநாதர் ஆகியோரது சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன இந்த குகை போன்ற அமைப்பின் பின்புறத்தில் நான்கு அடி உயரமுள்ள கற்பலகையில் அம்பிகா யக்ஷியின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. பார்வஸ்நாத தீர்த்தங்கரர், கோமதீஸ்வரர், பத்மாவதி ஆகியோரது சிற்பங்கள் அனைத்துமே பொ.யு. 10-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியினைக் கொண்டு விளங்குகின்றன.

சோழபாண்டிபுரம்

இங்குள்ள சிற்பங்களுள் முக்கியமானது அம்பிகாயக்ஷி. இத்தேவியின் வலதுகை அருகில் நிற்கும் பணிப்பெண்ணின் தலையைத்தொட்டவாறும், இடதுகை மார்பிற்கருகில் தூக்கிவைக்கப்பட்டவாறும் உள்ளன. இடதுகையில் கிளி ஒன்று அமர்ந்திருக்கிறது. யக்ஷியின் வலது பக்கத்தில் கமுகமரத்தின் வடிவமும், இவளது காலுக்கு அடியில் நிமிர்ந்து நோக்கியவாறுள்ள சிங்கத்தின் உருவமும் படைக்கப்பட்டுள்ளன. இவ்வூர் மக்கள் இவளைக் காளியம்மன் என்று கூறுகின்றனர்.

கல்வெட்டு

இச்சிற்பங்களைக் கொண்ட பாறையின் முகப்பில் பொ.யு. 10-ம் நூற்றாண்டினைச் சார்ந்த கல்வெட்டொன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது "ஸ்வஸ்திஸ்ரீ வேலிகொங்கரையர் புத்தடிகள் செய்வித்ததேவாரம்" என்னும் வாசகத்தைக்கொண்டுள்ளது. அதாவது வேலிகொங்கரையர் புத்தடிகள் என்பவர் இந்த சிற்பங்களடங்கிய கோயிலை (தேவாரத்தை) உருவாக்கியுள்ளார் எனப் பொருள்படும். இந்த தேவாரத்திலுள்ள சிற்பங்களுள் அம்பிகா யஷிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள மற்றொரு பாறையிலுள்ள சாசனம் கண்ட சோழனது இரண்டாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 952) பொரிக்கப்பட்டது. பாடல் வடிவிலான இக்கல்வெட்டு சித்தவடவன் என்னும் சேதிராய சிற்றரசன் பனைப்பாடி என்ற இப்பள்ளியிலுள்ள திருவுருவங்களின் வழிபாட்டுச்செலவிற்காக வழங்கியதாகக் கூறுகிறது. மேலும் குறண்டியைச் சார்ந்த குணவீர பட்டாரகர் என்னும் துறவியரது பெயரும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. சித்தவடவன் என்னும் சிற்றரசன் திருக்கோயிலூருக்குத் தலைவன் எனவும், மலையகுலோத்பவன் என்ற பட்டப் பெயரினைக் கொண்டவன் எனவும் அறியலாம்

சோழபாண்டியபுரம் பாகுபலி

சோழப்பேரரசிற்குட்பட்டு திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் சேதிராயர்.. இந்தப் பரம்பரையில் வந்த மன்னருள் ஒருவனே சித்தவடவன் என்பவன். இவன் சக்திநாதன் எனவும், நரசிம்மன் எனவும் பெயர்களுடையவன் என்றும் கூறப்படுகிறது. (ஏ.ஏகாம்பரநாதன்)

அடிக்குறிப்புகள்

  • படங்கள் சோழபாண்டியபுரம்
  • சோழபாண்டியபுரம் இணையப்பக்கம்
  • Cholapandiyapuram - Wikiwand
  • R. Nagaswamy, "Asoka and the Tamil country-A link", Express Magazine, 6-12-81
  • Mahadevan, Corpus of Tamil Brahmi Inscriptions, Mamandur 1
  • T. V Mahlingam, South Indian Palaeography
  • K குமார், "வட ஆர்க்காட்டில் சமணர் கல்படுக்கைகள்" திணமணி, 6-6-91
  • R. Champakalakshmi, "An unnoticed Jaina cavern near Madurantakam" Journal of the Madras University,
  • கோ. கிருட்டினமூர்த்தி, 'செஞ்சிப்பகுதியில் புதிய சமணக் கல்வெட்டு, முக்குடை, ஜூலை, 1985
  • K. R. Srinivasan, Cavetemples of the Pallavas pp 31,71
  • ஏ. ஏகாம்பரநாதன், திருநறுங்கொண்டை வரலாறு
  • ஏ. ஏகாம்பரநாதன், "பகவதி மலையில் பண்டைய சமணச் சான்றுகள்" நல்லறம், ஜனவரி, 1976 பக் 5
  • P. Venkatesan "Two Jaina inscriptions from Siyamangalam," Journal of the Epigraphical Society
  • Montgomery and T. S. Baskaran, "The Armamalai Paintings" Lalitkala, No. 16
  • R. Nagaswamy, "Jaina Monuments in Tamilnadu", Tamil Arasu, Nov. 1974
  • Montgomery & T. S. Baskarand, op. cit, plate. VII figs. 2-4
  • P. B. Desai, Jainism in South India
  • C. Sivaramamurti, Panorama of Jainart, P. 39. plate 546-549
  • கோ. கிருட்டின மூர்த்தி, "வழுதலங்குணம் சமணப்படுக்கைகள்", 'முக்குடை’, ஜுன், 1985
  • கோ. கிருட்டினமூர்த்தி, "மேல் கூடலூர் சமணக்கல் வெட்டுக்களும் படுக்கைகளும்," 'முக்குடை,’ செப்டம்பர், 1982
  • மயிலை சீனி, வெங்கடசாமி, "சோழவாண்டிபுரம்" முக்குடை, பிப்ரவரி 1976


✅Finalised Page