சோமேசர் முதுமொழி வெண்பா
சோமேசர் முதுமொழி வெண்பா (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நீதிநூல். சிவஞான முனிவர் இயற்றியது.
ஆசிரியர்
சிவஞான முனிவர் (முக்களாலிங்கர்) (சிவஞான யோகிகள்) தமிழ்ப் புலவர், சைவ சமய அறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்தார்.
நூல் அமைப்பு
சோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவரால் இயற்றப்பெற்றது. காப்புச் செய்யுள் நீங்கலாக திருக்குறளின் அதிகாரத்துக்கு ஒரு வெண்பா வீதம் 133 வெண்பாக்கள் உள்ளன. அதிகாரத்துக்கு ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளாக அமைக்கிறார். அக்குறட்பாவின் பொருளுக்கேற்ற ஒரு கதையினை முன்னிரண்டு அடியில் அமைக்கிறார். ஒவ்வொரு பாவிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் 'சோமேசா' என்ற விளியைக் கொண்டுள்ளது. சோமேசர் என்பது குளத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர். சோமேசர் என்பதற்கு நிலவின் (சந்திரனின்) தலைவன் என்று அர்த்தம். முதுமொழி என்ற சொல் திருக்குறளைக் குறிக்கிறது. திருக்குறளுக்குரிய கதைகள் பெரியபுராணம், இராமாயணம், கந்த புராணம், பாரதம், திருவிளையாடற்புராணம் போன்ற பல புராண நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இறையனார் அகப்பொருள் கதை, விசுவாமித்திரன் கதை, போஜராஜன் கதை, கரிகாற்சோழன் இமயத்தில் புலிபொறித்த செய்தி போன்றவையும் எடுத்தாளப்பட்டுள்ளன.
பாடல் நடை
அன்புடைமை
நளவெண்பாவிலிருந்து ஒரு நிகழ்ச்சி இங்கு உவமையாக்கப்படுகிறது. ரிதுபர்ணனுக்குப் பாகனாக இருந்த நளனை அடையாளம் கண்டறிய தமயந்தி தன் இரு மக்களையும் அவன்முன் விளையாட விட்டாள். தன் மக்களைக் கண்ட நளன் மனமுருகி, அன்பினால் கண்ணீர் பெருக்குகின்றான். இதனை
தோன்றா வகை கரந்தும் தோன்றலைக் கண்டு உள்நெகிழ்ந்து
தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா - தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.(8)
செய்நன்றியறிதல்
இதற்கு ஒளவையார் பற்றிய ஒரு நிகழ்ச்சி சான்றாக அமைகிறது. காட்டு வழியில் ஒளவையார் சென்றுகொண்டிருந்தபோது மிகவும் பசியால் வருநதி, இடையன் ஒருவனைக் கண்டு உணவு கேட்டார். அவன் தனக்கென வைத்திருந்த ஆட்டுப்பால் கலந்த கூழை அவருக்குக் கொடுத்தான். உண்டு பசிநீங்கிய ஒளவை அவன் பெயரை வினவினார். அவன் 'அசதி' என்று கூறினான். 'அசதிக்கோவை' என்று அவன் பெயரால் ஒரு நூல் பாடினார் ஒளவை.
பன்னும் அசதி நன்றி பாராட்டிக் கோவை நூல்
சொன்னாளே ஒளவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர் பயன்தெரிவார் (11)
என்று ஔவையாரால் அசதிக்கோவை தோன்றிய நிகழ்ச்சி எடுத்துரைக்க்கப்படுகிறது.
உசாத்துணை
சோமேசர் முதுமொழி வெண்பா- தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:20:13 IST