under review

சோதனையும் சாதனையும்

From Tamil Wiki
சோதனையும் சாதனையும்

சோதனையும் சாதனையும் (1975) கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய தன்வரலாற்றுநூல். விடுதலைப்போரிலும் கிராமநிர்மாண இயக்கத்திலும் பெரும்பங்காற்றியவர் சுத்தானந்த பாரதியார். பன்மொழி அறிஞர். துறவி. வ.வெ.சுப்ரமணிய ஐயரின் பாரத்வாஜ ஆசிரமம், பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் உட்பட பல அமைப்புகளில் வாழ்ந்தவர். இந்நூல் அவருடைய அனுபவங்களின் பதிவு

எழுத்து, பிரசுரம்

சுத்தானந்த பாரதியார் இந்நூலை இரு பகுதிகளாக எழுதினார். 1965-ல் ஆத்மசோதனை என்னும் பெயரில் எழுதினார். சோதனையும் சாதனையும் என்னும் நூல் 1975-ல் வெளியிடப்பட்டது. இரு நூல்களையும் இணைத்து சுத்தானந்த நூலகம் 2002-ல் ஒரே நூலாக சோதனையும் சாதனையும் என்னும் பெயரில் வெளியிட்டது.

உள்ளடக்கம்

முதல் அத்தியாயத்தில் தன்னை ஒரு வழிப்போக்கன் என்று குறிப்பிடும் சுத்தானந்த பாரதி தன் அரசியல், இலக்கியம் எல்லாமே ஆன்மசாதகத்துக்கான வழிகளே என்கிறார். 'நான் எதற்காக என் அனுபவங்களை எழுதவேண்டும்? அதுவும் உள்ளெழுச்சிதான். ஒரு மனிதன் தன் முயற்சியாலெப்படி வாழ்ந்தான் எதில் ஆழ்ந்தான் என்ன நன்மை சூழ்ந்தான் என்றெல்லாம் ஆத்மா சிந்திக்கிறது. அந்தச்சிந்தனைச் சித்திரங்கள் அனுபவப்பீலியால் தீட்டப்பெற்றன’ என்கிறார்.

தனித்தனி அனுபவங்களாக இந்நூல் விரிந்து செல்கிறது. காந்தி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, ராஜாஜி, வ.வே.சு.அய்யர், ஈ.வெ.ராமசாமி பெரியார் என வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் நிறைந்துள்ளன. சுத்தானந்த பாரதி தேசியவிடுதலை இயக்கத்துக்காக நடந்தே ஊர்கள் தோறும் செல்கிறார். அவர் ஒவ்வொரு ஊரிலும் சந்தித்த மனிதர்களை விரிவாக பதிவு செய்கிறார். அதன் வழியாக அக்காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான அறியப்படாத மனிதர்கள் பதிவுபெறுகிறார்கள். தன் நூல்கள் எழுதப்பட்ட காலம், நோக்கம், சூழல் ஆகியவற்றையும் பதிவுசெய்கிறார். இறுதியாக சுத்தானந்த பாரதியார் யோகசமாஜம் அமைத்து உலகநன்மைக்காக ஏற்பாடு செய்வது வரை இந்நூல் நீள்கிறது

நடை

சுத்தானந்த பாரதியார் குறுகிய சொற்றொடர்களில் பேச்சுமொழியிலும் மேடைப்பேச்சு மொழியிலும் எழுதுபவர். சான்றுக்கு நூலில் ஒரு பகுதி:

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன். நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

இலக்கிய இடம்

இந்நூல் சீரான ஒரு வரலாற்று ஆவணம் போல விடுதலைப்போராட்டச் சூழலைச் சொல்கிறது. சுத்தானந்த பாரதியாருக்கு காந்தி உட்பட எவர்மேலும் பக்தி இல்லை. ஆகவே அனைவரைப்பற்றியும் வழிபாட்டுணர்வு இல்லாமல் ஆளுமைகளை பதிவுசெய்கிறார். வரலாற்றாய்வாளர்களுக்கு அப்பகுதிகள் முக்கியமானவை. சுத்தானந்த பாரதிக்குச் சார்புநிலைகளும் இல்லை. புகழ்பெற்ற பாரத்வாஜ ஆசிரம விவாதத்தின்போது (வ.வெ.சுப்ரமணிய ஐயர் தன் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை தனியாக உணவருந்தச் செய்தார் என ஈ.வெ.ராமசாமி பெரியார் குற்றம்சாட்டினார். அது காங்கிரஸ் இரண்டாக உடைய வழிவகுத்தது) பாரத்வாஜ ஆசிரமத்தில் ஆசிரியராக இருந்தவர் சுத்தானந்த பாரதியார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாருடனும் அணுக்கமாக இருந்தார். இரு தரப்பையும் சாராமல் அந்நிகழ்வை பதிவுசெய்கிறார். அவ்வாறு பல தருணங்கள் இந்நூலில் உள்ளன. விடுதலைப்போரில் ஈடுபட்டு அறியப்படாமல் மறைந்த பலர் நினைவுகூரப்படுகிறார்கள். இந்திய விடுதலைப்போரில் இருந்த உட்பூசல்களும் ஆணவச்சிக்கல்களும் ஆளுமைமோதல்களும் பதிவாகியிருக்கின்றன.

உசாத்துணை


✅Finalised Page