under review

சொக்கர்

From Tamil Wiki
சொக்கர்

சொக்கர் (சொக்கன், க.சொக்கலிங்கம்) (மே 02, 1930 - அக்டோபர் 02, 2004) இலங்கைத் தமிழ் எழுத்தாளர். இதழாளர். இலங்கை நவீன இலக்கியத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்

பார்க்க என்.சொக்கன் (தமிழக எழுத்தாளர்)

பிறப்பு, கல்வி

சொக்கனின் அம்மா மீனாட்சியம்மாள்

க.சொக்கலிங்கம் யாழ்ப்பாணம் அருகே ஆவரங்காலில் மே 02, 1930 அன்று கந்தசாமிச் செட்டியாருக்கும் மீனாட்சிக்கும் பிறந்தார்.சொக்கனுக்கு ஒரு வயதானபோது தந்தையை இழந்து கல்வி பயிலுவதற்காக தாயாரால் யாழ்ப்பாணம் நீராவியடிக்கு அழைத்து வரப்பட்டார். சொக்கன் தமது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யாழ்ப்பணம் வண்ணார்பண்னை நாவலர் பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்டான்லிக் கல்லூரியிலும் ஆசிரியப் பயிற்சியை பலாலி ஆசிரியக் கலாசாலையிலும் (1950-1951) பெற்றார் பின்னர் தமிழ் வித்துவான் பட்டத்தை (Diploma in Tamil-1953) பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலைமாணிப் பட்டத்தை (1968-B.A) இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலைமாணிப் பட்டத்தை (1977-M.A) ஈழத்து தமிழ் நாடகவளர்ச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டும் பெற்றுக்கொண்டார். கலாநிதிப்பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கி இவரைக் கௌரவித்தது,

சொக்கனின் மகன்கள்

தனிவாழ்க்கை

சொக்கனது மனைவிபெயர் தெய்வானை. இவருக்கு ஆராவமுதன்(கனடா), ஞானஸ்கந்தன்(லண்டன்) ,பாலஸ்கந்தன் (பிரான்ஸ்) என மூன்று மகன்கள்

தமது 21-வது வயதில் வதுளை உவாக்கல்லூரியில் உதவி ஆசிரியராக தமது பணியைத் தொடங்கிய இவர் 1963 - 1973-ஆம் ஆண்டுகளில் யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் 1973 சிலாபம் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபராகப் பணியேற்ற சொக்கன் கோண்டாவில் இராமகிருஷ்ணாவில் கொத்தணி (கல்வி நிர்வாக சேவை) அதிபராகக் கடமையாற்றி 38 ஆண்டுகள் பணிக்குப் பின் 1990-ஆம் ஆண்டு ஒய்வைப் பெற்றுக்கொண்டார் . இடையில் 1976 - 1979-ல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் 1982 - 1983-ஆம் ஆண்டில் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராயும் பணியாற்றிய சொக்கன் தனது பணி ஓய்வுக்குப் பின் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) 1992 - 1993 பணிசெய்தார்.

சொக்கர் மலர்

பொதுவாழ்க்கை

சொக்கர் முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினரில் ஒருவர். அவர் வகித்த பதவிகள்

 • யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், 1959
 • அகில இலங்கைத் திருமுறை மன்றத்தின் தலைவர், 1989-1994
 • இலங்கை கம்பன் கழகம்- இணைச் செயலாளர், 1963-1966
 • இலங்கைச் சேக்கிழார் மன்றம் செயலாளர், 1965-1974
 • முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் செயலாளர், 1977-1990
 • யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் - செயலாளர், 1990-2002

இலக்கியவாழ்க்கை

சிறுகதை

சொக்கன் தன் பதிநான்காது வயதில் எழுதிய முதற் சிறுகதை 'தியாகம்" 1944-ல் வீரகேசரியில் பிரசுரமானது. 'வேதாந்தி" என்ற நடைச்சித்திரம் ஈழகேசரியில் பிரசுரமாகியது. ஈழகேசரியில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட மறுமலர்ச்சி இலக்கிய இதழுடன் சொக்கன் தொடர்பு கொண்டிருந்தார். அதில் குப்பையிலே மாணிக்கம், பொன்பூச்சு ஆகிய சிறுகதைகள் வெளியாகின. 1946-ல் மின்னொளி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சொக்கன் எழுதிய 'கடைசி ஆசை" என்ற சிறுகதை பரிசு பெற்றது.

சொக்கன் தனது வாழ்நாளில் 225 சிறுகதைகள்வரை எழுதியுள்ளார். அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான கடல் 1972-ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. 1987-ல் நடைபெற்ற இந்திய அமைதிப்படையின் இராணுவத் தாக்குதல்களின் நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்டு ஆலயமணி 1988 இதழில், அழைப்பு என்ற கதையை எழுதினார்.

நாடகம்

ஷேக்ஸ்பியர் எழுதிய வெனிஸ் வர்த்தகன்என்ற கதையைத் தழுவி நாடகமாக்கினார்.ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி என்னும் தலைப்பில் பேராசிரியர் சு.வித்தியானந்தனுடைய மேற்பார்வையில் இவர் சமர்ப்பித்த ஆய்வேடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுக்கொடுத்தது. ஈழத்துத் தமிழர் கலைகளுள் ஒன்றாகிய நாடகக்கலைபற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1978-ல் சாகித்திய விருது பெற்றது

நாவல்

சொக்கன் எழுதிய சீதா என்னும் நாவல் சாதிப்பிரச்சினையை பேசிய நாவல். சொக்கன் எழுதிய முதலாவது நாவல் மலர்ப்பலி 1949-ல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது.

கவிதைகள்

சொக்கனின் கவிதைகள் மரபான யாப்பில் அமைந்தவை. நல்லூர்க்கந்தன் திருப்புகழ் இந்தியாவில் வெளிவந்த பன்னிரண்டு தொகுதிகள் அடங்கிய சிறப்புத் தொகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. நசிகேசன் என்ற நெடும்பா 1966-ல் கல்கி தீபாவளிமலரில் வெளிவந்தது. நெடுப்பா - 3 என்பது கதைப் பாடற்தொகுதி. 20-க்கும்மேற்பட்ட நாடகங்களை சொக்கன் எழுதியுள்ளார். இவருடைய நாடகங்களில் பல இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப் பட்டன.

அவரது கட்டுரைத் தொகுப்புக்களாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்துள்ளன. ஈழத்து எழுத்தாளர்களில் அதிக நூல்களை எழுதியவர்களுள் ஒருவராக சொக்கன் கணிக்கப் படுகிறார்.

சொக்கனின் கருத்தியல் நோக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் திரு. த. இராஜகோபாலன் ஆவார். இவர் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டவர். 1940, 1950-களிலே இவரைச் சூழ்ந்து ஓர் எழுத்துலகப் படையே காணப்பட்டது எஸ்.பொ., டானியல், டொமினிக் ஜீவா இ. நாகராஜன் மற்றும் பிற்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களஎன்று பெயர்சூட்டிக் கொண்டவர்கள் பலருக்கு ஆதர்சபுருஷராக விளங்கியர் இவர். 'இராஜகோபாலனின் தொடர்பின் பிரதிபலிப்பை ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் 1940-ன் கடைக்கூற்றில் வந்த சொக்கனின் படைப்புகளில் காணலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் செம்பியன் செல்வன.

சொக்கன், ஆராவமுதன், அடியவன், வேனிலான், தேனீ, சுடலையூர்க் சுந்தான், பொய்யாம் மொழியார், சோனா,திரிபுராந்தகன், கன்றுக்குட்டி, ஈழத்துப் பேய்ச்சாத்தன், குறளன், ஞானம், ஜனனி, சாம்பவன், சட்டம்பியார், எதார்த்தன,; பாலன் ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார்.

விவாதம்

சொக்கன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினருள் ஒருவராய் இருந்த காலகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்களால் மரபு பழமைவாதம் என விமர்சிக்கப்பட்டபோது 'மரபு, தேங்கிய குட்டையல்ல" என்று வாதிட்டா. இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் பல தினகரனில் தொடர்ந்து வெளியாயின.

மறைவு

சொக்கன் அக்டோபர் 02, 2004 அன்று காலமானார்

இலக்கிய இடம்

சொக்கன் ஈழ இலக்கியச் சூழலில் மரபிலக்கியத்திற்கும் முற்போக்கு எழுத்துக்குமான ஒரு பாலம் என்றவகையில் முக்கியமானவர். அவருடைய கவிதைகள் மரபான தோத்திரப்பாடல்கள், மற்றும் பாரதிதாசனின் பாணியிலான கருத்துப் பிரச்சார வெளிப்பாடுகள். கதைகள், நாவல்கள் ஆகியவற்றில் மு.வரதராசனார் பாணியிலான நேரடியான கருத்துப் பிரச்சாரமும், அதற்கு இசைவாக உருவாக்கப்பட்ட நிகழ்வுகளுமே உள்ளன. நவீன இலக்கியத்திற்கான மறைபிரதித்தன்மை, குறிப்புணர்த்தும் தன்மை, வடிவ ஒருமை இல்லாதவை. ஈழச்சூழலில் பொதுவான முற்போக்குக் கருத்துக்களை முன்னெடுத்தவர், பின்னர் எழுதவந்த செ.கணேசலிங்கன் போன்றவர்களுக்கு முன்னோடி என்னும் வகையில் அவர் குறிப்பிடத்தக்கவர்

விருதுகள்

பரிசுகள்
 • கடைசி ஆசை -சிறுகதை.மின்னொலி சஞ்சிகை முதற்பரிசு, 1946
 • பிரயாணம்.தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு, 1960
 • சிலம்பு பிறந்தது -முதற் பரிசு.இலங்கக் கலைக் கழகம், 1960
 • சிங்ககிரிக்காவலன் .முதற்பரிசு இலங்கக் கலைக் கழகம், 1961
 • தபாற்காரச் சாமியார்- வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, 1966
 • நெடும்பா 3 இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது, 1986
 • மானத்தமிழ் மறவன் -இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது
 • கடல்.-இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, 1972
 • சலதி- இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு, 1987
 • ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, 1978
பட்டங்கள்
 • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை தமிழ்மாமணி பட்டம்
 • இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல் பட்டம்
 • தமிழிசைச் சபை குகஸ்ரீ பட்டம்
 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கியக்கலாநிதி பட்ட.ம்
 • இலங்கை அரசு சாஹித்தியரத்னா விருது

நூல்கள்

சிறுகதைகள்

225 மேற்பட்ட சிறுகதைகள் சொக்கனுடைய படைப்புகளாக உள்ளன

 • கடல் -15 கதைகளின் தொகுப்பு, 1972
 • சொக்கன் சிறுகதைகள் - 10 கதைகளின் தொகுப்பு, 2004
கவிதைகள்
 • நெடும்பா 3, 1982
 • வீரத்தாய், 1972
 • நல்லூர் கந்தன் திருப்புகழ். 1989
 • நல்லூர் நான்மணி மாலை, 1966
 • முன்னீச்சர வடிவழகாம்பிகை அந்தாதி
 • சைவப் பெரியாரின் சால்பை உரைத்திடுவோம்
 • கவிதைக் கதம்பம், 1974
நாடகம்
 • சங்கிலியன், 1951
 • இரட்டை வேஷம், 1962
 • இலக்குமணன் சீற்றம், 1952
 • கவரி வீசிய காவலன், 1972
 • மண்ண்டோதரி - ஈழமுரசு, பிப்ரவரி 5, 1984 முதல் ஆகஸ்ட் 5, 1984 வரை தொடராக வந்தது
 • கானல் வரி, 1976
 • கர்ணன், 1977
 • சீதாபஹரணம், 1978

நூல்வடிவில் வெளிவந்த நாடகங்கள்

 • சிலம்பு பிறந்தது, 1962
 • சிங்ககிரிக்காவலன், 1963
 • ஞானக் கவிஞன், 1966
 • தெய்வப்பாவை, 1968
 • நாவலர் நாவலரான கதை, 1969
 • மாருதப்பிரவல்லி, 1990
 • மானத்தமிழ் மறவன், 1993
நாவல்கள்
 • மலர்ப்பலி - ஈழகேசரி, 1949 - ஜனவரி 9, 1949 முதல் மார்ச் 27, 1949 வரை
 • செல்லும் வழி இருட்டு (1959-ல் தினகரனில் வெளியானது பின் வீரகேசரிப் பிரசுரமாக 1973-ஆம் ஆண்டுவெளிவந்தது.)
 • சீதா (1963), வீரகேசரி பிரசுரம், 1974
 • சலதி, 1985
மொழியாக்கம்
 • சத்தியஜித்ரேயின் பத்திக்சந்த்
ஆய்வுக் கட்டுரைகள்
 • பாரதி பாடிய பராசக்தி
 • இருபெரு நெறிகள்
 • நல்லைநகர் தந்த நாவலர்
 • மறுமலர்ச்சி. காலமும் கருத்தும்
 • இலக்கியக் கருவூலம்
இலக்கண நூல்கள்
 • இலக்கணத் தெளிவு
 • உரைநடைத்தெளிவு
பாட நூல்கள்
 • மனோன்மணி
 • கட்டுரைப் பூந்துணர்
 • கட்டுரைக்கோவை
 • இந்துசமயபாடம்
 • தமிழ் இலக்கிய விளக்கம்
 • இந்துநாகரிகம் பாகம் 1, 2, 3
 • திருக்குறள் உரை
பயண அனுபவநூல்
 • அக்கரைச்சீமையின் அனுபவங்கள், 2002
சிறுவருக்கான நூல்கள்
 • முயலாரின் சாகசங்கள்
 • படிப்பதெப்படி
அறிஞர் பற்றிய நூல்கள்
 • பைந்தமிழ் வளர்த்த பதின்மர், 1972
 • தமிழ் பேரன்பர் வித்துவான் க. சேந்தனார், 1984
 • சேர்.பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், 1976
 • விபுலானந்தர் பக்தி அமுதம்-1984
 • இராபகதூர் சி.வை, தாமோதரம் பிள்ளை (தினகரன் நவம்பர் 28, 1982 - ஜனவரி 30, 1983 வரை)
 • சைவம் வளர்த்த தையலர், 1977
தன் வரலாறு
 • பாலையும் சோலையும், 2002
ஆய்வுநூல்
 • ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, 1979

உசாத்துணை


✅Finalised Page