under review

சேசுநாதர் சதகம்

From Tamil Wiki
சதகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதகம் (பெயர் பட்டியல்)

சேசுநாதர் சதகம் (1848), இயேசுநாதரின் சிறப்பைக் கூறும் நூல். இதனை இயற்றியவர், வித்துவான் ந.சவரிமுத்து உடையார்.

வெளியீடு

சேசுநாதர் சதகம், தஞ்சாவூர் வில்ராயன்பட்டியைச் சேர்ந்த வித்துவான் ந.சவரிமுத்து உடையாரால் இயற்றப்பட்ட நூல். 1848-ல் இயற்றப்பட்ட இந்நூல், 1977-ல், ஒளிநிலையத்தாரால் முதன்முதலில் அச்சிடப்பட்டது. பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பிரதி எடுத்துப் பதிப்பிக்க உதவியவர் சு. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

வித்துவான் ந.சவரிமுத்து உடையார், தஞ்சாவூரில் உள்ள பூதலூரை அடுத்திருக்கும் வில்ராயன்பட்டியில் வாழ்ந்தவர். பெரு நிலக்கிழாராக வாழ்ந்த இவர், சிறந்த தமிழ்ப்புலமை உடையவராகவும், வித்துவானாகவும் விளங்கினார். பல கவிகளையும், நூல்களையும் இயற்றிய ந.சவரிமுத்து உடையார், சவரிமுத்துக் கவிராயர் என்றும் போற்றப்பட்டார். ராயநல்லூரில் வாழ்ந்த தன்னுடைய நண்பர் சத்தியநாதத் தென்கொண்டாரின் வேண்டுகோளுக்கிணங்க சேசுநாதர் சதகத்தை இயற்றினார்.

பொ.யு. 1848, பிலவங்க ஆண்டு சித்திரைத் திங்கள் 27-ம் நாள், வியாழக்கிழமை சேசுநாதர் சதக நூலை அரங்கேற்றியதாக நூலில் இடம்பெற்றிருக்கும் வேலாயுதக் கவிராயரின் சாற்றுக்கவி மூலம் அறிய முடிகிறது.

உள்ளடக்கம்

சேசுநாதர் சதகம், இயேசுநாதரின் சிறப்பையும், மக்கள் கடைபிடிக்கத்தக்க அறங்களையும், குறிப்பாகக் கிறிஸ்தவர் பின்பற்ற வேண்டிய அறங்களையும் கூறுகிறது. இயேசுநாதரின் சிறப்பைப் பேசும் இந்நூல், உலகமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த சீலங்களைச் சமய வேறுபாடின்றிக் காட்டுகிறது. அரசர். செல்வர், வணிகர், கடமைகளும், ஐம்பெரும் பாவங்களின் கொடுமையும், நிலையாமைக் கருத்துக்களும், புலவர் பெருமையும், கவிதையின் சிறப்பும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

சேசுநாதர் சதகத்தில் 'தெட்டிப் பறத்தல்', 'கிள்ளாக்கு', 'அணை', 'பவுசு', 'தீன், சடுத்தம்', 'மடுக்காலி', 'உதாசனம்' போன்ற பல புதிய வழக்குச் சொற்கள் இந்நூலில் இடம்பெற்றன.

மதிப்பீடு

கிறித்தவச் சதக நூல்களுள் குறிப்பிடத்தகுந்த சதக நூலாக சேசுநாதர் சதகம் நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சேசுநாதர் சதகம், ந.சவரிமுத்து உடையார், ஒளிநிலையம், முதல் பதிப்பு: 1977
  • கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014
  • பத்தொன்பதாம் நுாற்றாண்டு கிறித்தவச் சிற்றிலக்கியங்கள், முனைவர் மு.ஜெபமணி, விசாலாட்சி பதிப்பகம்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 04:49:55 IST