செ. ராஜேஸ்வரி
செ. ராஜேஸ்வரி (முனைவர் செ. ராஜேஸ்வரி; சத்யபிரபா) (பிறப்பு: ஜூலை 01, 1959) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், திறனாய்வாளர். மொழிபெயர்ப்பு, ஆய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
செ. ராஜேஸ்வரி, ஜூலை 01, 1959 அன்று, மதுரையில், பொ. செல்லையா - தங்கத் தாயம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆங்கில வழிக் கல்வியில் பயின்று பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருத மொழிகளைக் கற்றார். பட்டப்படிப்பை முடித்த பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கண வேற்றுமை மரபு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து இள முனைவர் (M. Phil) பட்டம் பெற்றார். 'தமிழ் ஆங்கிலச் செய்யுள் மொழிபெயர்ப்பில் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
செ. ராஜேஸ்வரியின் திருமண வாழ்க்கை பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.
கல்விப் பணிகள்
செ. ராஜேஸ்வரி சமயச் சொல் அகராதி, எபிரேயம் - தமிழ் அகராதி, கிரேக்கம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்காக மக்கள் கல்வி அறக்கட்டளையினருடன் இணைந்து பணியாற்றினார். ஈரோடு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி போன்றவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1993-ல், ஆசியவியல் நிறுவனத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியைத் தமிழில் எளிதில் கற்கும் வகையில், யூகோ ஃபுகுரோயியிடன் இணைந்து மூன்று பாகங்கள் கொண்ட நூல் ஒன்றைத் தயாரித்தார். வெளிநாட்டவருக்குத் தமிழ் கற்பிக்கப் பாட நூல் ஒன்றை உருவாக்கினார். தமிழ் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி இலக்கணம் கற்பித்தார். அரவிந்த் கண் மருத்துவமனையில் மொழி பெயர்ப்பாளராகவும், வேற்று மாநில மருத்துவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தமிழ் தெரியாத கண் மருத்துவர்களுக்குத் தமிழ் கற்பிக்க 'Tamil for Non-Tamils' என்ற பாட நூலை உருவாக்கினார். செவிலியர் பயிற்சி பெறும் இளம் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க 'Easy English' என்ற ஆங்கிலப் பாட நூலை உருவாக்கினார். மக்கள் கண்காணிப்பகத்தில் வெளி மாநிலத்தவருக்கு ஆங்கிலமும் வெளி நாட்டவருக்குத் தமிழும் கற்பித்தார். வெளிநாட்டு மாணவர்களுக்காக 'சென்டர் ஃபார் லேங்குவேஜ் ஸ்டடீஸ்' (Centre for Language Studies) என்ற பெயரில் தனி மையம் ஒன்றை அமைத்துத் தமிழ் கற்பித்தார்
இலக்கிய வாழ்க்கை
செ. ராஜேஸ்வரி, 'புலமை', 'செந்தமிழ்', 'வளர்தமிழ்', 'ஓங்கு தமிழ்', 'ஆராய்ச்சி' போன்ற ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முத்து மோகன், தி.சு.நடராசன் போன்றவர்கள் மூலம் பெற்ற அறிமுகத்தால் சமூகவியல் சார்ந்த ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார். சமய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றைக் கவிஞரும், எழுத்தாளருமான 'முத்தமிழ் விரும்பி' நடத்தி வந்த 'நெருஞ்சி' காலாண்டு இதழில் எழுதினார். அவ்விதழில் 'தமிழ்நாட்டில் இருந்து ஜப்பானுக்குப் பெண் தெய்வ வழிபாடு' பற்றி இவர் எழுதிய தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. பின்னர் அது நூலாகவும் வெளிவந்தது.
தமிழ் நாளிதழ்களில் பல்வேறு ஆன்மிகத் தொடர்களை எழுதினார். தினகரன் ஜோதிட மலரில் இவர் எழுதிய 'என்னோட ராசி நல்ல ராசி' தொடர் வாசக வரவேற்பைப் பெற்றது. ஆன்மிகம் மாதமிருமுறை இதழில் 'மர வழிபாட்டின் வேர்களைத் தேடி', 'காளியும் தேவியும்', 'உலகளாவிய காளி கோட்பாடு' போன்ற ஆன்மீகக் கட்டுரைத் தொடர்களை எழுதினார். 'சத்யபிரபா' என்ற புனை பெயரில் பல சிறுகதைகளை எழுதினார்.
எம்.ஜி.ஆர். நூல் வரிசை
எம்.ஜி.ஆர். பற்றி 'ஒப்பனையும் ஒரிஜினலும்-எம்.ஜி.ஆர். 100' என்ற தலைப்பில் விகடன் இணைய தளத்தில் தொடர் கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து வாழ்க்கை வரலாறாக அல்லாமல், எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூலாக 'வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர். நூல் வரிசை' என்ற பொதுத் தலைப்பில் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அதன் தொடர்ச்சியாகக் கனடாவில் இருந்து வரும் www.tamilauthors.com என்ற இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். எம்.ஜி.ஆர். பற்றிய தனது ஆய்வு நூல்களை ஆர்வமுள்ள அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் 'ஆர்கைவ்' தளத்தில் ஆவணப்படுத்தினார் [1].
மொழிபெயர்ப்பு
செ. ராஜேஸ்வரி, 'இண்டியன் உமன் சேஞ்சஸ் அண்ட் சாலஞ்சஸ்' (Indian Women-Changes and Challenges) என்ற நூலை ஆங்கிலப் பேராசிரியர் ரீட்டம்மா டேவிட் உடன் இணைந்து மொழிபெயர்த்தார். தொடர்ந்து முத்தமிழ் விரும்பியின் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மள்ளர்கள் வரலாற்று மீட்டுருவாக்கம் குறித்து நான்கு நூல்களை மொழிபெயர்த்தார். சமயச் சொல்லகராதி தொகுக்கும் பணியிலும், திருமறை மொழிபெயர்ப்பு சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டார். தமிழ் இலக்கிய நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் 'Urban Theology', 'Vaigai Paripatal', 'Assisted reproductive technologies and its Impact on Women', 'Eco Vision and Mission', 'Bachelor's Study Materials for Social Science [IGNOU]', 'Neuro Ophthalmology Articles' போன்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளை எழுதினார்.
இதழியல்
செ. ராஜேஸ்வரி, 'லவ் தமிழ்' என்ற ஆங்கில பன்மொழி மின்னிதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். 'தமிழணங்கு', 'சக்தி' என்று இரண்டு இதழ்களை நடத்தி வருகிறார். தமிழணங்கு ஆய்விதழ். சக்தி மகளிருக்கான இதழ்.
பதிப்பு
செ. ராஜேஸ்வரி, 'சந்திரோதயம் பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனம் மூலம் தனது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகிறார்.
விருதுகள்
- தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- தஞ்சை நெருஞ்சி இலக்கிய இயக்கம் அளித்த சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- பெண் சாதனையாளர் விருது
மதிப்பீடு
செ. ராஜேஸ்வரி, பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். எம்.ஜி.ஆர். பற்றிய இவரது ஆய்வு நூல்கள் முக்கியமானவை. தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழில் இவர் செய்திருக்கும் மொழிபெயர்ப்புகளும், ஆய்வு நூல்களும், எழுதியிருக்கும் பாட நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை. கல்விப்புலத்தில் ராஜேஸ்வரி ஆற்றியிருக்கும் சேவைகளும் கவனத்தில் கொள்ளத்தக்கன. கல்வியியல், ஆய்வு, மொழிபெயர்ப்பு என மூன்று தளங்களிலும் முக்கியப் பங்களிப்பாற்றியவராக முனைவர் செ. ராஜேஸ்வரி மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- பயணக் கவிதைகள்
- ரோஜா மொட்டு
சிறுகதைத் தொகுப்பு
- அமராவதியின் காதல்
ஆய்வு நூல்கள்
- தேவேந்திரன்
- பண்பாட்டு நகர்வுகள்
- மொழிபெயர்ப்பியல் ஆய்வு
- பெண் பூப்பின் புனித வழிபாடு
- கவிதையில் அடிக்கருத்தியல் ஆய்வு
- கவிதை மொழிபெயர்ப்பு
- தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்குப் பெண் தெய்வ வழிபாடு
- பூ மர நிழலில் களமும் காலமும்
- கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பியின் பாடுபொருளும் பாசப்பொருளும்
- மருத நிலப் பெண் தெய்வங்கள்
- கலீல் ஜிப்ரான் பாடல்கள்
- கவிதையில் காதல்
- வேளாண் மரபில் பூப்பும் - விதையும்
- முன்னோர் வழிபாடு
- இருநிலத்தில் திருமுருகன்
- யானைக் கடவுள்
- மனித நேயச் செம்மல் சைதை சா. துரைசாமி அவர்களின் சிறப்புத் திட்டங்களும் செயல்பாடுகளும்
எம்.ஜி.ஆர் பற்றிய நூல்கள்
- எம்.ஜி.ஆர். நிழல் நிஜம் நிரந்தரம்
- சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பப்பா
- வீரமகன் போராட வெற்றி மகள் பூச்சூட
- மகளிர் போற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
- எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி
- எம்.ஜி.ஆர். ஒரு கலியுகப்போராளி
- ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்.
- வெற்றிப் படிக்கட்டில் நாடோடி மன்னன்
- நீங்க நல்லா இருக்கணும் (எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் -1)
- பாட்டுடைத் தலைவன் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் -2)
- இரசிகர்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.
- முத்தமிழ்க் காவியம் மதுரை வீரன் எம்.ஜி.ஆர்.
- இரட்டை வேடத்தில் ஜொலிக்கும் எம்.ஜி.ஆர்.
- எம்.ஜி.ஆர். படங்களில் அறிவியல் புனைவு
- படகோட்டி மீனவ நண்பன் ஓர் ஒப்பீடு
மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு:
- இண்டியன் உமன் சேஞ்சஸ் அண்ட் சாலஞ்சஸ்
தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு:
- பூ மர நிழல்
- உன்னொடு உரையாடுதல்
- காதலின் மொழி
- திட்டிவாசல் பெண்ணொருத்தி
ஆங்கில நூல்கள்
- Indian Women-Changes and Challenges
- Shade of the Flowering Tree
- Songs of Dryness
- Speaking with You Language of Love and A Lady at the little gate
- kurunthokai
- Ainkurunuru
- Purananuru
- Naladiyar
- Acharakovai
- Kutrala Kuravanji
- Mukuudal Pallu
- Unique Fandom of MGR (எம்.ஜி.ஆர். பற்றிய ஆங்கில நூல்)
உசாத்துணை
- தென்றல் இதழ் கட்டுரை
- செ. ராஜேஸ்வரி சிறுகதைத் தொகுப்பு
- செ. ராஜேஸ்வரி சிறுகதை
- தினகரன் இதழ்க் கட்டுரை
- ராஜேஸ்வரி நூல்கள், பனுவல் தளம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:50:18 IST