under review

செ. சுகுமாரன்

From Tamil Wiki
S.sukumaran.jpg
Sukumaarans.jpg

செ. சுகுமாரன் ( சுகுமாரன் ஜெயசீலன்)(பிறப்பு: ஏப்ரல் 20,1950) எழுத்தாளர், கவிஞர், சிறார் எழுத்தாளர். புகழ்பெற்ற உலக சிறார் நாவல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தோன்றக் காரணமானவர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

செ.சுகுமாரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்லத்துரை, கமலா இணையருக்கு ஏப்ரல் 20,1950-ல் பிறந்தார். சாத்தான்குளம் டி.டி.டி.ஏ புலமாடன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 1967-ல் பள்ளியிறுதி வகுப்பை முடித்தார். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே 1987-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப்பட்டமும், 1989-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், 1990-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப்பட்டமும், 1996-ல் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுகுமாரன் சென்னையில் திருவேற்காடு எஸ்.பி.எம். தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும், தொடர்ந்து தலைமை ஆசிரியராகவும் முப்பதாண்டுகள் பணி புரிந்தார்.

சுகுமாரனின் மனைவி சுசீலா. மகள்கள் சாரா பாரதி யோகானந்த், சோஃபியா கிறிஸ்டோஃபர்.

இலக்கிய வாழ்க்கை

Sukumaranbooks.jpg
Vannathu.jpg
Barathi.jpg

செ.சுகுமாரன் சிறார் இலக்கியம், சிறுகதை, குறுநாவல், கவிதை, நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் சிறார் இலக்கியங்களைப் படைத்தவராகவே அறியப்பட்டார். சிறார் இலக்கியம் அல்லாத 'இன்னொரு ஈடன் தோட்டம்' குறுநாவல்கள் தொகுப்பு, 'ஒரு கூண்டுக்கிளிக்குச் சிறகுகள் முளைக்கிறது' சிறுகதைத் தொகுப்பு இரண்டும் குறிப்பிடத்தக்கவை. 'கனவு நாடு' புலம்பெயர்ந்த அமெரிக்க வாழ்வின் நிறை குறைகளைப் பேசும் நூல்.

சிறார் இலக்கியம்

1991-ல் முதல் நூலான 'நேரம் நல்ல நேரம்' வெளிவந்தது. 50-க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன.

சுகுமாரன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்காக ஜீவா பதிப்பகம் மூலம் 12 நூல்களைப் பதிப்பித்தார். 'தமிழ்க்குழந்தை இலக்கியம்-விவாதங்களும் விமர்சனங்களும்', 'தமிழ்க்குழந்தை இலக்கியம்-அன்றும் இன்றும்' -இரு நூல்களும் சிறார் இலக்கிய வரலாற்று நூல்கள்.

சுகுமாரன் சிறார்களுக்காக தெனாலி ராமன், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் போன்ற சிறுவர் நாடக நூல்கள், பெரியார், பாரதி போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள், சிறுகதைகள், பாடல்கள் எழுதினார்.

மொழியாக்கங்கள்
Sukumaran.jpg

செ.சுகுமாரன் சிண்ட்ரெல்லா(Cinderella), அதிசய உலகில் ஆலிஸ்(Alice in Wonderland) , டாம் சாயர்(Tom Sawyer) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற 12 சிறார் நாவல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றில் எட்டு நாவல்கள் தினமணியின் சிறுவர் மணியில் தொடராக வந்தன.

அமைப்புப் பணிகள்

செ.சுகுமாரன் தமிழ்நாடு சிறார் இலக்கியக் கலைஞர்கள் சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். ஜூன் 2021-ல் தோன்றிய அச்சங்கத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்து, குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவது, குழந்தைகளின் மீது செலுத்தப்படும் வன்முறை, ஒடுக்குமுறை, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக எழுத்து, கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுதல், மரபு, வரலாறு, பொருளியல், அறிவியல், சூழலியல், அரசியல், பண்பாடு, கலைகள் சார்ந்து கடந்த காலம் - சமகாலத்தை வெளிப்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான கலை, இலக்கியப் படைப்புகளைப் படைப்பது, வாசிப்பது, பரவலாக்குவது போன்ற நோக்கங்களை இச்சங்கம் கொண்டுள்ளது.

விருதுகள், பரிசுகள்

  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் நாவல், நாடகம், அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பரிசு (1995-1999)
  • வாசுகி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
  • கணியாழி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம்-சிறந்த நூலுக்கான பரிசு
  • ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு
  • மழலை இலக்கிய மாமணி( பாரதி நற்பணி மன்றம் -2005)
  • நல்லாசிரியர் விருது(2007)
  • பாரதி புகழ் பரப்புநர்(2013)
  • கலி இலக்கியப் பெருமன்றம் அளித்த சிறந்த நூலுக்கான பரிசு(2014)
  • பபாசி வழங்கிய அழ.வள்ளியப்பா விருது(2019)
  • சிறார் நூலரங்கம், சிறார் படைப்பாளர் விருது
  • தமிழ்நாடு அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2021)
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மன்றம்- பாவேந்தர் பாரதிதாசன் விருது (2022)

மதிப்பீடு

செ. சுகுமாரன் தனது சிறார் இலக்கிய நூல்களுக்காக அறியப்படுகிறார். அவரது சிறார் நூல்கள் இனிய, எளிய நடையில் அமைந்தவை. சிறார் இலக்கிய வரலாறு குறித்த அவரது கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. சுகுமாரன் தமிழ்நாடு சிறார் இலக்கியக் கலைஞர்கள் சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். குழந்தைகளுக்கான கலை, இலக்கியப் படைப்புகளைப் படைப்பது, வாசிப்பது, பரவலாக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நூல் பட்டியல்

பெரியோருக்கான நூல்கள்
  • ஒரு கூண்டுக்கிளிக்கு சிறகு முளைக்கிறது(சிறுகதைத் தொகுப்பு)
  • இன்னொரு ஈடன் தோட்டம்(குறுநாவல்கள் தொகுப்பு)
  • வீழ்ச்சி (நாவல்)
  • தமிழ்க்குழந்தை இலக்கியம்-விவாதங்களும் விமர்சனங்களும்(கட்டுரைகள்)
  • தமிழ்க்குழந்தை இலக்கியம்-அன்றும் இன்றும் (கட்டுரைகள்)
  • சொல்லில் வசப்படும் நினைவுகள் (கட்டுரைகள்)
  • கொரோனா புராணம் (கட்டுரைகள்)
சிறார் இலக்கிய நூல்கள்
சிறுகதைகள்
  • நேரம் நல்ல நேரம்
  • வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை
  • கிண்டி வந்தாச்சா
  • கரடியிடம் ஒரு கதை இருக்கிறது
  • வண்டுகுண்டு
  • காய்க்காத அத்திமரம்(இயேசுநாதர் சொன்ன கதைகள்)
  • உண்மையா பொய்யா? (புதிர் கதைகள்)
  • தோ.. தோ. (நாய்களைப் பற்றிய நாடோடிக் கதைகள்)
  • நரி, ஸ்டோரி, சரி(நரிகளைப் பற்றிய நாடோடிக் கதைகள்)
  • மூன்று கரடிகள்
நாவல்
  • நம்பிக்கை இல்லம்
  • சூப்பர் சிவா
  • கடற் கன்னி கயல்
நாடகங்கள்
  • சமத்துவபுரம்
  • தெனாலிராமன் கதை நாடகங்கள்
  • மரியாதைராமன் கதை நாடகங்கள்
  • ஈசாப் கதை நாடகங்கள்
  • பஞ்சதந்திரக் கதை நாடகங்கள்
  • கடலும் குருவியும் நாடகங்கள்
  • பரமார்த்தகுரு கதை நாடகங்கள்
  • பீர்பால் கதை நாடகங்கள்
சிறுவர் வாழ்க்கை வரலாறு
  • தந்தை பெரியாரின் கதை
  • கல்வித்தந்தை காமராசரின் கதை
  • தோழர் ஜீவாவின் கதை
  • காலத்தை வென்றவர்(அண்ணாவின் கதை)
  • மகாகவி பாரதியின் கதை
சிறுவர் கட்டுரை
  • உயிரும் உலகமும்
  • சுடர்முகம் காட்டு
சிறுவர் தொகுப்பு நூல்
  • பாரதி குழந்தை இலக்கியம்
  • குழந்தைகளுக்கு தினம் ஒரு பைபிள் கதை
சிறுவர் பாடல்கள்
  • தங்கச்சிப் பாப்பா
சிறுவர் மொழிபெயர்ப்பு நூல்கள்(ஆங்கிலத்திலிருந்து தமிழில்)
  • நல்லநல்ல நாடோடிக் கதைகள்
  • சிறுவர்கள் விரும்பும் பலநாட்டுக் கதைகள்
  • புதையல் தீவு(சிறார் நாவல்)
  • கருணைத் தீவு (சிறுவர் நாவல்)
  • டாம்சாயரின் சாகசங்கள் (சிறுவர் நாவல்)
  • ஹெய்தி(சிறுவர் நாவல்)
  • ரகசியத் தோட்டம்(சிறுவர் நாவல்)
  • க்ரீன் கேபிளின் ஆன்னி (சிறுவர் நாவல்)
  • மந்திர உலக்கை(நாடோடிக் கதைகள்)
  • மாயமோதிரம்(நாடோடிக் கதைகள்)
  • தவளை இளவரசி (நாடோடிக் கதைகள்)
  • பறக்கும் இளவரசன் (நாடோடிக் கதைகள்)
  • கண்ணுக்குத் தெரியாத தாத்தா (நாடோடிக் கதைகள்)
  • தவளையின் இசைக் கச்சேரி (நாடோடிக் கதைகள்)
  • நூலகத்தில் ஓர் எலி(நாடோடிக் கதைகள்)
  • குட்டி இளவரசி(நாவல்)
  • காகம் ஏன் கறுப்பானது(நாடோடிக் கதைகள்)
  • சிறுவர்களுக்குப் புறநானூற்றுக் கதைகள்
  • தர்ப்பூசணிப் பழம் (நாடோடிக் கதைகள்)
  • தாத்தாவின் மூன்றாவது டிராயர்
  • பாரதி குழந்தை இலக்கியம்
  • சிண்ட்ரல்லா
  • அற்புத உலகில் ஆலிஸ்

உசாத்துணை


✅Finalised Page