செலவு அழுங்கல்(பெருந்திணை)
செலவு அழுங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. இருபால் கூற்றாக அமைந்தது. தலைவன் போதலைத் தவிர்த்தலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நிலவு போல் ஒளிவிடும் வேலினையும் பெரும் மேம்பாட்டினையும் உடைய தலைவன் உயர்ந்த மூங்கில்கள் நிறைந்த வழியில் போகக் கருதிப் பின்னாப் போதலைத் தவிர்த்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நிலவு வேல் நெடுந்தகை நீள்கழை ஆறிடைச்
செலவுமுன் வலித்துச் செல்வதழுங்கின்று(கொளு 17.1)
வெண்பா
நடுங்கி நறுநுதலாள் நல்நலம் பீர் பூப்ப
ஒடங்கி உயங்கல் ஒழியக் - கடும்கணை
வில்ஏர் உழவர் இடர் ஓங்கு மாமலைச்
செல்லேம் ஒழிக செலவு (325)
பொருள்: மணம் கமழும் நெற்றியையுடைய தலைவி நடுங்கிப் பீர்க்கம்பூப் போலப் பசப்பு உற்று மெலிந்து வருந்துதலைத் தவிர்க்கும் வண்ணம், கொடிய அம்பினையுடைய வேடர்கள் இருக்கும் உயர்ந்த மலை வழியில் செல்ல வேண்டாம். போதலைத் தவிர்ப்பாய் நெஞ்சே !'
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 18:59:50 IST