under review

செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம்

From Tamil Wiki

செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் (பொ.யு. 1872-1928) இஸ்லாமியப் புலவர், சூஃபி குரு. ஞானியர் மீது பதங்கள், இன்னிசைப் பாக்கள் நொண்டிச்சிந்து ஆகியவை பாடினார்.

பிறப்பு, கல்வி

செய்கு பூஅலி ஷாஹ்மதார் பொ.யு. 1872-ல் பூஅலி முகம்மது மஸ்தான் (ரலி), பாத்திமா இணையருக்கு மகனாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தில் பிறந்தார். தந்தைவழி நபி இத்ரீஸ் கால்வழி அலீப்னு அபீதாலிப் பரம்பரையில் பானிபட்டில் மறைந்த மகான் பூஅலி கலந்தர் ஷரீபுத்தீன் சந்ததியில் தோன்றினார். பத்து வயதில் தாய் தந்தையை இழந்தார். அதன்பின் மூத்த சகோதரியை மணந்த வங்கன் முகம்மது அபுபக்கர் லெப்பை வீட்டில் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்தார்.

அலாஅலிமுல்பானில் முகம்மில் விஸ்வா அப்துர் ரஹ்மான் ஆலிம் சாகிபு கலீபத்துல் புகாரியா, ஹதீது தப்ஸீர் ஆகியோரிடம் கற்றார். இஸ்லாமிய ஞானங்களை சூஃபி ஹஸ்ரத் மதார் ஆலிம் சாஹிபிடமும், ஹாபிஸ் ஹஸரத் பக்ருதீன் ஆலிடமும் கற்றார். மெய்ஞானி செய்கு முகம்மது லெப்பையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

தனிவாழ்க்கை

செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம், அசன் மீரான் பீவியை மணந்தார். இரு குழந்தைகள்.

ஆன்மிகம்

ஷெய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் சாஹிப் தன் சீடரான கான்சாபுரம் பீர் முஹம்மது ராவுத்தருடன் கீழ்க்கரை சென்று கல்வத்து ஆண்டகையை தரிசித்து ஆசி பெற்று, தன் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார். கல்வத்து நாயகத்தின் பாட்டனர் தைக்கா சாஹிபு அப்பா எழுதிய 'உலூமுத்தீன் மலாயிலு ஸ்ஸாலிகீன கிரந்தம்' என்ற நூலை கல்வத்து ஆண்டகையிடமிருந்து பெற்றார். கல்வத்து ஆண்டகை தன் புதல்வி ஆயிசா நாயகியிடம் இவரை 'கூடப்பிறந்த சகோதரர்' எனக் குறிப்பிட்டார். ஆன்மிக வாழ்வில் பல அற்புதங்கள் செய்ததாக நம்பப்படுகிறது. திருமறை விளக்கங்கள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நூல்கள் இயற்றினார். 'ஞானப்பிரகாசம்' எனும் உரை நடைநூலை எழுதினார். இஸ்முல் அஃளம் ஸெய்தினா அபுல் ஹஸன் அலியிஷ் ஷாதலி ஆண்டவர்களின் மீது பதம் பாடினார். கீழக்கரை கல்வத்து ஆண்டகை மீது இன்னிசை வெண்பாக்கள் பாடினார். குத்புல் அக்பர் ஸெய்தினா அபுல்ஹசன் அலியிஷதலியின் 'ஹிஸபுல் பஷீர் பிரார்த்தனை' நூலை மொழிபெயர்த்தார்.

பாடல் நடை

  • பராபரக் கண்ணி

வேதாந்தத்தின் கருவே விட்டும் விடாலக்கணையே
நாதாந்த சிவபோதமே நட்பே பராபரமே

மறைவு

செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் 1928-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • ஞானப்பிரகாசம்
  • பராபரக் கண்ணி
  • கல்வத்து ஆண்டகை இன்னிசை வெண்பா
  • அபுல் ஹஸன் அலியிஷ் ஷாதலி பதம்

உசாத்துணை


✅Finalised Page