under review

செய்கு தர்வேஸ் மீரானொலி

From Tamil Wiki

செய்கு தர்வேஸ் மீரானொலி (பொ.யு. 1674 - 1710) இஸ்லாமிய தமிழ்ப்புலவர். சூஃபி ஞானி. ஞானிகள், இறைவன் பற்றிய பாடல்கள் பல பாடினார்.

வாழ்க்கைக்குறிப்பு

செய்கு தர்வேஸ் மீரானொலி கன்னியாகுமரி மாவட்டம் சூரங்குடி என்னும் நாவலூரில் 1674-ல் அபுசாலீகினுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் செய்கு மீரான். தர்வேஸ் என்பது சிறப்பு அடைமொழிப்பெயர். அரபு நாட்டிலிருந்து வந்தவர். நாகூர் ஹலரத் ஷாகுல் ஹமீது கேட்டுக் கொண்டதன் பேரில் சூரங்குடியில் பள்ளி ஒன்றை நிறுவினார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு தர்வேஸ் மீரானொலி பாடிய பாடல்கள் பல ஏட்டுச் சுவடியாகவே உள்ளன. முகையத்தீன் 'முனாஜாத்து', 'முகய்யத்தீன் அகவல்', 'தரிசனைப்பத்து', 'தெளஹீது மாலை', 'நாகூரார்புகழ்மாலை' ஆகியவை செய்கு தர்வேஸ் மீரானொலி எழுதிய நூல்களாகக் கிடைக்கின்றன. இவற்றை 'முகையத்தீன் புகழ்' என்ற தலைப்பில் 1967-ல் இரண்டாவது பதிப்பாக நாகர்கோவில் கவிமணி அச்சகத்தார் வெளியிட்டனர். கனியாபுரம் செய்கு அப்துல் ஹசன் சாற்றுகவி வழங்கினார். முகய்யத்தின் அப்துல் காதிர் ஜீலானி பற்றி புகழ்ப்பாடல்கள் பாடினார். நாகூர் ஹலரத் ஷாகுல் ஹமீது ஆண்டகையைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் பாடல்கள் பாடினார்.

பாடல் நடை

என்னைப் படைத்த ஆதி இரணம் நல்கும்
இறையோனே உன்னைப் போற்றுவதற்கு
இன்ன்படி வகை என்று அறியேனே ஏழைக்
கருள்செய்வாய் இணையற்றோனே
முன்னே நீவேறே நான் வேறே முகப்பத்
தொன்றலலோ முதல்வனே
வன்னம் பிறந்தால் நான்நீ என்ற
வழக்கைக் கபூல் செய்வாய் வரிசையோனே

மறைவு

செய்கு தர்வேஸ் மீரானொலி 1710-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முகையத்தீன் முனாஜாத்து
  • முகய்யத்தீன் அகவல்
  • தரிசனைப்பத்து
  • தெளஹீது மாலை
  • நாகூரார்புகழ்மாலை

உசாத்துணை


✅Finalised Page