under review

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Senawang.png

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுங்கை காடுட் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் பதிவு எண் NBD 4080.

பள்ளி வரலாறு

பழையப் பள்ளிக் கட்டிடம்

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது தோற்றுவிக்கப்பட்டது. தோட்டத்தில் பணி புரிந்த இத்தோட்ட மக்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் பயின்று வந்தனர். அப்போது 30 லிருந்து 40 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களே கல்வி கற்பித்தனர்.

ஆரம்பக் கால நிலை

பள்ளியின் நிர்வாகத்தைத் தோட்ட நிர்வாகமே கவனித்துக் கொண்டது. ஆரம்ப காலக் கட்டத்தில் இப்பள்ளியின் கட்டிடம் ஒரு பழைய வீட்டைப் போன்று அமைந்திருந்தது. இப்பள்ளிக் கட்டிடம் தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகவும் இருந்தது. 1946-ல் இப்பள்ளிக் கட்டிடம் இரு வீடுகளாக நிறுவப்பட்டது. 1974 வரை பள்ளியின் தோற்றத்திலும் பள்ளி நிர்வாகத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்பள்ளியின் ஒரு பகுதி தீ விபத்துக்குள்ளானதால் அந்த ஆண்டு 1, 5, 6 வகுப்புகள் காலை நேரப் பள்ளியாகவும் 2,3,4 வகுப்புகள் மாலை நேரப் பள்ளியாகவும் நடத்தப்பட்டன.

புதிய கட்டிடம்

1977-ம் அண்டு புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. இதில் 2 வகுப்பறைகளும் 1 தலைமையாசிரியர் அறையும், 1 மாணவர் கழிப்பறையும் கட்டப்பட்டன. இப்பள்ளியின் கட்டுமானப் பணியின் செலவு ரி.ம 12,500. அவ்வாண்டே இப்பள்ளிக்குத் தண்ணீர் மற்றும் மின்சார வசதியும் கிடைத்தது.

இடமாற்றம்

1983-ல் 'அந்தா ஹோல்டிங்க்ஸ்' இப்பள்ளியின் நிலத்தை வாங்கியதால் இப்பள்ளி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது சுங்கை காடுட் (இன்றைய பள்ளியின் இடம்) பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 6 வகுப்பறைகள், ஓர் அலுவலகம், மாணவர் கழிப்பறை, ஆசிரியர் கழிப்பறை மற்றும் சிற்றுண்டிச் சாலை போன்றவை அடங்கிய பள்ளியாக இப்பள்ளிக் கட்டிடம் நிறுவப்பட்டது. ரி.ம 10,000 மதிப்புள்ள தளவாடப்பொருள்கள் வாங்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் இப்பள்ளியில் 12 ஆசிரியர்கள் பணி புரிந்தனர்.

பள்ளி வளர்ச்சி

1984-ம் ஆண்டிற்குப் பிறகு இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே இருந்தது. இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியில் 1998-ம் ஆண்டு மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன.

2006-ம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 669-க்கு மேல் பெருகியது. எனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம் புதிய கட்டடத்தை நிறுவ முயற்சி செய்தது. வகுப்பறை பற்றாக்குறை காரணமாக 1.4.5.6 வகுப்புகள் காலை நேரப்பள்ளியாகவும், 2,3 வகுப்புகள் மாலை நேரப்பள்ளியாகவும் நடத்தப்பட்டன.

நவீன கட்டிடம்

Senawang 01.jpg

பிப்ரவரி 14, 2008-ல் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மே 2009-ல் பழைய கட்டிடத்தை உடைத்து அதே இடத்திலேயே 4 மாடி புதிய கட்டிடத்திற்கான நிர்மாணிப்பு வேலை தொடங்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்குத் தற்காலிகமாக குடில்களில் கற்பிக்கப்பட்டது. அதுபோலவே, தற்காலிகச் சிற்றுண்டிச்சாலையும் கழிப்பறைகளும் நிறுவப்பட்டன. ஜூன் 2010-ல் பள்ளியின் நிர்மாணிப்புப் பணி நிறைவடைந்தது. இன்று 24 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, நூலகம், அலுவலகம், அறிவியல் அறை, கணினி அறை, சிற்றுண்டிச்சாலை, கழிப்பறை, திடல் போன்ற வசதிகளுடன் இப்பள்ளி இயங்குகிறது.

  • 1897 - 2011 நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி- மை நாடி


✅Finalised Page