செங்குந்த விநாயகர் மாலை
செங்குந்த விநாயகர் மாலை (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு), திருவொற்றியூர் ஆலயத்தில் உறையும் செங்குந்த விநாயகர் மீது பாடப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர் ஸ்ரீபடம்பக்கநாதன்.
வெளியீடு
செங்குந்த விநாயகர் மாலை, செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூலை, 1926-ல், காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவர் பதிப்பித்தார். திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச. சபாபதி முதலியார் இந்நூலை வெளியிட்டார். சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் செங்குந்த விநாயகர் மாலை நூல் அச்சிடப்பட்டது.
நூல் அமைப்பு
செங்குந்த விநாயகர் மாலை நூலில் 31 பாடல்கள் இடம்பெற்றன. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து நூல் இடம்பெற்றது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'செங்குந்த விநாயகனே' என்ற சொல் இடம் பெற்றது.
உள்ளடக்கம்
செங்குந்த விநாயகர் மாலையில் திருவொற்றியூர் விநாயகப் பெருமானின் பெருமைகள் பலவாறாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. பல புராணச் செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
"பல அண்டங்களைத் தன்னுள்ளே அடக்கியவர்; திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரையும் தன்னுள்ளே அடக்கி, பிறகு அவர்களை அவரவர் செயல்களைச் செய்யுமாறு அனுப்புபவர்; அறிவுடையோர்களுக்கு உள்ளொளியாக நிற்பவர்; முதல் பூசையை ஏற்று அருள் செய்பவர்; குருவாக இருந்து வழிகாட்டுபவர்" - என்றெல்லாம் விநாயகப் பெருமானின் பெருமை செங்குந்த விநாயகர் மாலையில் கூறப்பட்டுள்ளது.
பாடல்
வக்ரதுண் டங்கொடு வானுயர் மூவரை வாய்மடுத்தங்
குக்ரபல் லண்ட வுருக்ட்டிக் கன்மத்து ளோங்கவிடுத்
தக்ரமெய்ப் பூசனை யாற்றப் பெறீஇயரு ளண்மிநின்ற
விக்ரம னேயொற்றி யூர்வாழ்செங் குந்த விநாயகனே
நதிபல வுக்குமொ ரம்போதி யென்னவிந் நானிலத்துள்
மதிபல கோடி சமயர்க்கு நீயொரு மாமுதலாயத்
துதிபல சேதனர்க் குள்ளொளி யேமறை சொன்முதலின்
விதிபல வேயொற்றி யூர்வாழ்செங் குந்த விநாயகனே
எண்ணற் கரும்பல வல்வினை யாவு மெனைக்குழுமி
நண்ண வரும்துயர்க் கென்கட வேனவி னாற்பயனும்
மண்ணவ ரெய்த மதகய மாமுகம் வாய்ந்துலவா
விண்ணவர் சூழொற்றி யூர்வாழ்செங் குந்த விநாயகனே
கழையிலம் பூவினைக் கார்முகத் தம்பெனக்காட்டுமதன்
உழைசிறு மானி லுழல்வேனுக் குன்னரு ளொட்டுமதோ
விழைபல கொண்ட விளம்பிடி யார்மய லெய்தலிலார்
விழைதரும் நல்லொற்றி யூர்வாழ்செங் குந்த விநாயகனே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:19:44 IST