under review

சூர்யரத்னா

From Tamil Wiki
சூர்யரத்னா

சூர்யரத்னா (1968) (சூரியரத்னா) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், குழந்தை இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

சூர்யரத்னா சிங்கப்பூரில் 1968-ல் பிறந்தார். ஆங்கில மொழி இலக்கியம் மற்றும் வணிகத் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி (இருமொழி) சான்றிதழ் பெற்றார். லா சா கல்லூரியில் தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களுக்கான நாடகக் கதைப்பயிற்சி சான்றிதழ் பெற்றார்.

தொழில்

சூர்யரத்னா முன்னாள் ஆசிரியை, பதிப்பாசிரியர். தேசிய நூலக வாரியம், தேசிய புத்தக மன்றம், சிங்கப்பூர் பள்ளிகள் ஏற்பாடு செய்த பல பயிலரங்குகளில் பங்கேற்றுள்ளார். பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்காக பயிற்சி நூல்கள், மாதிரி தேர்வுத்தாள்கள் எழுதியுள்ளார். கல்வி அமைச்சிலும் மீடியாகார்ப் நாடகங்களிலும் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

இளம் வயதில் ‘மேற்கே உதிக்கும் சூரியன்’ என்ற நாவலை எழுதியதால் சிங்கப்பூரின் முதல் பெண் நாவலாசிரியை என்று குறிப்பிடப்படுகிறார். கல்வி அமைச்சின் துணைப்பாட கற்றல் வளத்திற்காக அறுபதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை எழுதியிருக்கிறார். தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தில் இவரது சிறுகதை 2013-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மார்ஷல் காவண்டிஷ் நிறுவனத்தின் ‘நகர் மனம்’ தொகுப்பிலும் திரைகடல் தந்த திரவியம் பன்னாட்டுச் சிறுகதைகள் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றன. இந்தியர் பண்பாட்டு மாதம் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியீடு கண்ட ‘புதியவர்களின் சிறுகதைகள்’ தொகுப்பில் பங்களித்துள்ளார். தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி வருகிறார்.

விருதுகள்

  • மாண்ட் பிளாங்க் இளம் எழுத்தாளர்கள் விருது, 1998
  • தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் & முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் கரிகால் சோழன் விருது, 2013
  • சிங்கப்பூர் இலக்கிய விருது (தகுதிச்சுற்று, 2014 & 2016)

நூல்கள்

  • மேற்கே உதிக்கும் சூரியன் (நாவல்)
  • நான் (2013, சிறுகதைத் தொகுப்பு)
  • ஆ! சிங்கப்பூர் அமானுஷ்யக் கதைகள் (2014)
  • பரமபதம் (2014, நாவல்)
  • அறம் (2020, சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Sep-2022, 06:25:56 IST