under review

சுஷில்குமார்

From Tamil Wiki
சுஷில்குமார்

சுஷில்குமார் (பிறப்பு: ஜனவரி 11, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நாஞ்சில் நாட்டை கதைகளமாகக் கொண்டு அதன் மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள், தொன்மங்கள் பற்றிய சிறுகதைகளை எழுதி வருகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், கல்வித்துறை சார்ந்து நிகழும் நுட்பமான கூறுகளைச் சார்ந்தும் கதைகளை எழுதுகிறார்.

பிறப்பு, கல்வி

சுஷில்குமார் ஜனவரி 11, 1984-ல் எஸ்.கே. கோபால் மற்றும் விஜயா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை அரசுப்பள்ளி கன்னியாகுமரியிலும், மேல் நிலைக்கல்வியை அரசு மேல் நிலைப்பள்ளி கொட்டாரத்திலும் பயின்றார். 2001 - 2004-ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2005 - 2007 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் வழி எம்.சி.ஏ பட்டம் பெற்றார். இந்த ஆண்டுகளில் அவர் ஏர்டெல் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும், மைக்ரோசாஃப்ட் நிறுவன தொழில் நுட்ப சேவைப்பிரிவிலும் பணியாற்றினார். 2009-ல் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் பிரிவில் எம்.பில். பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சுஷில்குமார் டிசம்பர் 13, 2013-ல் பகவதியை மணந்தார். மகள்கள் இஷா பாரதி, ஸ்ரீஷா பாரதி. 2011 முதல் ஈஷா வித்யா கிராமப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

சுஷில்குமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு "மூங்கில்" 2021 ஜனவரியில் வெளிவந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "சப்தாவர்ணம்" 2021 டிசம்பரில் வெளிவந்தது. இவருடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தமிழினி, யாவரும், கனலி, வனம், பதாகை போன்ற தமிழ் மின்னிதழ்களில் வெளிவந்துள்ளது. ராகுல் ஆல்வரிஸின் "Free From school" புத்தகத்தை தமிழில் "தெருக்களே பள்ளிக்கூடம்" என்ற பெயரில் தன்னறம் பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். ஆண்டன் செகாவ், கோபோ அபே, பால்ஹூவர் ஆகியோரின் சிறுகதைகளை தமிழில் மின்னிதழ்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறார். கல்வித்துறை, சுற்றுச்சூழல் சார்ந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மின்னிதழ்களில் வெளிவந்துள்ளன. ஜெயமோகன், வைக்கம் முகமது பஷீர், சாரு, எஸ். ராமகிருஷ்ணன், தி.ஜானகிராமன், டால்ஸ்டாய், அன்டன் செக்காவ் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

சுஷில்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான "மூங்கில்" பெரும்பாலாக கன்னியாகுமரி, நாகர்கோவில் என தான் புழங்கிய நாஞ்சில் நாடு சார்ந்தும், அதன் மக்கள், பண்பாடு, பாரம்பரியம், தொன்மம் சார்ந்து அமைந்தது. தொன்மங்களை ஒட்டிய நவீன இலக்கிய ஆக்கங்களை எழுதுகிறார். வரலாற்றுச் சம்பவங்கள், கல்வித்துறை சார்ந்த நுண்மைகள் ஆகியவற்றையும் படைப்புகளில் புனைவுக்குரிய மூலங்களாக எடுத்தாள்கிறார். நவீனச் சிறுகதையில் நாஞ்சில் நாட்டு மரபை தொடர்பவர், நாட்டார் தொன்மங்களை மறுஆக்கம் செய்பவர் என்ற அளவில் கவனிக்கப்படுகிறார்.

விருதுகள்

  • யாவரும் பதிப்பகம் நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப்போட்டி பரிசு.

நூல் பட்டியல்

நாவல்
  • சுந்தரவனம் (2023)
சிறுகதைத் தொகுப்பு
  • மூங்கில் (2021)
  • சப்தாவர்ணம் (2021)
  • அடியந்திரம் (2022)
மொழிபெயர்ப்பு
  • தெருக்களே பள்ளிக் கூடம் (2021)

இணைப்புகள்


✅Finalised Page