under review

சுரத்துய்த்தல்

From Tamil Wiki

சுரத்துய்த்தல் வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் கவர்ந்த ஆநிரைகளைச் சுரவழியில் அழைத்துவருவதைக் கூறும் துறை.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கவர்ந்த ஆநிரைகளைச் சுரவழியில் வருத்தமுறா வண்ணம் கொண்டு செலுத்துவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 அரும் சுரத்தும் அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று (கொளு 1.14)

வெண்பா

புல் மேய்ந்து அசைஇப் புணர்ந்து உடன் செல்க என்னும்
வில் மேல் அசைஇய கை வெல்கழலான் - தன்மேல்
கடுவரை நீரில் கடுத்து வரக் கண்டும்
நெடுவரை நீழல் நிரை (11)

பொருள்: வில்மேல் வைத்த கையுடன், கழலணிந்த கால்களையும் உடைய வெட்சி மறவன், தன்மேலே செங்குத்தான மலையிலிருந்து வீழும் அருவிநீரின் வேகத்துடன் கரந்தையார் எதிர்த்து வருவதைக் கண்டும், 'இவ் ஆநிரைகள் நெடிய மலைச்சரிவில் புல்லைமேய்க்க வைத்து இளைப்பாற்றி பாதுகாப்புடன் கூட்டிச் செல்க' என்று, தன் ஏவலாளருக்குக் கட்டளை இட்டான்.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:13:19 IST