under review

சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
சுங்கை ரம்பை 1.jpg

சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூரில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி பெஸ்தாரி ஜெயா எனும் பகுதியில் உள்ள சுங்கை ரம்பை தோட்டத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளியாகும். 2023-ல் நூறு ஆண்டுகளை நிறைவு செய்தது. பாதி அரசு உதவி பெறும் பள்ளி.

வரலாறு

பழையக் கட்டடம் (1950)

ஆரம்பக்காலக்கட்டத்தில் சுங்கை ரம்பை தோட்டத்தில் டிவிஷன்களுக்கேற்ப தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. டிவிஷன் 1 தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியான 3C தீம்பாரிலும் டிவிஷன் 2 பகுதியிலும் தொழிற்சாலை டிவிஷனிலும் தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன.

3C தீம்பாரில் அமைக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியில் 30 மாணவர்கள் பயின்றனர். பி. கே. நடேசன் டிவிஷன் 1 பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். டிவிஷன் 2-ல் அமைந்திருந்த தமிழ்ப்பள்ளியில் சுமார் 15 மாணவர்கள் இருந்தனர். டிவிஷன் 2-ன் தலைமையாசிரியர் திரு. பழனிவேலு. தொழிற்சாலை டிவிஷனில் இயங்கிய தமிழ்ப்பள்ளியில் சுமார் 12 மாணவர்கள் கல்வி கற்றனர். தொழிற்சாலை டிவிஷனில் உள்ள தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகத் திரு. பொன்னுசாமி பணியாற்றினார்.

1923-ல் தோட்ட நிர்வாகம் 2 கட்டடங்களைத் தோட்ட மையப் பகுதியில் கட்டிக் கொடுத்து, அக்கட்டடங்களில் 3 பகுதிகளில் தனித்து இயங்கிய தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைத்தது. டிவிஷன் 2 பகுதியில் அமைந்திருந்த ஓர் ஆயாக் கொட்டகையும் தமிழ்ப்பள்ளிக்கூடமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த மூன்று கட்டடங்களிலும் மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். தோட்ட நிர்வாகத்தின் முழுப்பார்வையில் இப்பள்ளி சிறப்பாக இயங்கியது.

A டிவிஷன் மாணவர்களும் தலைமையாசிரியரும்

ஒருங்கிணைக்கப்பட்ட சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குத் திரு.பி. கே. நடேசன் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1923-ல் இப்பள்ளியில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.

பள்ளி வாரியக் குழு

1960-ம் ஆண்டு சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய திரு. நா. சீத்தாபதி பள்ளிக்கான வாரியக் குழு ஒன்றை உருவாக்கினார். பள்ளி மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பள்ளி வாரியக் குழுவில் தோட்ட மேலாளர்கள், கங்காணிமார்கள், பெற்றோர்கள் ஆகியோரும் இடம்பெற்றனர்.

இன்றைய நிலை

சுங்கை ரம்பை 4.jpg

நகர வளர்ச்சியினால் சுங்கை ரம்பை தோட்டத்தைவிட்டு மக்கள் வெளியேறத் தொடங்கினர். இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்றும் சுங்கை ரம்பை தோட்டத்தில் இயங்கி வருகின்றது. குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி என்ற பிரிவில் சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).


✅Finalised Page