under review

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளிச் சின்னம்

தேசிய வகை சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தென் பிறை மாவட்டத்தில் ஏறத்தாழ 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளி. 130 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் பதிவு எண் PBD4034.

வரலாறு

சுங்கை பாக்காப் சிற்றூரில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வந்த போதிலும் அங்கு தமிழ்ப்பள்ளி ஒன்று அமையாதது அவ்வூர் மக்களுக்குப் பெரும் குறையாக இருந்தது. அவ்வட்டாரத்தில் சமூக சேவைகள் செய்து வந்த மருத்துவர் சோமசுந்தரம் தன் முயற்சியில் சுங்கை பாக்காப்பில் ஒரு தமிழ்ப்பள்ளியை அமைக்க முடிவுசெய்து தன் சீன நண்பர்களின் உதவியோடு கீ கொங்சி குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு சிறு பலகை கட்டிடத்தை எழுப்பி சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளியை தொடங்கினார். முதல் கட்டமாக முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளியாக அது செயல்பட்டது. பள்ளி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 61 மாணவர்கள் இப்பள்ளியில் பயில பதிந்து கொண்டனர். திரு வீரபுத்திரன் இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் பணியேற்றார். அவருக்குத் துணையாக மூன்று ஆசிரியர்கள் பணியாற்றினர்.

மார்ச் 12, 1954-ல் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மலேசியா வந்த போது சுங்கை பாக்காப் சிற்றூரில் அமைந்துள்ள இப்பள்ளிக்கும் வருகை தந்தது வரலாற்று பதிவேட்டில் பதியப்பட்டது.

உருமாற்றம்

சுங்கை பாக்காப்.png

1950-ம் ஆண்டிற்குப் பிறகு தலைமையாசிரியர்களின் முயற்சியால் பள்ளிக்கு புதிய கட்டிடம், கழிப்பறை, ஆசிரியர் அறை, சிற்றுண்டிச்சாலை, கருவூலமையம், கார் நிறுத்துமிடம் போன்றவை உருவாக்கப்பட்டன. ஆயினும் இட நெருக்கடியால் பள்ளியில் இருந்த சிறு திடலில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. பள்ளிக்கு வெளியே இருந்த காலி இடம் மாணவர்களின் விளையாட்டு மைதானமாகப் பயன்பட்டது.

இடமாற்றம்

தனியார் நிலத்தில் அமைந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைக் காலிசெய்யும்படி நில உரிமையாளர் நெருக்குதல் கொடுக்கத் தொடங்கிய பிறகு 2010-ம் ஆண்டு முதல் இப்பள்ளியை இடமாற்றும் முயற்சிகள் தொடங்கின. 2015-ல் அப்போதைய கல்வி துணையமைச்சர் சி.கமலநாதனின் முயற்சியில் பகுதிஅரசு உதவி பெரும் இப்பள்ளி முழு அரசாங்க பள்ளியாக மாற்றம் கண்டது. அதோடு புதிய பள்ளி கட்டுவதற்கு 4.5 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டது. மத்திய அரசு புதிய பள்ளி கட்டுவதற்கு 3.5 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியது. ஆயினும் அரசு மாற்றம் பள்ளி வாரியக்குழு மாற்றம் என பல்வேறு காரணங்களால் கட்டிடம் கட்டும் பணிகள் மந்தமாகின. கட்டிடத்தின் தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் நிதிப் பற்றாகுறையை எதிர்நோக்கியதால் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தலைமையாசிரியர் பட்டியல்

திரு. வீரபுத்திரன் 1948 - 1976
திரு. சுப்பிரமணியம் 1976 - 1978
திரு இராஜேந்திரன் 1979 - 1980
திரு. அ. அர்ஜுனன் 1980 - 1995
திரு. பாண்டியன் 1995 - 1997
திரு கிருஷ்ணா 1997 - 2002
திரு விவேகானந்தன் 2002 – 2004
திரு. கருப்பையா 2004 - 2007
திருமதி மனோன்மணி 2007 – 2010
திருமதி சுமதி 2010- 2015
திரு, வீ. குணசேகரன் 2015- 2018
திரு லோ. முருகன் 2018 - 2022
திரு. சக்திவேல் 2022- 2023
திருமதி சந்திரவதனி 2023-

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Sungai Bakap
Jalan Badak Mati
14200, Sungai Jawi
Pulau Pinang, Malaysia

உசாத்துணை

  • பள்ளி இதழ்


✅Finalised Page