under review

சுகந்தி சுப்பிரமணியன்

From Tamil Wiki
சுகந்தி சுப்பிரமணியன்

சுகந்தி சுப்பிரமணியன் (இறப்பு: பிப்ரவரி 11, 2009) தமிழ்க்கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை. 1984-ல் சுப்ரபாரதிமணியனை சுகந்தி மணந்தார். திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் வாழ்ந்தார். இரு மகள்கள். ஸ்ரீமுகி மற்றும் சுபமுகி.

இலக்கிய வாழ்க்கை

சுகந்தியை ஒரு மனச்சிகிச்சையாக கவிதை எழுதப் பழக்கினார் கணவர் சுப்ரபாரதி மணியன். சுகந்தி குறிப்பிட்ட மனநிலையில் பக்கம் பக்கமாக எழுதினார். பெரும்பாலானவைகள் மனப்பிரம்மைகள், முறையீடுகள் சார்ந்தவை. தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ளவை இவருடைய படைப்புகள். அவற்றில் சிலவற்றை சுப்ரபாரதிமணியன் கவிதை வடிவ ஒழுங்குக்குக் கொண்டுவந்து 1988-ல் அன்னம் பிரசுரம் வழியாக பிரசுரித்தார். "புதையுண்ட வாழ்க்கை" என்ற தலைப்பில் அவரின் முதல் கவிதைத் தொகுப்பை கவிஞர் மீரா வெளியிட்டார். இரண்டாம் கவிதைத் தொகுப்பான "மீண்டெழுதலின் ரகசியம்"-ஐ தமிழினி வசந்தகுமார் வெளியிட்டார். சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. இவருடைய மறைவுக்குப் பிறகு அவரது வெளிவராத கவிதைகள், சிறுகதைகள், டைரிக் குறிப்புகளை ஆகியவற்றைச் சேர்த்து மொத்த தொகுப்பாக 'சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்' என்ற பெயரில் டிஸ்வரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்

"இதுவரைக்கும் ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழியைத்தான் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுடைய மொழியாக இதை மாற்றுவதற்குப் பெரிய முயற்சி எதுவும் இல்லை. ரொம்பக் குறைவான முயற்சிதான் நடந்திருக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு. அப்படியான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் சுகந்தி சுப்பிரமணியன்" என கவிஞர் சுகுமாரன் மதிப்பிடுகிறார்.

"சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகியல் மொழி வெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதை வடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அக வெளிப்பாட்டை சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசக மனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின. அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை தன்னைக் கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை. சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்." என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

"அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்லது பிறரது அனுபவங்களின் தொகுப்புதான்" என சுப்ரபாரதிமணியன் கருதினார்.

"சுகந்தியின் கவிதைகளின் தனித்துவம், ஒரு மாபெரும் புரட்சியைக் கூட தாழ்ந்த தொனியில் சொல்வது. ஒரு சாதாரண பெண் காய்கறி நறுக்கும்போது பகிரும் விஷயத்தைப் போல் சுகந்தி தன் கவிதைகள் வழியாக பெண்ணின் பிரச்சினைகளைப் பகிர்ந்திருக்கிறார்." என மண்குதிரை மதிப்பிடுகிறார்.

மறைவு

தொடர்ந்த மனநோய் சிகிச்சையில் இருந்தார். இருதயக் கோளாறால் பிப்ரவரி 11, 2009-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • புதையுண்ட வாழ்க்கை (அன்னம்)
  • மீண்டெழுதலின் ரகசியம் (தமிழினி)

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page